மகாதீர் அம்னோவில் நுழைந்தால் பிரதமர் அனுவாரிடம் ஆட்சி ஒப்படைப்பாரா??

>> Saturday, September 13, 2008


பிரதமர் அப்துல்லா அகமது படாவி தற்போது தன் சொந்த ஆட்களினாலேயே குறிவைக்கப்பட்டுள்ளார். மலாய் இனத்தவரின் ஒற்றுமையை வலுப்படுத்தி, 16 செப்டம்பர் ஆட்சி மாற்றம் நடைப்பெறுவதைப் தடுப்பதற்காக தீட்டப்பட்ட சதித் திட்டங்கள், தற்போது இனங்களுக்கிடையிலான பூசல், அம்னோவிற்கும் இதர கூட்டணி கட்சிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் என்று உருமாறி நிற்கின்றன. பாரிசான் உச்ச மன்றக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பி.பி.பி கட்சித் தலைவர் கேவியசு நிருபர்களிடம், "என் பதினைந்து வருட அரசியல் அனுபவத்தில் இதுதான் பாரிசான் சந்தித்த மிகவும் மோசமான ஒரு நிலையாகும்.." என்று கருத்துரைத்துள்ளார்.

ஆம், தற்போது அப்துல்லா அகமது படாவியை பிரதமர் பதவியைக் கைவிடக் கோருவது அம்னோ மட்டுமல்ல, இதர பாரிசான் கூட்டணிக் கட்சிகளும்தான். தற்போது துன் மகாதீர் மீண்டும் அம்னோவிற்குத் திரும்ப சம்மதித்திருப்பது, படாவியின் பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. மகாதீர் அம்னோவில் மீண்டும் இணைவதைப் பற்றி அண்மையில் நிருபர்கள் படாவியிடம் கருத்துரைக்கக் கேட்ட போது அவர் வாயடைத்து போயிருந்தார். சரியாக அவரால் பதில் கூற முடியவிலை.


அனைத்தும் திட்டமிட்டப்படியே நடைப்பெறுகின்றன. உண்மையில், படாவியை பதவி இறக்கம் செய்யும் திட்டத்தில், புக்கிட் பெண்டேரா அம்னோ தலைவர் அகமது இசுமாயிலும் சம்பந்தப்பட்டுள்ளார். அகமது இசுமாயில் சீனர்களை, "அமெரிக்க யூதர்களைப் போல் நடந்துக் கொள்ள வேண்டாம்!" என்று இனவாதத்துடன் பேசிய அதே நாளில், சிலாங்கூர் மாநில முன்னால் மந்திரி புசார் கீர் தோயுவும் தமது வலைப்பதிவில், " அப்துல்லா தான் வகிக்கும் பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக இறங்காவிட்டால் மே 13 இனக்கலவரம் மீண்டும் வெடிக்கும் வாய்ப்புள்ளது" என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். அகமது இசுமாயிலும் கீர் தோயோவும் இனவாதத்தைத் தூண்டுவதுபோல் கருத்துரைத்திருப்பது ஒரு திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது. நிருபர் கூட்டத்தைக் கூட்டி சீனர்களை வசைப்பாடுவதற்கு ஒரு நாள் முன்னதாக, பிரதமர் அப்துல்லாவைச் சந்தித்த அகமது இசுமாயில் சீனர்களைப் பற்றி தாம் கூறிய கருத்தை மாற்றிக் கொள்வதாகக் உறுதியளித்துவிட்டு, மறுநாளே தாம் கூட்டிய நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் சீனர்களைப் பற்றி முன்பு கூறியதைவிட இன்னும் அதிகக் கேவலமாகப் பேசியிருந்தார். இவரின் இத்தகைய நடவடிக்கை படாவிக்கு அதிர்ச்சியையே கொடுத்திருந்தது. இதன்வழி மக்களின் பார்வைக்கு, அகமது இசுமாயிலின் இனவாதக் கருத்துக்கு அடிக்கோலிட்டவரே படாவிதான் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இதற்கடுத்தாற்போல், திட்டமிட்டப்படியே முகிதீன் யாசின் மகாதீர் மீண்டும் அம்னோவில் இணைவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். முக்ரீசு மகாதீரும் தாம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார். அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் அகமது இசுமாயிலை மூன்று ஆண்டுகால இடைநீக்கம் செய்வதாக முடிவெடுத்தப்பின், அகமது இசுமாயில் நிருபர் சந்திப்புக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்தார். இச்சந்திப்புக் கூட்டத்தில் அகமது இசுமாயில் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான், அதாவது படாவியைக் கவிழ்க்க திட்டம் தீட்டியவர்களுள் ஒருவர். தண்டனை கொடுக்கப்பட்ட ஒருவரின் நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் அம்னோவின் தலைமைச் செயலாளருக்கு என்ன வேலை? கீர் தோயோவும் தெங்கு அட்னானும் மகாதீரின் சகாக்கள் என்பதை அப்துல்லா அச்சமயம் கவனிக்கவில்லை போலும்.. படாவியை இறக்கிவிட்டு மகாதீரை மீண்டும் அம்னோவில் கொண்டு வருவதன் மூலம், வீ.கே லிங்கம் ஒளிப்படக்காட்சி விவகாரத்தில் தன் பெயரும் மகாதீரின் பெயரும் அடிப்படுவதை எப்பாடுபட்டாவது துடைத்துக் கொண்டு தப்பித்துவிட வேண்டும் என்பது தெங்கு அட்னானின் விருப்பமுமாகும்.

அண்மையில் பல இனவாதக் கருத்துகள் சூடாகப் பேசப்பட்டதற்குப் பின்னனியாகச் செயல்பட்டு வந்தது மகாதீர்தான் என்ற உண்மையை யாரும் எதிர்ப்பார்த்திருக்கவே மாட்டோம். தற்போது மகாதீரால் படாவிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த இனவாத வியூகம் ஏற்கனவே முதல் பிரதமரின் மீதும் மகாதீர் பயன்படுத்தியுள்ளார். துங்கு அப்துல் ரகுமான் மகாதீரை அம்னோவிலிருந்து நீக்கிய சமயம், துங்கு மீது மகாதீர் பலவகையான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்ததன் வழி அம்னோ உறுப்பினர்களிடையே இனவாத உணர்வு தூண்டப்பெற்று அவரது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டார். இதனால்தால் மகாதீரை மகா தீரனான மலாய்க்காரன் என்று அனைவரும் எண்ணினர். ஆனால் அன்று இருந்த சூழ்நிலை வேறு, இன்றுள்ள சூழ்நிலை வேறு என்பதனை மகாதீர் உணர்ந்துக் கொள்ளவில்லை. மகாதீரின் ஒவ்வொரு நடவடிக்கையும் இன்று நம்மால் நுகர முடிகிறது. மகாதீர், தெங்கு அட்னான், கீர் தோயோ, அகமது இசுமாயில் அனைவருமாகச் சேர்ந்து பினாங்கு அம்னோவை சதி வலையில் சிக்க வைப்பதன் வழி படாவி பதவி துறப்பதற்கு பல கோணங்களிலிருந்து அழுத்தங்கள் வரும் என்பது அவர்களுடைய திட்டமாகும். எந்த ஒரு வழியாயினும் சரி, அது இனவாதத்தைத் தூண்டிவிடும் செயலாக இருந்தாலும் சரி, படாவியை உடனடியாக பதவி துறக்க வைப்பதே அவர்களின் எண்ணமாகும். பாரிசானின் கூட்டணிக் கட்சிகளை எப்படியோ மகாதீர் தன் வழிக்கு திருப்பிவிட்டதனால், நேற்று நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் படாவி வாயடைத்துப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மகாதீரும் அவரின் சகாக்களும் செயல்படுத்திய சதித்திட்டம் என்பது படாவி உணர்ந்திருக்கிறார். இது மகாதீருக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

படாவி ஆட்சியை அன்வாரிடம் ஒப்படைப்பாரா?

தற்சமயம் மகாதீரின் படை படாவியை அடியோடு வேரறுப்பதில் முக்கால்வாசி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், படாவி தன் மகனுடனும் மருமகனுடனும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார். ஒருவேளை படாவியை பதவி துறக்கச் செய்வதில் மகாதீர் வெற்றிப் பெற்றுவிட்டால், நிச்சயம் படாவியின் நிலைமையும் கைரி சமாலூதீன் நிலைமையும் அதோகதிதான். மகாதீர் வெகுநாட்களாகவே படாவியின் மீதும், அதுவும் குறிப்பாக கைரியின் மீதும் பழிதீர்க்கும் எண்ணத்தை கொண்டுள்ளார். படாவிக்கு மகாதீரின் பழிவாங்கும் எண்ணத்தைப் பற்றி நன்றாகவே தெரியும். அனுவாரை வேரறுத்ததுபோல் தம்மையும் தன் மருமகனையும் நிச்சயம் மகாதீர் பழி வாங்கியே தீருவார் என்று படாவி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

படாவிக்கு தற்போது ஒரே பாதுகாப்பான வழி என்றால் அனுவாரிடம் அடைக்கலம் புகுவதுதான். கைரியும் ஒருவேளை அனுவாரின் கூட்டணியில் சேருவதற்கு சமையல் கட்டு வழி நுழைந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஒருவேளை கைரி ஆட்சியை அனுவாரிடம் ஒப்படைத்து, மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு தனக்கும் தன் மாமனாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. படாவியும் கைரியும் தங்களது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள இது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்.

அம்னோவில் இருக்கும் வரை யாரும் அரசியல் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். படாவியின் 2010-இல் பதவி ஒப்படைப்புத் திட்டத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்த முகிதீன் யாசின், இப்பொழுது படாவியை பதவி துறக்க அழுத்தம் கொடுப்பது இதற்கு ஒரு நல்ல உதாரணம். முகிதீன் யாசின் மகாதீர் குழுவுடன் இணைந்துக் கொண்டு இந்நோன்பு மாதத்தில் படாவியின் மீது 'கெரில்லா' போர் தொடுத்திருப்பதனால் வருகின்ற அக்டோபர் மாத கட்சி தேர்தலில் குழப்பங்கள் எழுவதற்கு வாய்ப்பு மிக அதிகமாகத் தெரிகிறது.

தற்போது படாவிக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடிய ஒரே ஆள் அனுவார்தான். ஒருவேளை அனுவார் பிரதமரானால் படாவியின் அரசியல் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கக் கூடும். அடுத்த வாரம் தொடங்கி நாம் அனைவரும் மலேசிய அரசியலில் இதுவரைக் காணாத பல்வேறு சுவையான நாடகங்களைக் காணவிருக்கிறோம். நண்பன் எதிரியாவான், எதிரி நண்பனாவான். இப்பொழுது அனுவார் கையில் உள்ள பகடைக் காய்தான் பலருக்கு வாழ்வும் சாவும். சரியான நேரத்தில் அவர் யாருக்கு 'செக் மேட்' வைக்கிறார் என்று பார்ப்போம்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP