"ஓலைச்சுவடி" - ஓராண்டு நிறைவு..
>> Monday, September 29, 2008
இன்று ஓலைச்சுவடிக்கு ஒரு வயதுப் பிறந்தநாள். இந்த ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் நான் சந்தித்த மனிதர்களையும் சவால்களையும் சற்று நேரம் எண்ணிப் பார்க்கிறேன்..
கண்மூடி கண் திறப்பதற்குள் இம்மாய உலகில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.. குறிப்பாக மலேசிய தமிழர்களின் சிந்தனையில் ஒரு புரட்சி உண்டாகும் என்று கனவிலும் கருதாதக் காலம் அது. எப்பொழுது தமிழர்களின் வழிப்பாட்டுத் தளங்கள் உடைக்கப்பட்டதோ, அதனைத் தட்டிக் கேட்கச் சென்ற பொதுமக்களும் வழக்கறிஞர்களும் அடிவாங்கினார்களோ அன்றுதான் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் பிறந்தது.
அச்சமயம் இண்ட்ராஃப் என்ற இயக்கத்தை பற்றி அறிந்திராத காலம். புத்ராசெயாவில் பிரதமர் அலுவலகத்தின் முன் 5000 தமிழர்கள் ஒன்றுதிரண்டு மனு கொடுத்தார்கள் என்ற அளவில்தான் செய்தி தெரியும். அதன் சாரம்சம் அன்று தெரியாது.
ஆனால் தொடர்ச்சியாக பல ஆலயங்கள் உடைபடும்போதுதான் என் எழுத்திற்கு இண்ட்ராஃப் எனும் இயக்கம் உரமாக அமைந்தது. அந்த காலக்கட்டத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது, ஏன் அனைத்து மலேசியத் தமிழர்களாலும் மறக்க முடியாது. பல நூற்றாண்டுகளாய் அந்நிய சத்திகளின் பிடியில் அடிமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த தமிழர்களின் உண்மையான போராட்ட குணத்தை அப்பொழுது காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்தது. போராட்ட குணம் என்பதெ நம் மரபணுக்களில் ஆணியடிக்கப்பட்டுவிட்ட ஒரு சாசனம்தானே.
அன்று திரட்டப்பட்ட 'மக்கள் சக்தி' எனும் மாபெரும் அணியின் தாக்கத்தினால் பலர் தியாகிகளாயினர், போராளிகளாயினர், அதே வேளையில் என்னைப் போன்ற பலரும் எழுத்தாளர்கள் ஆயினர். 'மக்கள் சக்தி' ஏற்படுத்திய சுதந்திர அலை ஒவ்வொரு மலேசியத் தமிழ் குடிமகனையும் எழுத்தாளனாக்கியது. சனநாயகத்தின் விளிம்பில் கருத்துக் களங்கள் விரிவடைந்தன. சுதந்திர வாசகங்கள் முரசுக் கொட்டி விண்ணைப் பிளந்தன.
எழுத்துகளில் மட்டும் வீரத்தையும், போராட்டத்தையும், விழிப்புணர்வையும் காட்டினால் போதுமா, களத்தில் இறங்கி போராடினால்தானே அது உண்மை போராட்டமாக இருக்கும் என்ற சிந்தனையின் தூண்டுதலால், களத்திலும் இறங்கி காவல்த்துறையின் பிடியில் சிக்கிய அந்த நினைவுகள் என்றுமே சுகம் தரும் நினைவுகளாகவே மனதில் குடிகொண்டிருக்கின்றன. தொடர்ந்து போராட வேண்டும் என்ற உணர்ச்சி மட்டுமே விஞ்சி நிற்கிறது.
இந்த ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் பல மறக்க முடியாத சம்பவங்களை சம்பாதித்துக் கொண்டேன். நல்ல நண்பர்கள் வரமாகவும், துரோகிகள் நல்ல பாடங்களாகவும் எனக்கு வந்தமைந்தார்கள். நான் விபத்திற்குள்ளாகி இருந்த சமயத்தில் ஓடோடி வந்து உதவி செய்த பல நல்ல உள்ளங்களையும், விரைவில் நலம் அடைய ஆசி கூறி தன்னம்பிக்கை ஊட்டிய பலரையும் இக்கணம் நினைத்துப் பார்த்து நெகிழ்கிறேன். பதிவு எழுதுவது வெட்டி வேலை என்றும், அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்று கருதுவாரும் உளர். ஆனால், என் ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் இழந்ததைவிட பெற்றுக் கொண்டதே அதிகம். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று எனும் நியதி உலகின் மாற்றமுடியாத விதி. நான் இழந்தது என் நேரங்களை மட்டும்தான், ஆனால் அதன்வழி எனக்குக் கிடைத்ததோ சுவையான அனுபவங்கள், வாழ்க்கைப் படிப்பினைகள், நல்லோர் நட்பு என என்னைச் சுற்றி ஒரு நட்பு வட்டாரம். இது தொடர வேண்டும்...
இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எனக்கு ஆக்கவழிகளைக் காட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி கூறுவது என் கடமையாகும். அதேவேளையில் என் எழுத்துகளின் வழி சிலரின் மனங்களைக் காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியதும் என் கடமையாகிறது. ஆனால் இந்த மன்னிப்பு நம் சமுதாயத்தைக் கூறுபோடும் துரோகிகளுக்கு அல்ல. மற்றபடி இதுநாள்வரையில் "ஓலைச்சுவடி"க்கு பல வகையில் ஆதரவு கொடுத்து வந்த வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் இவ்வேளையில் எனது நன்றிகளைக் கூறிக் கொள்வதோடு, வாசகர்கள் அளிக்கும் ஊக்கமே எங்களுக்குச் சிறந்த ஊட்டச் சத்து மருந்து என்றியம்பி மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
போராட்டம் தொடரும்...
9 கருத்து ஓலை(கள்):
வாழ்த்துக்கள்... நல்லா அடிச்சி ஆடுங்க... கேக் ஏதும் வெட்டலயா?
தொடர்ந்து ஓராண்டு எழுதியதற்கு மகிழ்ச்சி; தொடர்ந்து எழுதுங்கள்; இன்னும் பல ஆண்டு நிறைவுகளைக் காணவேண்டும்.
வாழ்த்துகள்; வாழ்க!
என்னுடைய வாழ்த்துகளும்!!
ஓலைச்சுவடியின் ஓராண்டு நிறைவில் தங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்.
ஓலைச்சுவடியின் ஓராண்டுப் போராட்டம் எளிதான ஒன்றல்ல!
மலேசியத் தமிழரின் வீர போராட்ட உணர்வுகளை ஒவ்வொரு அங்குலமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது 'ஓலைச்சுவடி'.
உண்மையில், இன்றையத் தமிழ் மக்கள் போராட்டத்தை நாளையத் தலைமுறைக்கும் சொல்லவிருக்கும் வரலாற்று ஆவணம் 'ஓலைச்சுவடி'.
இந்த ஓராண்டில் எத்தனை எத்தனை செய்திகளை ஓலைச்சுவடி எழுத்து, ஒலி, காட்சி என பல வடிவங்களில் கொடுத்துள்ளது! அப்பப்பா பெரிய சாதனை ஐயா!
நாட்டில் வரும் அச்சு ஊடகங்கள் நமது உரிமை போராட்டத்திற்கு பெரும் வலிமை சேர்த்தது போலவே, ஓலைச்சுவடி ஒரு மாற்று ஊடகமாக; மின்னியல் ஊடகமாக இருந்து உடனுக்குடன் செய்திகளைக் கொடுத்திருக்கிறது. தாய்தமிழ் மொழியில் தமிழன் போராட்டத்தைச் சொல்லியுள்ளது.
மொழி, இன, சமய, சமுதாய, நாட்டு நலனுக்காகத் தன்னையே ஒப்புக்கொடுத்து விட்டவர்கள் ஒரு போராளிக்கு நிகரானவர்கள்.
இனிய நண்பர் சதீசு அவர்களே, நீங்களும் ஒரு போராளியே என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
சதீசு ஒரு வலைப்பதிவர் என்ற அளவில் மட்டுமே பலர் நினைக்கலாம். ஆனால், இந்த இனத்தையும் மொழியையும் உண்மையாகவே நேசிப்பவர்கள் சதீசை அடையாளம் கண்டுகொள்வார்கள். உள்ளத்தில் ஏற்றிக்கொள்வார்கள்.
நாளைய மலேசியத் தமிழ் - தமிழர் வரலாற்றில் ஓலைச்சுவடிக்கு நிச்சயம் இடம் உண்டு.
ஓலைச்சுவடி தன் இன மீட்பு பணியை இன்னும் தெளிவாக வடிமைத்துக்கொண்டு செப்பமாகச் செயல்பட வேண்டும்.
தாழ்ந்திருக்கும் இந்தத் தமிழினம் உயருவதற்கு அதற்கு அறிவையும், உணர்வையும், மொழியின மரபையும் எடுத்துக்காட்ட வேண்டும். அதில் ஒரு பகுதி வேலையை ஒலைச்சுவடி சிறப்பாகச் செய்கிறது. அந்த வேலை தொடரட்டும்!
நண்பர் சதீசு, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்!
இனிய நண்பர் சதீசு அவர்களுக்கு வணக்கம்
ஓலைச்சுவடியின் வழி மலேசியத்தமிழனின் மரணஓலத்தை அடிக்கடி படம் பிடித்துக்காட்டும் தங்களின் இப்பணி ஒரு இனத்தின் வரலாற்றுப் பணி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன். தொடர்ந்து இனத்திற்காகவும் மொழிக்காகவும் பாடாற்றுங்கள் தமிழன்னை நம்மை கண்டு கொள்வாள்.
தமிழுறவுடன்
கோவி.மதிவரன்
ஓராண்டில் நீ
ஓய்வின்றி எழுதிய
ஓலைகள் எத்தனையோ?
ஓராண்டில் நீ
உறங்காமல் இருந்த
இரவுகள் எத்னையோ?
இனவிடுதலை ஒன்றே
இனிவேண்டும் என்றே
ஓலைகள் வடிக்கும்
வேலைகள் முடித்தாய்!
உரிமைப் போரின்
உண்மைகள் அறிய
உறவாய் இருந்து
உதவிகள் செய்தாய்!
தமிழனை எழுதினாய்!
தமிழனாய் எழுதினாய்!
தமிழால் எழுதினாய்!
தமிழனுக்காக எழுதினாய்!
வரலாறு நாளை
விடிகின்ற போது
வெள்ளியாய் வானில்
நின்னொளி வீசும்!
தமிழினை உணர்ந்து
தெளிவினைக் கண்டு
பிறமொழி தவிர்க்கும்
பெரும்பணி கொண்டாய்!
நின்மொழி நாளை
தூய்தமிழ் பேசும்
தமிழுயிர் உம்முள்
துடிக்கும்! துடிக்கும்!
ஓலைச்சுவடி பல்லாயிரம் பதிவுகள் பதிக்க என் வாழ்த்துக்கள்!
தமிழுக்கும் அமுதென்றுப் பேர் - அந்த
தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்
வாயடைத்துப் போய்விட்டேன் உங்களனைவரின் வாழ்த்துகளைப் படித்தவுடன்..
இந்த வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தகுதியை இனிமேல்தால்தான் நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்..
இனிவருங்காலங்களில் தமிழுக்காகவும், தமிழ் சமுதாயத்துக்காகவும் நம்மால் இயன்ற பங்களிப்பை இணைந்து செய்வோம்.
வாழ்த்துவிட்டுச் சென்ற அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்... :)
ஓராண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்க்ள்!
எண்ணிலடங்கா ஓலைகளை சிரமம் பாராது வலையேற்றி எழுச்சி சமுதாயத்தை உருவாக்கும் உங்கள் சமுதாயப் பற்று பாராட்டுக்குறியது.
தமிழ் இனத்துக்கும் தமிழ் மொழிக்கும் உங்க்ள் நற்பணி இனிதே தொடர வேண்டும்.
வாழ்த்துக்கள்!
Post a Comment