தீபாராயா - இண்ட்ராஃபின் அடுத்த நிகழ்வு
>> Sunday, September 21, 2008
இண்ட்ராஃப் இயக்கத்தின் அடுத்த நிகழ்வாக, தீபகற்ப மலேசியாவில் வட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் 'அரி ராயா' பெருநாளன்று நடைப்பெறவிருக்கும் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில், நாம் அனைவரும் கலந்துக் கொண்டு அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தியின் கட்டளையாகும்.
"என்னப்பா இது ! போயும் போயும் பிரதமரோட திறந்த இல்ல உபசரிப்புக்கா நாம போகணும்..! அதுல வாழ்த்து வேற சொல்லணுமாக்கும்..! இப்படி எல்லாரும் அங்கே போனோன்னா இண்ட்ராஃப் பாரிசானுக்கு ஆதரவு கொடுக்குதுன்னு கதை கட்டிற மாட்டானுங்களா..?" என்று நீங்கள் மனதார கடிந்துக் கொள்வது நமக்குத் தெரிகிறது.
ம்ம்ம்... கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையை முதலில் வாசியுங்கள், அதன் உள்ளர்த்தம் உங்களுக்கு விளங்காவிடில், உங்கள் வசிப்பிடத்தின் இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புக் கொண்டு மேல் விவரத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.
எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாது அமைதியான முறையில் நாம் அனைவரும் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொண்டு அவருக்கு 'அரி ராயா' வாழ்த்துகளைத் தெரிவிப்போமாக.
பினாங்கு மாநிலத்தில் கெப்பாலா பாதாசில் பிரதமர் இல்லம் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இரு இடங்களில் பிரதமரின் 'அரி ராயா' திறந்த இல்ல உபசரிப்பு நடைப்பெறவுள்ளது. இவ்விரு நிகழ்வுகள் நடைப்பெறும் திகதியையும் இடத்தினையும் ஒருமுறை இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர்களிடம் விளக்கம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு நடைப்பெறும் இடம், திகதி, நேரம் போன்றத் தகவல்கள் பின்பு அறிவிக்கப்படும்.
வட மாநிலங்களான பெர்லீசு, கெடா, பினாங்கு, பேராக் மற்றும் கிழக்கு கரை மாநிலமான திரெங்கானு ஆகிய மாநிலங்களில் உள்ள இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கெப்பாலா பாதாசில் நடைப்பெறும் திறந்த இல்ல உபசரிப்பிற்குச் செல்ல வேண்டும்.
மத்திய, தென் மாநிலங்களான சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், பகாங்கு, நெகிரி செம்பிலான், மலாக்கா, சொகூர் ஆகிய மாநிலத்தில் உள்ள இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கோலாலம்பூரில் நடைப்பெறும் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விரு நிகழ்வுகளில் முடிந்த மட்டும் கலந்துக் கொள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும், ஒருவேளை சாத்தியப்படாவிடில் மாநில வாரியாக மந்திரி புசார் இல்லங்களில் நடைப்பெறும் திறந்த இல்ல உபசரிப்பிலாவது கலந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 2,000 ஆதரவாளர்கள் வீதம், பினாங்கு, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் நடைப்பெறவிருக்கும் திறந்த இல்ல உபசரிப்பில் குறைந்தது 10,000 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் திரள வேண்டும் என்பது இண்ட்ராஃபின் குறிக்கோளாக உள்ளது. இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவி பிரதமருக்கு 'அரி ராயா' வாழ்த்து அட்டையையும் அதனோடு இணைத்து இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்கக் கோரும் மனுவினையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்களின்வழி போக்குவரத்திற்கான வசதிகள் தொடர்பாக அணுகலாம்.
முக்கியக் குறிப்பு : பிரதமரின், மந்திரி புசார்களின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொள்வோர் கண்டிப்பாக 'இண்ட்ராஃப்' பெயர்ப் பதித்த ஆரஞ்சு நிற உடையினையே அணிந்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
'அரி ராயா' வாழ்த்துகளை சமர்ப்பிக்கும் நோக்கில் படையெடுக்கும் நமக்கு காவல்த் துறையினரிடமிருந்தோ, கலகத் தடுப்புப் படையினரிடமிருந்தோ அச்சுறுத்தல் வராது என நம்புகிறோம். மீறி நம் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க அவர்கள் முயன்றால் முன்னெச்சரிக்கையாக நாம் எடுக்கக் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதனை உங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
***
இதனையடுத்து, வருகின்ற தீபாவளித் திருநாளை மலேசிய இந்துக்கள் மிதமான முறையில் கொண்டாட வேண்டும் என்பது இண்ட்ராஃபின் வேண்டுகோள் ஆகும். மலேசிய இந்தியர்களின் உரிமைக்காகப் போராடிய நம் இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் சிறையில் வாடும் இவ்வேளையில், தீபாவளித் திருநாளன்று அனைவரும் ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
"என்னப்பா இது..! வருசத்துக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு வருது தீபாவளி, அதையும் சந்தோசமா கொண்டாடக் கூடாதா...?" என்று கேட்கிறீர்கள்தானே..
இவ்வருட தீபாவளி குழந்தைகளுக்கான தீபாவளியாக இருக்கட்டுமே, பெரியவர்கள் சற்று மிதமாக இத்திருநாளைக் கொண்டாடலாமே.. நம் வலிகளை தன் வலிகளாக ஏற்று இன்று தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட முடியாது தவிக்கும் நம் இண்ட்ராஃப் தலைவர்களுக்காக இதைக் கூட செய்யவில்லையென்றால் எப்படி...?
குழந்தைகளுக்கு வழக்கம்போல் புத்தாடைகள் வாங்குங்கள், ஆனால் முடிந்தால் ஆரஞ்சு நிறத்திலான உடைகளை வாங்குங்கள். உங்களுக்கும் புத்தாடைகள் வாங்க எண்ணம் கொண்டால் ஆரஞ்சு நிறத்திலேயே வாங்கி தீபாவளியன்று அணியுங்கள். பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்ற சட்டம் இருந்தாலும், வருடா வருடம் பட்டாசு சத்தம் கேட்காமல் இருக்காது இல்லையா, எனவே நீங்கள் சிக்கனம் கருதி பட்டாசுகளை குறைவாகவே வாங்குங்கள். வருடா வருடம் திறந்த இல்ல உபசரிப்பு நடத்துபவரா நீங்கள்..? இவ்வருடம் திறந்த இல்ல உபசரிப்பிற்குப் பதில் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துக் கொள்ளுங்களேன்.
"ஒருவேளை தீபாவளிக்கு முன்னதாகவே இண்ட்ராஃப் தலைவர்கள் விடுதலையானால்...?"
தீபாவளிய ஒரு கலக்கு கலக்கிருங்க...! :)
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளை நகல் எடுத்து அனைவருக்கும் விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


போராட்டம் தொடரும்..
5 கருத்து ஓலை(கள்):
//பெரியவர்கள் சற்று மிதமாக இத்திருநாளைக் கொண்டாடலாமே.. //
தீபாவளி கொண்டாட மாட்டேன். முதல் நாளே தண்ணி அடிச்சிட்டு மட்டையாகிடுறேன்.
//தீபாவளிய ஒரு கலக்கு கலக்கிருங்க//
கண்டிப்பாக... அப்பவும் தண்ணியடிச்சி மட்டை தான்.
தீபாவளி என்றாலே தமிழர்களுக்கு மதுபானக் கொண்டாட்டம்தான் என்பது ஒரு தவறான உதாரணம்...!
அன்பர் சதீசு குமார் அவர்களே நன்றி உங்கள் அன்பார்ந்த கருத்துக்களுக்கு. என்றென்றும் எங்கள் முயற்சி தொடரும். நன்றி வணக்கம்.
வணக்கம் வாழ்க வளத்துடன்.
தங்கள் வலைப்பூவில் வலம் வருபவர்களில் நானும் ஒருவன். இப்பொழுதுதான் இறைவன் திருவருளால் புதியதாக தமிழ் ஆலயம் என்ற வலைப்பதிவினைத் தொடங்கியுள்ளேன். திருமன்றில் வலைத்தளத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய வலைப்பதிவு அருமையான தகவல்களைத் தாங்கி மலருவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
தமிழால் ஒன்றுபடுவோம்,
தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி
அன்புடன்
கோவி.மதிவரன் (தொல்லூர்)
Tamilaalayam.blogspot.com
Post a Comment