நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம் !
>> Thursday, September 18, 2008
மக்கள் கூட்டணியின் தலைவர் அனுவார் இபுராகிம் இன்று பிதமருக்கு அனுப்பியக் கடிதத்தில், நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட வேண்டும், பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாம் கொண்டு வரவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று அவர் நடத்திய நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் பேசுகையில், "11(3) நாடாளுமன்ற விதியின்படி அடுத்த செவ்வாய்க் கிழமைக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய சட்டம் அனுமதிக்கையில் பிரதமர் அச்சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும். அவர் நினைத்தால் அதனைச் செய்ய முடியும், சபாநாயகரிடம் அவசரக் கூட்டத்தை பற்றி தெரிவிக்க வேண்டியதுதான் அவர் வேலை. கடிதத்தில் அவசரக் கூட்டம் நடைப்பெற வேண்டிய திகதியையும் பரிந்துரை செய்துள்ளோம். முறையான பதிலை பிரதமரிடமிருந்து நான் எதிர்ப்பார்க்கிறேன்.
அப்படி அவருக்கு கட்சி தாவவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வேண்டும் என்றால் உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தை ஏற்பாடு செய்யட்டும். அங்கு நான் பட்டியலை வெளியிடுகிறேன். இதைவிடுத்து என்னால் வேறு என்ன செய்யமுடியும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? முன்கூட்டியே பெயர்ப்பட்டியலை வெளியிட்டு அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டுமா? இந்த சூழ்நிலையில் நான் அவர்களின் பெயர்களை வெளியிட்டேன் என்றால் என்ன நடக்கும் என்று எனக்கும் தெரியும். நாடாளுமன்ற அவசரக் கூட்டம் தொடங்கும் வரையில் எங்களின் பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர்களே கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் என்னை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதற்காக என்னை அவர்கள் கைது செய்ய வேண்டும், தகுந்த காரணம் அவர்களிடம் உண்டா? அரசாங்கத்தை புரட்டிப் போட என்னிடம் போதுமான அளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைவசம் இருக்கின்றனர். அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் எங்களையும் தற்போது இசாவின் கீழ் கைதாகியுள்ள திரேசா கோக் உட்பட, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர நடப்பு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்." என்று அவர் தன் கருத்தை வெளியிட்டார்.
ஏன் அக்டோபர் 13-ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்வரையில் காத்திருக்கக்கூடாது என்று நிருபர் ஒருவர் கேட்கையில், " தற்போது நாட்டின் பொருளாதார, அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டால் அத்திட்டம் ஒவ்வாது. எத்தனைக் காலம்தான் காத்திருப்பது. ஒரு பொறுப்பான அரசாங்கமாக இருந்திருந்தால் தற்போது நாட்டில் நிலவும் பங்கு சந்தை வீழ்ச்சியையும், பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க என்ன செய்தனர். இதுவரையில் ஒரு நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கவில்லை. இதனைப் பார்த்துக் கொண்டு நாங்கள் வெறுமனே இருந்துவிடப் போவதில்லை. முடிந்தால் நாளையே இதற்கு ஒரு முடிவு கட்டுவோம். பிரதமர் அப்துல்லா எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் நாங்கள் மாமன்னரைச் சந்தித்து நிலவரத்தை விளக்கி நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்வோம்" என்று அவர் கூறினார்.
***
இதற்கிடையில் இன்று பிரதமர் அப்துல்லா அகமது படாவி அனுவாரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "அக்டோபர் 13-ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என்று நாங்கள் முடிவெடுத்துவிட்ட நிலையில், திடீரென்று நோன்பு மாதத்தில் நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது சரிபடாது. அதோடு இன்று அனுவார் எனக்கு அனுப்பி இருந்த விண்ணப்பக்கடிதம் ஒரு முறையான கடிதமே அல்ல. அதற்கென்ற சில விதிமுறைகள் உள்ளன." என்று அவர் கூறியுள்ளார்.
அனுவாரை இசா சட்டத்தில் கைது செய்யக்கூடிய சாத்தியம் உள்ளதா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கையில், "அனுவாரை இசாவில் கைது செய்யும் எண்ணம் எனக்கில்லை. நான் யாரையும் இசாவில் கைது செய்யவும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. அப்படி அவர் தம் மீது இசா சட்டம் பாயும் என்று பயந்தால், அவரின் குற்ற உணர்ச்சிதான் அதற்குக் காரணமாக இருக்கும்." என்று அவர் பதிலளித்தார்.
ரமடான் நோன்பு மாதத்தை காரணம் காட்டி நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தை நிராகரிக்கிறீர்களே, பிறகு எதற்கு அதே நோன்பு மாதத்தில் 54 நாடாளுமன்ற உறுப்பினர்களை தைவானிற்கு விவசாயக் கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்தீர்கள் பிரதமரே.. :)
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment