அம்னோவின் வெற்றிக்கு பங்காற்றும் தமிழ் நாளேடுகள்..!

>> Saturday, September 27, 2008

நாடகமாடுகிறார் தனேந்திரன்..!
..கா இளைஞர் பகுதி செயலாளர் சிவராஜ் கண்டனம்!

வசந்தகுமார் மீது பழி சுமத்துவதா..?

மக்கள் சக்தியும் அரசியல் சாயமும்..!

"ஐவரின் விடுதலைதான் முக்கியம்" கணபதிராவ் சகோதரர் ராயுடு அறிவுறுத்து.

இண்ட்ராஃபின் நோக்கத்தை தனேந்திரன் திசைதிருப்புவதா...?

பேரணியைக் கூட்டி சமுதாயத்தை கூறு போடாதீர்..!

பேரணியில் கலந்துக் கொள்ளத் தயாரா? சாமிவேலுவுக்கு தனேந்திரன் சவால்..!

5 இண்ட்ராஃபின் தலைவர்கள் விடுதலைக்குப் போராட்டம், சாமிவேலுவின் சின்னத்திரை நாடகமா?

ஐவரை வைத்து .,கா அரசியலா? தனேந்திரனுக்கு இளைஞர் பிரிவு கேள்வி..!

..காவுக்கு சவால்..!

வேதமூர்த்தியின் அறிக்கை வருத்தத்தைத் தருகின்றது..

தனேந்திரனின் சவாலை சாமிவேலு சந்திக்க வேண்டும்..! என்றி வலியுறுத்து..

அம்பாங்கில் ஆலயம் உடைப்பு : நிர்வாகம் வேதனை,
..கா நீலிக்கண்ணீர்வடிக்க வேண்டாம் என எச்சரிக்கை..!

மேற்காணும் தலைப்புகள் அனைத்தும் நேற்றைய தமிழ் நாளேடுகளில் வெளிவந்திருந்த தலையங்கங்களும் செய்திகளுமாகும். தமிழ் குமுகாயத்தில் பலதரப்பட்டவர்களால் இச்செய்திகள் வாசிக்கப்பட்டு, அவரவர் பட்டறிவிற்கும் சுயசிந்தனைக்கும் ஏற்ப கருத்துகள் உள்வாங்கப்பட்டு, அவற்றின்பால் சில அபிப்பிராயங்களை மனதிற்கொள்ள வைத்திருப்பது நிச்சயம். இதுமட்டுமல்லாது காலங்காலமாகவே உள்நாட்டு தமிழ் நாளேடுகள் பல்வேறு தரப்பினர்களின் பிரச்சனைகளையும் அதிருப்திகளையும் கொட்டித் தீர்க்கும் ஒரு களமாக இயங்கி வருவதையும் கண்கூடாகவே காணமுடிகிறது.

சமுதாயப் பிரச்சனைகளை முன்வைக்கிறோம் பேர்வழி என்று, சுயலாப நோக்கமுடனும் பழிதீர்க்கும் எண்ணங்களுடனும் படையெடுக்கும் சில அறிக்கை வீரர்களுக்கு நமது தமிழ் நாளேடுகள் காலங்காலமாய் வழிவிட்டு தனது வருமானத்தைப் பெருக்கி வருகின்றன என்று ஆணித்தரமாகவே கூறலாம். அண்மைய காலமாக இண்ட்ராஃப் மக்கள் சக்தி தலைமைத்துவத்தில் ஒற்றுமை சீர்குலைந்து வருவதாகவும், இண்ட்ராஃப் தலைவர் வேதமூர்த்தி லண்டனில் உல்லாசமாக இருப்பதாகவும், லண்டன் நஷ்ட ஈடு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாயும் பல அறிக்கைகள் நாளேடுகளில் வெளிவந்தவண்ணம் இருந்தன.

இக்கருத்துகளில் ஆதரப்பூர்வமான உண்மைகள் உள்ளனவா அல்லது இவையனைத்தும் அரசியல் நோக்கத்துடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட புழுகு மூட்டைகளா என்று ஆராய்வது ஒருபுறம் இருப்பினும், சமுதாயத்திற்கு உண்மைச் செய்திகளைக் கொண்டுச் சேர்ப்பிக்கும் பொறுப்பில் உள்ள நம் நாட்டு தமிழ் நாளேடுகள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதன் வழி சமுதாயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அவர்கள் அறிவார்களா?

சமுதாயம் அனுதினமும் சந்தித்து வரும் பலவகைப் பிரச்சனைகளைப் படம் பிடித்து செய்திகளாகப் பிரசுரிப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், தனிமனித சாடல்கள் கொண்ட அறிக்கைகளை மையப்படுத்தி பின் அதனைத் தொடர்ந்து தொடர் சங்கிலிகளாக வெளிவரும் அறிக்கைகளையும் பிரசுரித்து பணம் பண்ணும் போக்கைத்தான் நாம் கண்டிக்க வேண்டியுள்ளது. இதன்வழி மக்கள் அடைந்த நன்மை என்ன?

இம்மாதத்தில் மலேசியத் தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திகளை மட்டும் உதாரணமாக் கொண்டோமானால், தனிமனித சாடல்கள் நிறைந்த அறிக்கைகளையே நாம் அதிகம் காணலாம். அதுவும், அவை முதல் பக்கத்திலேயே தலையங்கங்களாக நாளிதழ்களை அலங்கரித்து வருவது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். இதுபோன்ற செய்திகள் ஏன் மையப்படுத்தப்படுகின்றன? உண்மையை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காகவா? சரி மக்கள் உண்மையிலேயே விழிப்புணர்வு அடைந்தார்களா?


கடந்த ஒருவார காலமாக தமிழ் நாளேடுகளை அலங்கரித்து வரும் செய்திகளை ஒருகணம் அலசிப் பாருங்கள். சாமிவேலு இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க பிரதமரிடம் கோரப் போவதாய்க் கூறி, பிரதமரையும் சந்தித்துவிட்டார். அவரையடுத்து ம.மு.க கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரும், துணையமைச்சருமான முருகையாவும் துணைப் பிரதமரைச் சந்தித்து இது குறித்து பேசப்போவதாகக் கூறி, அவரை சந்தித்தும் விட்டார். இவர்களையடுத்து ஐ.பி.எஃப் கட்சி, இந்து சங்கம், கிம்மா, இன்னும் இதர அரசு சார்பற்ற இயக்கங்கள் இண்ட்ராஃப் தலைவர்கள் விடுதலை குறித்து அறிக்கைகள் விட்டுக் கொண்டும் வருகின்றனர்.

இத்தனைக் காலம் சுவடே தெரியாமல் இருந்த சில இயக்கங்கள் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பதும், இது குறித்து தமிழ் நாளேடுகளில் செய்தி வருவதுமாக உள்ளது. 'கூட்டத்தில் கோவிந்தா போடுவது' என்பார்களே, அதுதான் இப்பொழுது நடந்துவருகிறது. தேசிய முண்ணனியின் உறுப்புக் கட்சியான ம.இ.காவே குரல் கொடுத்துவிட்டது, இனி நாமும் கொடுத்துவிட வேண்டியதுதான் என்று பல அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. மறுபுறம் இண்ட்ராஃப் உறுப்பினர்கள் பலருக்கு இந்த அரசியல் நாடகம் பிடிக்காதுபோய் பத்திரிகைகளில் இருவழி வாக்குவாதங்களில் இறங்கிவிட்டனர். நேற்று, இன்று, நாளை என நாளேடுகளைப் புரட்டினாலே, "நீ வாய மூடு!, "நீ வாய தொற!", "நாடகம் ஆடாதே!", "படம் காட்டாதே..!", "உனக்கு உரிமை இல்ல!" " எனக்கு உரிமை இருக்கு..!" என ஒரே காழ்ப்புணர்ச்சியைத்தான் காணமுடிகிறது.

ஏதோ இதுப்பொன்ற செய்திகளைப் படிப்பதற்குத்தான் பலர் தமிழ் நாளேடுகளை பணம் கொடுத்து வாங்கிப் படிப்பதாக ஒரு மாயயை நாளேடுகள் உருவாக்கிவிட்டதுடன் மட்டுமல்லாமல், வலுக்கட்டாயமாக வாசகர்களின் மீது அவர்களின் ரசனையை மீறி தேவையில்லாதக் கருத்துகளைத் திணிக்கின்றன. கொடுக்கப்படுகின்ற அறிக்கைகளையும் தேவைக்கேற்ப சில உண்மைகளை மறைத்தும் வெட்டியும் ஒட்டியும் சொந்த திணிப்பையும் கலந்து பிரசுரிப்பதை எத்தனைப் பேர் அறிந்திருப்பர். இவர்களைப் பொறுத்தமட்டில் பிரச்சனை ஓரிரு தினங்களில் முடிந்துவிடக் கூடாது. முடிந்தால் குறைந்த பட்சம் ஒரு மாதக் காலமாவது பிரச்சனை சூடு பிடித்து நின்றால்தான் தனக்கு வியாபாரம் ஓடும் என்ற நோக்கில் மூன்று நாளிதழ்களுக்குமே வணிகப் போட்டி. இவர்களின் போட்டாப்போட்டியில் தமிழ் வாசகர்கள் பலிகடா..! ஏற்கனவே குழம்பிப் போயிருந்த சமுதாயத்தை மேலும் குழப்ப இது போன்ற அறிக்கைகள் உதவி வருகின்றன.



25 நவம்பருக்கு அடுத்து இந்திய சமுதாயத்தில் நிலவிவந்த ஒற்றுமை படிப்படியாகக் குறைந்து வருவதற்கு தமிழ் நாளிதழ்களும் ஒரு காரணம் என்று ஆணித்தரமாகக் கூறலாம். இவர்கள் அறிந்தோ அறியாமலோ, மக்களின் உண்மைப் போராட்டத்தை வேறெங்கோ திசை திருப்பிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். அம்னோ ஆதிக்கத்தை வெறுத்து அவர்களுக்கெதிராகப் போர்க் கொடி தூக்கிய தன்மானமுள்ள இந்திய சமுதாயம், இன்று கொள்கைகள் திசைத்திருப்பப்பட்டு "இது ஒரு தனிப்பட்ட சமுதாயப் பிரச்சனை" என்றத் தோரணத்தை உண்டு செய்துவிட்டது.

இத்தனைப் பிரச்சனைகளுக்கும் பகடைக் காய் நகர்த்துபவனாக விளங்கிய அம்னோவை நாம் தைரியத்துடன் எதிர்த்தோம், ஆனால் இன்று பலர் பின்வாங்குகின்றனர். உண்மையான போராட்டம் என்ன என்பதனை அவர்கள் அறிந்திருக்கவில்லை. சுயசிந்தனையற்று அரசியல் எனும் நாடகத்தில் காயடிக்கப்பட்ட ஒரு பகடைக் காயாக ஓய்ந்துவிட்டனர் பலர். ஆனால் தனக்குத்தானே அடித்துக் கொள்வதில் வீரமும் தீரமும் இன்னும் ஓய்ந்துவிட வில்லை. நம் மலேசிய இந்தியர்களைப் பொருத்தமட்டில், அம்னோவுடன் தன் வீரத்தைக் காட்டுவதைக் காட்டிலும், தன் சொந்த சமுதாயத்தை எதிர்ப்பதிலேயே மும்முரமாக இருக்கின்றனர். அவர்களுக்கு அதுதான் சவுகரியம்.

நேற்று ஒரு தமிழ் நாளிதழில் 'மக்கள் சக்தியும் அரசியல் சாயமும்..!" என்ற ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. தமிழ் நாளேடுகளையும் சும்மா சொல்லக் கூடாது. அவர்களின் தைரியம் நம் சமுதாயம் அளவில்தான். இதே 'அம்னோவும் அரசியல் சாயமும்..!' எனும் தலைப்பில் யாராவது கட்டுரையை அனுப்பிப் பாருங்கள். சென்மத்திற்கு அந்தக் கட்டுரை எந்த தமிழ் நாளிதழிலும் வெளிவராது. காரணம் இதுபோன்ற தலைப்பைப் போட்டதற்கே இவர்களின் காப்புரிமை பறிக்கப்பட்டிருக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில் பலர் தங்களுடைய போராட்டம் என்ன என்பதனை மறந்துவிட்டு, மீண்டும் தான் முன்பு ஊறிய அதேக் குட்டையில் குதித்து சொந்த சமுதாயத்தைக் கூறு போடுகிறார்கள். எந்த ஒரு போராட்ட இயக்கமாக இருந்தாலும், அது ஆரம்பத்தில் கண்டிருந்த வீரியத்திலிருந்து சற்று பலவீனமடையும் காலக்கட்டம் வரும். உலக சரித்திரத்தில் பலப் போராட்டங்களை நாம் எடுத்துப் படித்தால் நாம் விளங்கிக் கொள்வது இதுதான். அதே வேளையில், இந்த போராட்ட இயக்கங்களுக்கு என்றுமே தடைக்கல்லாக அமைபவை அரசியல் கட்சிகள்தாம். அவை திட்டமிட்டு நகர்த்தும் சில பகடைக் காய்களில், பொதுநலத்தை முன்னின்று போராடும் பல இயக்கங்கள் திசைமாறிப் போனக் கதை பல உண்டு. அதுபோல 'இண்ட்ராஃப் மக்கள் சக்தி' எனும் மலேசிய இந்தியர்களின் உரிமைக் குரலியக்கம் தற்போது அரசியல் சிக்கலில் சிக்கிக் கொண்டு வெளிவரத் திணறிக் கொண்டிருக்கிறது.

சாமிவேலு போன்ற அரசியல் சாணக்கியர்கள் பலகாலம் அரசியலில் பழம் தின்றுக் கொட்டைப் போட்டவர்கள் என்று பலருக்குத் தெரியும். அவருடைய அனுபவத்தில் பல இயக்கங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்டிருப்பார். பெரும்பான்மையினரால் வெறுக்கப்பட்டாலும் இன்றுவரை உறுதியாக அரசியலில் அவரால் நீடிக்கமுடிகிறது என்றால், அதற்கு என்ன காரணம். நாற்பது ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இந்திய சமூகத்தை அவர் நன்கு படித்து வைத்திருக்கிறார். இண்ட்ராஃப் எனும் இயக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி விழிக்கச் செய்தபோது, சாமிவேலு ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்..

அதாவது...

" இந்திய சமுதாயத்தினர் ஒரு விடயத்தில் உணர்ச்சிவசப்பட்டார்கள் என்றால் கொதித்தெழுவார்கள், அவர்களை அடக்க முடியாது, ஆனால் அந்த உணர்ச்சி கொந்தளிப்பு இரண்டு மாதகாலத்தில் அடங்கிவிடும் தன்மையுடையது, அதற்குமேல் மீண்டும் என்னைத் தேடிதான் அவர்கள் வந்தாக வேண்டும். இது நான் என் அரசியல் வாழ்க்கையில் கண்ட உண்மை."

சாமிவேலுவை அரசியல் தீர்க்கதரிசி என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை அவர் இரண்டு மாதங்கள் என்று கூறியது மக்கள் சக்தியைப் பொறுத்தமட்டில் உண்மை இல்லை என்றாலும், உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிவிடும், மீண்டும் என்னைத் தேடிதான் வரவேண்டும் என்று அவர் கூறியது படிப்படியாக நாம் கண்டுவரும் உண்மையாகும்.

ஏன் மக்கள் மத்தியில் திடீர் மனமாற்றம்? 51 ஆண்டுகளாக தங்களுக்குள் அடக்கிவைத்துக் கொண்டிருந்த போராட்டக் குணம் எரிமலையென வெடித்து இன்று மீண்டும் உறங்கச் செல்லும் தறுவாயில் இருப்பதற்கென்ன காரணம்?

இண்ட்ராஃபின் ஆரம்பகால போராட்டத்தில் ஒன்றுசேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் ஒரே எண்ணம், ஒரேக் கொள்கை, ஒரே விதமான உறுதி என்று இருந்த சமயம், எடுத்த காரியங்களில் அனைத்திலும் வெற்றியே கிடைத்து வந்தது. இந்திய சமுதாயத்தின் ஒருமித்த எழுச்சியைக் கண்ட அரசாங்கம் பயந்தது, எதிர்க்கட்சியோ ஆதாயம் தேடியது. அச்சமயம் இண்ட்ராஃப் இயக்கத்தினுள் இருவகை அரசியல் சக்திகள் தத்தம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளப் படிப்படியாக நுழையத் தொடங்கியது.

மக்கள் சக்தியை பிளவுப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் ஒரு சாராரும், மக்கள் சக்தியை அரசாங்கத்திற்கு எதிராக மேலும் தூண்டிவிட்டு தமக்கு சாதகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என மற்றுமொரு சாராரும் அட்டைகளைப்போல ஒட்டிக் கொண்டனர். ஆனால் எதிர்க்கட்சி நம்முடன் ஒட்டிக் கொண்டதுதான் நமக்கு வெளிப்படையாக தெரிந்ததேயன்றி, ஆளுங்கட்சியினர் நுழைத்துவிட்ட புல்லுருவிகள் எங்கு இருக்கிறார்கள் என்று பலருக்குத் தெரியவில்லை. கடந்த பொதுத் தேர்தல் வரை எதிர்க்கட்சிக்கும் இண்ட்ராஃபிற்கும் இருந்த தொடர்பு, பொதுத் தேர்தலுக்குப் பின் சற்று மங்க ஆரம்பித்த வேளையில்தான், ஆளுங்கட்சி புல்லுருவிகள் தத்தம் பகடைக் காய்களை மெல்ல நகர்த்தத் தொடங்கினார்கள்.

இண்ட்ராஃப் தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறைக்கும் மற்றொருவர் லண்டனுக்கும் சென்றுவிட்டப்பின், அவர்களை நம்பி போராட்டத்தில் குதித்த மக்களுக்கு தலைமைத்துவம் இல்லாமல் போராட்டமே ஒரு கேள்விக் குறியாக இருந்த சமயம்தான், திரு.வேதமூர்த்தியின் கட்டளையின் பேரில் பத்து இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதுவரையில் பிரார்த்தனை, உண்ணா நோன்பு, அமைதி மறியல் என இண்ட்ராஃபின் செயல்பாடுகள் தொடர்ந்து வந்தாலும், மக்களுக்கு கடந்த 13-வது பொதுத் தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. எதிர்க்கட்சிகள் ஐந்து மாநிலங்களை தன்வசம் கொண்டு வந்ததும், மக்களுடைய எதிர்ப்பார்ப்பு அரசியல் ரீதியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சியின் வசம் உள்ள ஐந்து மாநிலங்களிலும் இந்தியர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என அம்மாநில அரசாங்கங்களை வலியுறுத்தத் தொடங்கினர். சிலர் வெளிப்படையாகவே அரசியலில்வாதிகளுடன் நெருக்கமானத் தொடர்புகளை வைத்துக் கொண்டனர், சிலர் பதவிகளையும் கேட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. எதிர்க்கட்சி என்றால் மக்கள் சக்தி, மக்கள் சக்தி என்றால் எதிர்க்கட்சி என்று எண்ணும் அளவுக்கு இவர்களின் போக்கு இருந்து வந்தது. பெரும்பாலான இந்திய மக்களுக்கும் இவர்களோடு நெருக்கமாக இருப்பதை சவுகரியமாகக் கருதி வந்தார்கள். அதேச் சமயம் உண்மைப் போராட்டத்தில் இருந்தவர்கள் பலர் இச்செயலைக் கண்டிக்கத் தொடங்கினர்.

நாளடைவில் இதுவே ஒரு மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. இண்ட்ராஃப் என்ற உணர்வு மேலோங்கியிருந்தாலும், இவ்வியக்கத்தில் அரசியல் வெகுவாக நுழைந்துவிட்டதைக் கண்டித்து பலர் மெல்ல விலக ஆரம்பித்தனர். இவர்களைப் பொறுத்தவரையில் 18 அம்சக் கோரிக்கைகளுக்காக நாம் எடுத்து நடத்திய போராட்டம் அரசியலால் வீணாகிப் போகக் கூடாது என்பதுதான். இதற்கிடையில் கமுந்திங் சிறையில் ஐவருக்குள்ளும் ஒற்றுமை பிளவுபட்டுள்ளது என்ற செய்தி கசிய, ம.இ.கா இவ்விடயத்தைப் பெரிதுப்படுத்தத் தொடங்கியதும் இவர்களுக்குள் புகைந்துக் கொண்டிருந்த சினத்தை மெல்ல தூபம் போட்டு அதிகப்படுத்தியது தமிழ் நாளேடுகள்தாம். இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு மத்தியில் சிலக் கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் கண்ட சில பொறுப்பற்றவர்கள் உடனே நாளிதழ்களின்வழி அறிக்கைவிடத் துணிந்தனர். இச்சமயத்தில்தான் சிறுசிறு கருத்து வேறுபாடுகளைக்கூட பெரிதுப்படுத்தி அறிக்கைகள் வெளிவந்தன.

இந்நிலையில் இண்ட்ராஃப் இயக்கத்தை அரணாக இருந்து காக்க வேண்டிய ஒருங்கிணைப்பாளர்கள், இயக்கத்தின் போராட்டத்தை தற்காத்து அறிக்கை வெளியிட்டனர். இது இன்றுவரைத் தொடர்ச் சங்கிலியாக நீட்டித்துக் கொண்டுவருவதற்குக் காரணம் அரசியலும், அரசியல்வாதிகளின் கைப்பாவையாக விளங்கும் தமிழ் நாளேடுகளின் வணிக நோக்கமும்தான். கடந்த காலங்களைவிட தற்பொழுது இண்ட்ராஃப் தொடர்பான அறிக்கைகள் அதிகமாக வெளிவருகின்றன. அண்மைய சில நாட்களாக தமிழ் நாளேடுகளில் பரபரப்பாக வெளிவரும் செய்திகள் என்றால் அது இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலைக் குறித்தும், சாமிவேலுவின் பங்கும்தான்.

சாமிவேலு எதற்கு பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பதே கேள்வி. உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் பலராலும் வெறுக்கப்படும் ஒரு கொடுங்கோல் சட்டமாக இருந்தாலும், அது தற்போது நடப்பில் இருந்து வரும் சட்டம். சட்டத்திற்குக் கீழ்தான் அனைவரும், அது பிரதமராக இருந்தாலும் சரி. பிரதமரைச் சந்தித்த சாமிவேலு என்ன கேட்டிருக்கிறார்? வருகின்ற தீபாவளிக்குள் ஐவரையும் விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பல அரசு சார்பற்ற இயக்கங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றன. துணையமைச்சர் முருகையா துணைப்பிரதமரைச் சந்தித்தபோது, உள்துறை அமைச்சர் சையட் அமீட் அல்பார் இவ்விவகாரம் தொடர்பில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

ஆனால் இவர்கள் பிரதமரைச் சந்தித்து ஐவரின் விடுதலைக் குறித்து விவாதிப்பதில் இண்ட்ராஃப் இயக்கத்தினருக்கு முற்றிலும் சம்மதம் இல்லை. இவை அனைத்தும் அரசியல் நாடகம் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இதனை ஆராய்ந்தால் உண்மையென நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். ஆனால் இண்ட்ராஃப் தலைவர்களின் மனைவிமார்களில் சிலருக்கு இக்கருத்தில் உடன்பாடு இல்லை. தங்கள் கணவர்கள் விரைவில் விடுதலையாதை மட்டுமே அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர். எத்தரப்பினர் விவாதித்தால் என்ன? அது ம.இ.காவாக இருக்கட்டும், இண்ட்ராஃபாக இருக்கட்டும், கணவர்களின் விடுதலைதானே முக்கியம் என்பது அவர்களின் வாதம்.

அவர்கள் இண்ட்ராஃப் தலைவர்களின் மனைவிகள் என்ற முறையில்தான் தங்களுடைய கருத்துகளை முன்வைக்கின்றனர். எனவே அது தவறு இல்லை. ஆனால் இண்ட்ராஃப் போராட்டவாதிகள் என்ற முறையில் அவர்கள் அப்படிக் கருத்துரைத்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காது. சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டு வெளிவருவதற்கு இண்ட்ராஃப் தலைவர்களும் நிச்சயம் சம்மதிக்கமாட்டார்கள். அனைவருமே தங்களை முறையாக நீதிமன்றத்தில் கொண்டு வந்து விசாரிக்குமாறு கேட்கிறார்களே தவிர, கெஞ்சிக் கூத்தாடி வெளிவரவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இல்லை. நடப்பில் உள்ள சட்டம் என்பதால், அதனை முதலில் அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். காலத்திற்கொவ்வாத சட்டத்தினால் பல குடும்பங்கள் துயருருவதைச் சுட்டிக் காட்டி இச்சட்டத்தை அகற்ற அனைவரும் ஏகமனதாக முடிவு செய்ய வேண்டும்.

இதனை ம.இ.கா பிரதமரிடம் எடுத்துக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அண்மையில் இரு சீனர்கள் இசா வில் கைதானதும் ம.சீ.ச மற்றும் எதிர்க்கட்சிகள் அம்னோவிற்கு எதிராகக் குரல் கொடுத்தன. ம.சீ.ச பாரிசானை விட்டு வெளியேறும் நிலைமை வரும் என்ற அச்சத்திற்குள்ளான அம்னோ தொடர் நெருக்கடியால் அவர்களை விடுதலைச் செய்தது. அக்கட்சிகளைப் பொருத்தமட்டில் இசா சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற முடிவில்தான் உள்ளன. சாமிவேலு இசா வை மறுபரிசீலனை செய்யக் கோராது, கொல்லைப்புற வழியாக இண்ட்ராப்ஃ தலைவர்களை வீட்டுக்கு அனுப்பு என்று கெஞ்சி இருக்கிறார். அவருடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் அவருக்குத் தெரிந்த சட்டம் இதுதான்.

ஒருவேளை இண்ட்ராஃப் தலைவர்கள் விரைவில் விடுதலையானால், அவ்விடுதலையானது பிரதமரின் சுயவிருப்பிற்கேற்ப கொடுக்கப்பட்ட விடுதலை என்பதால், அதனை சட்டத்திற்கு புறம்பானது என்றே கொள்ள வேண்டும். சட்டம், நீதி என்று பேசிவிட்டு இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலையை சட்டத்திற்குப் புறம்பாக அமல்படுத்தக் கூடாது.

ஒன்று இசா வை அகற்றுங்கள், இண்ட்ராஃப் தலைவர்களை விடுவியுங்கள்.

அல்லது,

இண்ட்ராஃப் தலைவர்களை முறையாக நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து நீதி விசாரணை செய்யுங்கள்.

கொல்லைப்புற வழி எங்களுக்குத் தேவை இல்லை, காரணம் அது உண்மையான போராட்டம் கிடையாது.

இன்று உலகின் பல தலைச்சிறந்த அரசியல்வாதிகளின் வேத நூல் என்று சொல்லப்படும் மாக்கியாவேலியின் 'தே ப்ரின்சு', மகாபாரதத்தில் வரும் கணிகனின் 'கணிக வாக்கியம்' என்ற சாஸ்திர நூல்கள் என்ன சொல்கின்றன..

"உன் அரசியல் வாழ்க்கைக்கு எதிரே எவர் வந்தாலும் தந்திரத்தால் அவர்களை வீழ்த்திவிடு! அது உன் உற்ற நண்பனாயினும் சரி, பெற்றத் தாயாகினும் சரி!"

இந்நூல்களை நம் அரசியல்வாதிகளும் கற்றிருக்கிறார்கள். எதிரியை நம்ப வைத்தாவது கழுத்தறுக்க வேண்டிய வழிகளை அவை வலியுறுத்தி புகட்டுகின்றன. எனவே உரிமைப் போராட்டவாதிகள் என்றும் அரசியல்வாதிகளிடமிருந்து சற்று விலகியிருப்பது நல்லது. இல்லையேல் போராட்டத்திற்கும் கொள்கைக்கும் கலங்கம் ஏற்படும் நிலைமை நமக்கு ஏற்படலாம், தற்போது நடந்துக் கொண்டிருப்பதைப்போல...

போராட்டம் என்பது தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதல்ல..!
கொள்கைகளுக்காகவே போராடுபவன்தான் உண்மையான போராட்டவாதி..!
தலைவர்கள் இன்றிருக்கலாம், நாளை இல்லாமல் போகலாம், ஆனால் கொள்கை என்றுமே இருக்கும்..!

எனவே, கூட்டம் கூட்டமாக சில தலைவர்கள் பின்னால் சென்று சால்ரா அடிப்பதில் உண்மைப் போராட்டம் அடங்கிவிடாது.

சிலரின் நடத்தை சரியில்லை என்று போராட்டத்திலிருந்து ஒதுங்குவதும், ஊடகங்கள் குழப்பிவிட்ட நிலையில் போராட்டத்தை கைவிடுவதும், லண்டன் வழக்கு வெற்றிப் பெறாது போயின் போராட்டத்தைக் கைவிடுவதும், சிறைக்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து அலைந்து அலுத்துப்போய் போராட்டத்தை தூக்கி எறிவதும், வெறும் பேச்சளவில் போராட்டத்தைப் பற்றி கருத்துரைப்பதும் உண்மையான போராட்டவாதிக்கு அழகல்ல.

கொள்கையின் மீது நம்பிக்கைக் கொண்டு இண்ட்ராஃப் இயக்கத்தை தொடர்ந்து வழி நடத்துங்கள்..! தமிழ் பத்திரிக்கைகளில் வெளிவரும் தவறான அறிக்கைகளுக்கு அடிமையாகாதீர்கள்..!

இண்ட்ராஃபை உடைத்துக் காட்டுவேன் எனச் சபதம் பூண்டவர்களை வெற்றிக் கொள்ளச் செய்யாதீர்கள். அரசியல் சாணக்கியர்கள் நம் போராட்டத்தினை திசைத் திருப்ப அனுமதிக்காதீர்கள், நம் எதிரி இந்தியச் சமுதாயமோ, அதனைச் சார்ந்த அரசியல் கட்சிகளோ கிடையாது..! நம் ஒரே எதிரி. கடந்த 51 ஆண்டுகாலமாக நம்மை அடிமைப்படுத்தி இனவாத அரசியலை நடத்திவரும் அம்னோ..! அம்னோ..! அம்னோ...! இக்கருத்தானது திரு.உதயகுமார் நாடெங்கிலும் நடந்த கருத்தரங்குகளில் கூறியது என்பது நினைவில் இருக்கட்டும்..!

அறிக்கை வீரர்களே முடிந்தால் அம்னோவிற்கு எதிராக அறிக்கை விடுங்கள்.. பார்க்கலாம்...!


வாழ்க இண்ட்ராஃப்..!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

கோவி.மதிவரன் September 28, 2008 at 12:08 PM  

வணக்கம் வாழ்க வளத்துடன்

சரியான சிந்தனை. தங்களின் கருத்தினை நான் வழிமொழிகின்றேன் நண்பரே. இன்றைய சூழலில் தகவல் ஊடகங்களான நமது தமிழ் நாளிதழ்கள் நமது சமுதாயம் தொடர்பான சிக்கல்களைப் பெரிதுபடுத்தி தனது வாணிகத்தைப் பெருக்குவதிலே குறியாக இருக்கின்றன. இந்த சமுதாயட்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டும் என்பது சிலரது நோக்கம். அதற்கு ஒத்தூதுவதே இவர்களின் நோக்கம் போலும்.

தமிழனே தமிழுக்கு உயிராம்- அந்தத்
தமிழனே தமிழனுக்குத் தூக்குக் கயிறாம்.

Sathis Kumar September 28, 2008 at 12:36 PM  

ஐயா கோவி.மதிவரன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வருகைக்கு நன்றி.

மக்களின் சிந்தனைகள் மாறினாலும், ஊடகங்கள் தன் போக்கை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை.
இப்படியே சென்றுக் கொண்டிருந்தால், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வைவிட காழ்ப்புணர்வுதான் மேலோங்கிக் காணப்படும்.

இன்றைய நாளிதழிலும் அதே கூத்துதான் நடக்கிறது..! தனிமனித சாடல்கள்..!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP