16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் எட்டு)

>> Sunday, March 30, 2008



(இறுதி அத்தியாயத்தை இப்பொழுதுதான் எழுத நேரம் கிடைத்துள்ளது, அதுவும் ஒரு வாசகரின் நினைவூட்டலுக்குப் பின்புதான் இறுதி அத்தியாயத்தின் கதை நினைவுக்கு வந்தது. காலம் கடந்து எழுதுவதற்கு வாசகர்கள் மன்னிக்கவும்.)

கதை தொடர்கிறது...

கொடுக்கப்பட்ட சிறைச்சாலை உணவை பசி மயக்கத்தில் ஒரு பதம் பார்த்துவிட்டு, சற்று நேரம் ஓரிடத்தில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தேன். அதே கூடாரத்தில் திரு.மாணிக்கவாசகம் ( தற்போதைய காப்பார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ) தனியாக அமர்ந்து ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவரின் தனிமையை ஏன் கெடுப்பானேன் என்று அவரிடம் பேச்சுக் கொடுக்க தயங்கினேன். சில நிமி்டங்கள் கழித்து, மீண்டும் ஒரு 'பிளேக் மரியா' லாரியில் இந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர். லாரியிலிருந்து இறங்கியவர்கள் 'மக்கள் சக்தி' என கோஷமி்ட, நாங்களும் அவர்களை கோஷமி்ட்டு வரவேற்றோம்.

இப்படியே சில லாரிகளில் இந்தியர்கள் வந்த வண்ணமாயிருந்தனர். வெயிலின் சூட்டில் மி்கவும் சோர்ந்து போயிருந்த வேளை, போலீஸ் அதிகாரியொருவர்,

"சரி, காலைல வந்தவங்க எல்லாரும் வந்து ஐ.சி எடுத்துகுங்க.."

எங்களையும் சேர்த்துதான் கூப்பிடுகிறார் என நினைத்து எழுந்தேன்.

"விடிய காலைல வந்தவங்க மட்டும் வாங்க, பஸ்ல வந்தவங்க வேட் பண்ணுங்க, உங்களோட ஐ.சி இன்னும் கொடுக்கல.."

நண்பர் கலையரசு தனது அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். சற்று நேரத்தில் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. கலையரசு செல்வதற்கு முன், நானும் அவரும் மற்றும் மகேந்திரனும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். விடியற்காலை 3 மணியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் மாலை மணி 4 அளவில் விடைப்பெற்றுச் சென்றனர்.

எஞ்சிய நாங்கள் மீண்டும் சோர்வோடு, எப்பொழுது எங்கள் அடையாள அட்டை வருமென காத்திருந்தோம். அரைமணி நேரம் கழித்து ஒரு போலீஸ் அதிகாரி ஒருப் பை நிறைய உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து,

" செமுவா மாக்கான், இனி பெகாவாய் புஞா.. டியா ஓராங் தாக் மாக்கான், அம்பேல்"

அதிகாரிகளுக்கு வழங்கவிருந்த உணவுப் பொட்டலங்கள் மி்ச்சம் இருந்ததால் எங்களிடம் கொண்டு வந்து நீட்டப்பட்டது. பொட்டலத்தை திறந்து பார்க்கும் பொழுது கோழி, பிரியாணி சாதம் என அமர்க்களமாக இருந்தது. அதையும் ஒரு வெட்டு வெட்டினோம்.

உணவருந்தி சற்று நேரம் கழிந்ததும், திரு.மாணிக்கவாசகம் அவர்களின் பெயர் வாசிக்கப்பட்டது. அவர் முன்னே சென்றதும் அவரின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார். நாங்கள் அனைவரும் மக்கள் சக்தி என கோஷமிட திரு.மாணிக்கவாசகமும் பதிலுக்கு சந்தோஷமாகத் தலையாட்டினார். வேன் மின்னல் வேகத்தில் பறந்தது.

மாலை 4.45 மணியளவில் எங்கள் பெயர் வாசிக்கப்பட்டு அடையாள அட்டைகள் திரும்பக் கொடுக்கப்பட்டன. அப்பொழுது அங்கிருந்த ஒரு இந்திய போலீஸ் அதிகார்,

" தோ பாருங்க.. உங்கள அக்தா கே.கே 3 கீழே புடிச்சு வெச்சிருந்தாங்க, அதுகான அதிகாரம் எங்ககிட்ட இருக்கு.. பெரியவரு உங்கமேலெ கருணை வெச்சு உங்கமேலே எந்த ஒரு கேஸும் போடாம அனுப்புறாரு... பாக்க போனா அவருக்குதான் நீங்க தேங்க்ஸ் சொல்லனும்.."

என்று ஒரு மலாய்க்கார அதிகாரியை சுட்டிக் காட்டினார்.

அப்பொழுது கூட்டத்தில் ஒரு சிலர் "தெரிமா காசே பாஞாக் இன்சேக்" என நன்றிக் கூறிக் கொண்டனர். ஆனால் கூட்டத்திலொருவர்,

"இவனுங்களுக்கு எதுக்கு நன்றிலாம் சொல்லிட்டு, சொல்லாதீங்கலா..! பேசாமே ஐ.சி ய வாங்கிட்டு வாங்க.. ஒரேடியா நடிப்பானுங்க..!"

எனக்கும் இது சரியென்றுபட்டது. நன்றாகவே போலீஸார் எங்களைத் தாஜா செய்கின்றனர் எனத் தெரிந்தது.

அடையாள அட்டையைப் பெற்றப் பின் நாங்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டோம். சோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்ட எங்கள் பொருட்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. செல்லும் வழியில் பேரணி நடந்த இடத்திற்குச் செல்லக்கூடாது என போலீசார் எங்களை எச்சரித்து விடுவித்தனர். எங்களுக்கு பிறகு வந்த மற்ற ஒரு குழுவினர் எங்களை உற்சாகமூட்டி வழியனுப்பினர். எங்கள் பேருந்தில் ஏறும் சமயம், ஒரு விரைவுப் பேருந்து புலாபோலினுள் அழைத்துவரப்பட்டது. அவர்கள் அமைதி பேரணியில் கலந்துக் கொள்ள தாமதமாக வந்தவர்கள் என தெரிந்துக் கொண்டோம். அவர்களை இன்னும் எத்தனை மணி நேரம் தடுத்து வைப்பார்களோ என மனதில் எண்ணிக் கொண்டே பேருந்து ஏறினேன்.

பேருந்து புலாபோல் நுழைவாயிலை நெருங்கியதும், அங்கு ஒரு சிலர் நின்றுக் கொண்டிருந்தது பார்வைக்குத் தென்பட்டது.

"அண்ணே, பஸ்ச கொஞ்ச நேரம் நிப்பாட்டுங்க.."

என ஒருசிலர் ஓட்டுநரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பேருந்து புலாபோல் நுழைவாயிலில் ஓரங்கட்டப்பட்டது. அப்போது எனக்கு இணையம் மூலம் நன்கு அறிமுகமான சில முகங்கள் தென்பட்டன. அவர்களில் இராஜாராக்ஸ் வலைப்பதிவர் இராஜா, 5 தலைவர்களை விடுவிக்கக் கோரி முதன்முறையாக 5 நாட்கள் உண்ணா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்ட சிங்கப்பூர் தமி்ழன் சீலன் பிள்ளை போன்றோர் அங்கு நிற்கக் கண்டேன். இராஜா கையில் புகைபடக் கருவியோடு நின்றுக்கொண்டிருந்ததை காண முடிந்தது.

அமைதிப் பேரணியில் சந்திக்கலாம் என இராஜாவிடம் கூறியது நினைவுக்கு வந்தது. பேருந்து படிக்கட்டுகளில் நின்றுக் கொண்டு இராஜாவை நோக்கி கையசைத்தேன், அவர் புகைபடங்கள் எடுப்பதில் மும்முரமாக இருந்ததால் என்னை கவனிக்கவில்லை.


பேருந்து மீண்டும் புறப்பட்டது. வழிநெடுக சாலைகளிலும் உணவுக் கடைகளிலும் இந்தியர்கள் பேருந்தைப் பார்த்து கையசைத்தனர். பேருந்து மீண்டும் நின்றது. பேருந்தினுள் இரு புது முகங்கள் தென்பட்டன..

"அண்ணே, பஸ்ச மி்ஸ் பண்ணிட்டோம், சுங்கை பூலோ வரைக்கும் லிப்ட் கிடைக்குமா"

ஓட்டுநர் சம்மதம் தெரிவிக்க அவர்களையும் ஏற்றிக் கொண்டு பேருந்து மி்ன்னல் வேகத்தில் பறந்தது. மாநகரில் எங்கும் நிற்காமல், நெடுஞ்சாலை எடுத்து சுங்கை பூலோ ஓய்வு எடுக்கும் இடத்தில் பேருந்து நின்றது. அனைவரும் நன்றாகக் களைப்பாறினர். அதன் பின் பேருந்து மீண்டும் வடக்கு நோக்கி விரைந்தது. இரவு பத்து மணியளவில் புக்கிட் கந்தாங் ஓய்வெடுக்கும் இடத்தில் பேருந்து நின்றது. அனைவரும் ஒன்று கூடினோம். ஒரு பெரிய வட்டம் பிடித்து நின்று ஒரு சபதம் எடுத்துக் கொண்டோம். இனி, இந்திய சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால், இந்தியர்களாகிய நாம் அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்.

பசிக்கு உணவு தேடி கடைகளுக்குப் போனாலும், இந்திய உணவகம் இருந்தால் அவர்களுக்குத்தான் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். விலையை ஒரு பொருட்டாகக் கருதக் கூடாது. சீனர்களைப் போல் இனி எந்த ஒரு காரியத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சபதம் எடுத்தோம்.

அனைவரின் முகத்திலும் ஒரு தெளிவு இருந்தது. பேருந்து ஜூரு கட்டணச் சாவடியை நெருங்கும் போது, பேருந்தில் உள்ள ஒரு பெரியவர்,

" சாமி்வேலு செபராங் பிறை வந்துருக்காராம்..! ஓரே கலவரமா இருக்காம், இப்பதான் என் மகன் போன் பண்ணி சொன்னான்.. "

இப்படிக் கூறிவிட்டு தாம் ஜூரு கட்டணச் சாவடியிலேயே இறங்கிக் கொள்ளப் போவதாகக் கூறி இறங்கிக் கொண்டார்.

பேருந்து பிறையில் ஆட்களை இறக்கிவிட்டு பினாங்குத் தீவிற்கு புறப்பட்டுச் சென்றது. நடுநிசி மணி 12ஐ எட்டியிருந்தது. பேருந்து குளுகோர் இராஜகாளியம்மன் ஆலயத்தின் முன் வந்து நின்றது. அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் கூறிக் கொண்டு பிரிந்துச் சென்றோம். ஒரு குடும்பமாகச் சென்று கஷ்டங்களை ஒன்றாக அனுபவித்ததனால், அவர்களை விட்டு மனம் பிரியவில்லை.

மெதுவாக பூமரத்தம்மன் ஆலயத்தை நோக்கி நடைப்பயின்றேன். ஆலயத்தை நெருங்க நெருங்க மனதில் ஒரு கேள்விக்குறி.

" மோட்டார் வண்டி பாதுகாப்பாக இருக்குமா..?!"

ஆலயத்தை நெருங்கிவிட்டேன்.

காரிருளிலும், ஆலயத்தின் ஒரு பகுதி அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. அந்த மர்ம ஆசாமி்கள் எங்கே என்று கண்கள் மங்கலான வெளிச்சத்தினூடே துலாவி துலாவி பார்த்தன. காணவில்லை. ஆலயத்தின் பின்புறம் சென்றேன், நிறுத்திவைத்த மோட்டார் வண்டி அதே இடத்தில் பத்திரமாக இருந்ததை கண்டதும் நிம்மதி அடைந்தேன். அருகில் ஒரு மேசையில் செங்கல்லை தலையில் வைத்துக் கொண்டு அந்த மர்ம ஆசாமி் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். நன்றி கூறலாம் என நினைத்தேன், ஆனால் எதற்கு வம்பு என்று, மோட்டார் வண்டியைத் திருட வந்தவன் போல், வண்டியை மெதுவாக தள்ளிக் கொண்டு ஆலயத்தின் முன்புறம் சென்று பூமரத்தம்மனை நன்றி உணர்வோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு மோட்டாரைச் செலுத்தினேன்.

இறுதி அத்தியாயம் முற்றும்...

அன்று ஐவருக்காக போராடிய போராட்டத்தின் பயனாக, இன்று ஐந்து மாநிலங்களை ஆளுங்கட்சி இழக்க நேரிட்டுள்ளது. இதுதான் மக்கள் சக்தி! ஒன்றுபடுவோம், செயல்படுவோம்!

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP