அண்ணாச்சி ஐஸ் வெக்கிறாருயோவ்...
>> Sunday, March 30, 2008
ம.இ.கா தலைவர் சா.சாமிவேலு இன்று, இந்து உரிமைப் பணிப்படைத் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாகக் கூடிய விரைவில் பிரதமர் அப்துல்லாவை தாம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார். இக்கருத்தை ம.இ.கா தலைமையகத்தில், ம.இ.கா தொகுதி தலைவர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்வைத் தொடக்கிவைத்த பின் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
திரு.மனோகரன், மற்றும் திரு.கங்காதரன் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் சிலர் சாமிவேலுவின் உதவியை நாடியதால் அவர் இந்த உதவியைச் செய்வதாகக் கூறியுள்ளார். திரு மனோகரன் கோத்தா ஆலாம் ஷா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாலும், திரு.கங்காதரன் உடல்நிலை குன்றியிருப்பதாலும் இவர்களை விடுதலைச் செயவதற்கு, பிரதமரிடம் சிபாரிசு செய்வதாகக் கூறியுள்ளார். அதோடு, தற்போது லண்டனில் வசித்து வரும் திரு.வேதமூர்த்தியை நாட்டிற்கு திரும்பி வர கேட்டுக் கொண்டுள்ளார். நாடு திரும்பியவுடன் கைது நடவடிக்கையிலிருந்து காக்கப்படுவார் எனவும், இதற்கான உதவிகளை தாம் பிரதமரிடம் பேசிப் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார்.
திடீரென்று ஞானோதயம் இவருக்கு எங்கிருந்துப் பிறந்தது? சில நாட்களுக்கு முன் ம.இ.காவின் முன்னால் தலைவரும், தனது பரம எதிரியுமான சுப்ராவுடன் இணைந்து, வீழ்ந்துகிடக்கும் ம.இ.காவை தூக்கி நிறுத்தப் போவதாகக் கூறியிருந்தார். இப்போது இ.சாவில் உள்ள நமது தலைவர்களை வெளிகொண்டு வருவதற்கு பிரதமரிடம் சிபாரிசு செய்யுமளவிற்கு இவர் தனது ஆணவப்படியைவிட்டு இறங்கி வந்திருக்கிறார் என்றால் நிச்சயமாக அரசியல் சாணக்கியமாகத்தான் இருக்குமே ஒழிய, இந்திய சமுதாயத்தின் மீது உள்ள பாசமோ, பரிவோ கிடையாது.
இனியும் எந்த அரசியல் சாணக்கியனும், தனது சுயலாபத்திற்காக இந்திய சமூகத்தை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி வருவானேயானால், சா.சாமிவேலு எனும் சாணக்கியனுக்கு நடந்த அதே கதிதான் அவனுக்கும் நடக்கும். சலுகை, சலுகை என்றே பேசிக் காலம் கடத்திய இவர்களின் வாயில் 'உரிமை' எனும் வார்த்தையை இதுநாள் வரையில் கேட்டதில்லை. இப்படி சலுகையிலேயே இந்திய சமுதாயம் தன்னுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கவேண்டும் என்றால் அப்படியொரு சலுகை நமக்குத் தேவையில்லை. எங்களுக்கு உரிய உரிமையைக் கொடு! அது போதும்!
மக்களை இனி கருவேப்பிலையாக பயன்படுத்தும் நோக்கம் நிறைவேறாது. குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு நிறைவேறாத பல திட்டங்கள் இருக்கின்றன. இத்திட்டங்களைச் செயல்வடிவில் கொண்டுவர ஒழுக்கமான ஒரு அரசியல்வாதியை வேண்டி இந்தச் சமுதாயம் ஏங்கிக் காத்துக் கிடக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
சாமிவேலு, இந்நாட்டில் இந்தியர்கள் மத்தியில் குண்டர் கும்பலை வளரவிட்டது மட்டுமே அவருடைய சாதனை எனக் கூறிக் கொள்ளலாம். நிம்மதியில்லாத வாழ்க்கையை இவர் ஆட்சி காலத்தில் இந்திய சமுதாயம் வாழ்ந்தது போதும். இனியும் சாமிவேலு பதவியில் இருந்தால் ம.இ.கா மீண்டு எழுவது கஷ்டம்..!
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment