மானம் உள்ள சமூகமே...!? - ஜோன் செல்வா, இலண்டன்
>> Sunday, March 2, 2008
பொதுத் தேர்தல்களை
பாரிசான் தேர்தல்
என்றே சொல்லி
பழகி வந்தோம்...!
50 ஆண்டுகளாய்
ஆட்சியாளர்களுக்கே
அள்ளித் தந்தோம்
பிளவு படாத ஆதரவை
எங்கள் தோட்டங்களை
மாட மாளிகை ஆக்கினீர்
மாடாய் உழைத்த எங்களை
வீதியில் தள்ளினீர்...!
உடல் உழைப்பு
சமூக முகவரி போதும்
எங்கள் பிள்ளைகளுக்கு
சம கல்வி வாய்ப்பு கேட்டோம்
கத்தியை காட்டி
மிரட்டுகிறார்
கட்சி கூட்டத்தில்
கல்வி அமைச்சர்..!?
எங்கள் குறைகளை
தெய்வத்திடம் வைத்தோம்
அதிகார பூட்சுகளால்
ஆலயங்களை உடைத்தீர்
நீதி கேட்க வந்த
எங்கள் நாயகர்களை
நீதி விசாரணை இல்லாமல்
வதைத்து வைத்தீர்...!
விசாரணைக்கே வழி இல்லையா..?
வீதிக்கு வந்தோம் விசாரிக்க
வியர்வையில் குளித்த சமூகத்தை
இரசாயன நீரில் குளிக்க வைத்தீர்...
எரிந்தது கண்கள் அல்ல
எங்கள் இதயம்...!
உடைந்தது மண்டைகள் அல்ல
எங்கள் அடிமை விலங்கு...!?
இதோ மீண்டும் தேர்தல்...!!
பாசாங்கு பாசத்தில்
பல்லிளிக்கும்
பாரிசான் தலைவர்கள்..!
ஒரே பொழுதில்
சமூகவாதிகளாகி போன
ம.இ.கா அரசியல் வியாபாரிகள்
வீட்டு வாசலில்...!
பாரிசான் வாழ்க...!
படாவி வாழ்க...!!
முழு மூச்சோடு
ஓடி வருகிறோம்...!!?
உங்கள் அம்னோ சின்னம்
போட்ட பழைய செருப்பால்
எங்கள் முகத்தில்
ஓங்கி அறையுங்கள்..!?
மானம் உள்ள சமூகமே, என
எங்கள் நெற்றியில்
முத்திரை குத்துங்கள்
நெஞ்சில் குத்துங்கள்
நாங்கள் தந்த வாக்குகளுக்கு
நீங்கள் தந்த
வாழ்வு அதுதானே...!
இது சரிதானா....!?
ஜோன் செல்வா, இலண்டன்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment