'மரத்தடியில் பிறந்த மறத் தமிழர்கள்!' - பாவலர் சங்கு சண்முகம்
>> Sunday, March 23, 2008
இன்று தொடங்கி ஞாயிறு நண்பனில் பாவலர் சங்கு சண்முகம் அவர்கள் எழுதி வரும் 'மறத்தடியில் பிறந்த மறத் தமிழர்கள்!' எனும் தொடர்கதை இடம்பெற்று வரும். இவருடைய எழுத்துகள் மலேசிய தமிழர்கள் பற்றியது என்பதாலும், அனைத்து தமிழர்களும் இக்கதை கூறும் வரலாற்றுச் சான்றுகளை உள்வாங்கித் தெளியவும், இனி ஒவ்வொரு வாரமும் நண்பனில் வெளிவரும் இத்தொடர்கதை ஓலைச்சுவடியிலும் வெளிவரும்.
அரை நூற்றாண்டுக்கு மேல் எழுத்தையே சுவாசித்து, அந்த சுவாசிப்பில் உயிர் கொண்டுள்ள பாவலர் சங்கு சண்முகம் அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்தம் வாழ்வியலை நன்கு தெரிந்தவர். சஞ்சிக் கூலிகளாக வந்த தமிழ்ச் சமுதாயத்தை மேய்ப்பானாக இருந்து சுகங்கண்ட பலரின் சுயரூபத்தை, நெடுங்கதையை வாசகர்கள் பாவலரின் எழுத்தில் தெரிந்து தெளியலாம்.
பங்சார் ரோட்டில் 'பயங்கர' இரவுகள்
12 வது தேர்தல் முடிவுகளைக் கேட்டு பதறிப் போயிருப்பர் பாரிசான் காரர்கள்! ஆடிக் களித்திருப்பர் கெஅடிலான் அங்கத்தினர்கள்! மனம் ஒடிந்து போயிருப்பர் ம.இ.காவினர். வெற்றிப் பேரிகை கொட்டியிருப்பர் ஜசெகவினர்.
ஆனால் நான்? தேர்தல் முடிவுகள் வர வர என் குடும்பத்தில் எல்லாரும் வீடு வந்து சேர்ந்து விட்டார்களா, இன்னும் யார் யார் வீடு வந்து சேரவில்லை. இப்போது எங்கு இருக்கிறார்கள். எத்தனை மணிக்கு வருவார்கள் என அறிவதில் தொலைபேசியும் கையுமாக மும்முரம் காட்டிக் கொண்டிருந்தேன். இனம் தெரியாத கவலை ஒன்று இதயத்தை நெருடிக் கொண்டிருந்தது.
காரணம் கடந்த கால அனுபவம்!
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அந்த அனுபவத்தை இன்று மட்டுமல்ல என்றுமே மறக்க முடியாது என்னால்! "உலகிலேயே மகிழ்ச்சியான பிரதமர் நான்" என மகிழ்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்த துங்குவை மனம் நொந்து கண்ணீர் சிந்த வைத்த அந்த நாள் இந்த நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் நொந்துக் கொள்ள வைத்த துக்க நாள். 1969 மே 13!
அப்போதெல்லாம் எனக்கு இந்திப் படங்கள் என்றால் இதயம் கொள்ளாத மோகம்!
இன்ஸானியத்தையும் தெஸ்ரிஸ் மன்சிலையும் ஜனக் ஜனக் பாயில் பாஜேயையும் திஷ் தேஷ்மே கங்கா பக்தீயையும் எத்தனை முறை பார்த்திருப்பேன் என எனக்கேத் தெரியாது! வகிதா ரமான், சைரா பானு, வைஜயந்திமாலா போன்றவர்கள் கனவுக் கன்னிகளாகத் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்த காலம்!
இந்திப் பட கட்டழகிகள் இதய நாயகிகள்
இந்தக் கட்டழகிகளில் ஒருவர் நடித்த ஓர் இந்தித் திரைப்படத்தை பிரிக்பீல்ட்ஸ் (ஜாலான் துன் சம்பந்தன்) லிடோ தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன் அன்று. இரவு 7 மணிக்காட்சி. தியேட்டர் கொள்ளாதக் கூட்டம். அப்போதெல்லாம் சும்மா 'பொன்டியானாக்'கைப் (மலாய்) பார்க்கக் கூடுவதைவிட இந்திப் படங்களைப் பார்க்கத்தான் மலாய்க்காரர்கள் அதிகம் கூடுவர்!
படம் துவங்கி ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். இருண்ட தியேட்டருக்குள் ஏதோ ஒரு பரபரப்பு. பலர் எழுந்து பரபரப்புடன் வெளியேறத் துவங்கினர். நான் நகரவில்லை. ஒரு வெள்ளி 60 காசு கொடுத்து டிக்கெட் எடுத்திருக்கும் நான் படத்தை பாதியிலேயே விட்டுவிட்டுப் போக முடியுமா?
இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான தமிழ்ப் பத்திரிக்கைக்காரர்களான நாங்கள் காசு கொடுத்துப் படம் பார்ப்பதில்லை. லிடோ தியேட்டர் நிர்வாகியாக இருந்த அரசப்பன் தான் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களான எங்களுக்கு அந்தக் கால 'ஆஸ்ட்ரோ'! டெலிபோன் போட்டுச்சொல்லி விட்டால் 'பாஸ்' கொடுத்துவிடுவார். படம் துவங்குவதற்கு முன்னர் 'ஆமாம் இல்லை' போட்டி எல்லாம் நடத்தி குட்டி 'ஸ்டாராக' பிரபல்யம் அடைந்திருந்தார் அவர்.
அன்று நான் 'பாஸ்' கேட்காமல் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்ததால், பரபரப்பில் அக்கறை காட்டாமல் படத்திலேயே மூழ்கிப் போயிருந்தேன். நேரம் செல்லச் செல்ல தியேட்டருக்குள் பரபரப்பு அதிகரித்ததுடன் எல்லா இரசிகர்களுமே வெளியேறி வெறும் ஏழெட்டு பேர்கள் தான் எஞ்சியிருந்தனர்! படமும் நிறுத்தப்பட்டது! வேறு வழியின்றி நாங்களும் வெளியேறினோம்.
வெளியே வந்து பார்த்த போது பிரிக்பீல்ட்ஸ் முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தது. போலீஸ் காடிகள் ஒலிபெருக்கியில் ஏதேதோ அறிவிப்புக்கள் செய்தபடி பறந்து கொண்டிருந்தன. அடுத்த சில நிமிடங்களில் என்னோடு வெளியேவந்த அந்த ஐந்தாறு பேரையும் காணோம். எங்கே போனார்கள் எப்படிப் போனார்கள் என்பது தெரியவில்லை.
நான் லிடோ தியேட்டர் அருகிலிருந்த கதிஜா கம்பத்தின் முன்னால் இருந்த பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றேன். போலீஸ் காடியைத் தவிர சாலையில் வேறு வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. கடைசியாக வந்தது ஒரு பஸ். நான் முன்னே ஓடிவந்து கையை நீட்டி நிறுத்த முயன்றேன். வேகத்தைக் குறைத்தது பஸ். ஆனால் நிற்கவில்லை! கண்டக்டர் ஓர் இந்தியர்.
"யோவ்! சண்டை நடக்குது. ஆள் ஏத்தமாட்டோம்" என்று கண்டக்டர் குரல் கொடுக்க, பஸ் மீண்டும் வேகம் எடுத்துச் சென்றது!
- தமிழர் கதை தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment