மரத்தடியில் பிறந்த மறத் தமி்ழர்கள்! (தொடர் 4)
>> Monday, March 31, 2008
இவரின் தந்தை திரு.கைலாசம் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தினராக இருந்தவர். பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.பிக்கும், எஸ்.பி.எஸ்.சுக்கும் கைலாசம் என்றால் சிம்மசொப்பனம். தலைவர்களுக்குத் தர்ம சங்கடத்தை தரும் கேள்விகளை எல்லார் முன்னிலையுலும் கேட்கத் தயங்காதவர்.
இந்த ரமணியின் தம்பி ஜெயபாலன் மி்ஷின்மேனாக வேலைச் செய்தார். தீவிர முருக பக்தன். தைப்பூச திருநாளுக்காக பத்துமலையில் தொண்டு செய்து கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து அடிபட்டு மி்க இளம் வயதில் காலமானார்.
சி.இ.பி.யில் வேலை செய்த ரமணி மற்றும் சில இளைஞர்களுடன் அக்கட்டடத்தின் மேல்மாடியில் தங்கி இருந்திருக்கிறார். அவருடன் போய் அந்த இளைஞர்களுடன் வானும் அடுத்த மூன்று நாட்களை அங்கேயே கழித்தேன். மூன்றாவது மாடியில் தங்கியிருந்த ஒரு சீனக் குடும்பத்தினர் எங்களுக்கெல்லாம் அந்த மூன்று நாட்களும் சாப்பாடு கொடுத்ததும், தங்கள் வீட்டு ஐஸ்பெட்டியைக் காலி செய்ய எங்களை அனுமதித்ததும் எனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லை. ஆபத்துச் சமயத்தில் மனித கர்வமும் மாறுபட்டே போகின்றன.
பகல் நேரத்தில் பங்சார் ரோட்டில் நடந்த பல சம்பவங்களை மாடி ஜன்னல் வழியாகப் பார்த்தோம். அவை இன்றும் என் நெஞ்சில் ஆறாத காயங்களாகவே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது ஓர் இராணுவ லோரியில் ஏறி கம்போங் குறிஞ்சி வந்து சேர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கடைகள் பல எரிக்கப்பட்டுத் தரைமட்டமாகிக் கிடந்தன.
இயற்கை மனிதனுக்கு எல்லாச் செல்வங்களையும் தந்திருக்கிறது. அனுபவிக்க ஆயிரமாயிரம் இன்பங்களைத் தந்திருக்கிறது. மனிதர்களான நாம் நமது அகம்பாவத்தாலும் பொறாமையாலும் மன ஊனத்தாலும் அனைத்தையும் பாழ்படுத்திக் கொள்கிறோம்.
யானைகள் மோதிக்கொள்ளும் போது புற்கள் மடிவதைப் போல, சுயநல அகம்பாவ அரசியல்வாதிகளின் மோதலில் அப்பாவி மக்கள் அல்லல்படுகின்றனர்.
இன, நிற, மத பேதங்கள் சாதாரண மக்களிடையே இல்லை. அவர்கள் உள்ளத்தில் இருப்பதும் எதிர்பார்ப்பதும் உணவு, உடை, இருப்பிடம் இவைதான். ஆனால் இந்த அப்பாவி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு இன நிற மத பேதங்களைத் தூண்டிவிட்டு சில அரசியல்வாதிகள் குளிர்காய்கின்றனர்.
உலகம் முழுவதும் இன்றும் நடைப்பெற்றுவரும் சூழ்ச்சிகள் மலேசிய மக்களிடம் தோல்வி கண்டுவிட்டது என்பதை அண்மையப் பொதுத்தேர்தல்களும் அதன் முடிவுகளும் காட்டின. இந்தியா உலகில் மி்கப்பெரிய ஜனநாயக நாடு எனப் பெயர் எடுத்தது போல், மலேசியா மி்கச் சிறந்த ஜனநாயகச் செயல்முறை தேசம் என இத்தேர்தல் மூலம் பெயரெடுத்துவிட்டது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கூட நாம் கற்பனை செய்து பார்த்திராத இந்த ஜனநாயக நேர்மைமி்க்க தேர்தலுக்குக் காரணமானவர் பிரதமர் டத்தோ சிறீ அப்துல்லா அகமது படாவி என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அவற்றைச் சமாளித்து வெற்றி பெற முடியும் என்பதையும் மலேசிய மக்கள் இன பேதங்களைக் கடந்து முடிவெடுக்கக் கூடியவர் அன்வார் இப்ராகிமையும் நாம் மறந்துவிட முடியாது.
தலைவர்கள் வரலாம் போகலாம். நாடும் மக்களும் என்றும் இருப்பார்கள். இன்றைய பெரிய பிரச்சனை நாளைக்குச் சிறிய பிரச்சனையாகும். பிரச்சனைகளுக்காக ஒற்றுமையை அமைதியைச் சீர்குலைத்து விடக்கூடாது. அதிகம் போகவேண்டாம். ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் தமி்ழ்ப்படம் ஒளிபரப்பப்படாதா என்பதும் பெரும் பிரச்சனையாக இருந்தது. தமி்ழ்ப்படம் ஒன்றை ஒளிபரப்ப ஒப்புக் கொள்ளச் செய்து விட்டதை மாபெரும் சாதனையாகப் பத்திரிக்கைகளில் தங்கள் படத்துடன் செய்திகள் வெளியிட்ட அரசியல்வாதிகளையும் நாம் கடந்த காலத்தில் சந்தித்திருக்கின்றோம். மக்களும் அந்தச் சாதனையையே தங்கள் சமுதாயத்தின் வெற்றி எனக் கருதிய காலம் ஒன்றும் அன்று இருந்தது.
இன்று என்ன ஆச்சு?
இரவும் பகலும் நமது தொலைக்காட்சிகளில் தமி்ழ்ப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. பார்த்துப் பார்த்துச் சலித்து போய்விட்டது நமக்கு. அன்று இந்தச் சினிமா படப்பிரச்சனையை பெரிதாக்கி மோதிக் கொண்டிருந்தால் இன்றைய சமுதாயம் நம்மைக் கண்டு சிரித்திருக்காதா?
இப்படித்தான் எல்லாப் பிரச்சனைகளுமே மக்களின் மன பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் சக்திகளுக்குச் சமுதாயம் ஒரு போதும் இடம் தரக்கூடாது. அமைதியான வாழ்க்கைக்காகத்தான் அனைத்து நியமங்களும், நியமனங்களும் அமைதியையும் சுதந்திர வாழ்க்கையையும் நாம் எதற்காகவும் பணயம் வைக்கக் கூடாது. எந்த ஒரு தலைவரும் நமக்குச் சாசுவதம் அல்ல! நிடரந்தரம் இல்லை. புதிய புதிய தலைமைத்துவங்களுக்கும் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஊக்கம் கொடுப்போம். அரசியல் துறை மட்டுமல்ல! தொழ்ற்சங்கத் துறை கூட்டுறவு சங்கத் துறை மற்ற சமுதாய, சமய இலக்கியத்துறை அனைத்திலும் செக்குபோல் ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் போக்கு மாறவேண்டும். ' கங்காணி' மனப்பானமையும் நிர்வாக முறையும் அடியோடு அழித்தொழிக்கப்பட வேண்டும்.
இந்த மாறுதல்கள் ஏற்பட மக்களிடையே சிந்தனை மாற்றம் தேவை!
அத்தகைய மாற்றங்களுக்கு மலேசிய மக்கள் இப்போது தயாராகிவிட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருப்பவர்களும் இந்தப் புத்தெழுச்சியைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அங்கத்தினர்கள் வெறும் கைத்தூக்கிகளாக அமர்ந்திருந்து ஆண்டு பேராளர் கூட்டங்களில் அனைவரும் சிரிக்கச் சிரிக்க உரையாற்றி வந்துவிட்டால் போதாது! சிந்தித்துச் செய்யும் விதத்தில் பேச வேண்டும் சிந்திக்க வேண்டும். எத்தனையோ இயக்கங்கள் நம்மி்டையே இருக்கின்றன. இலட்சக்கணக்கானவர்கள் அங்கத்தினர்களாக இருக்கின்றனர். ஆனால் அந்தந்த இயக்கங்களின் அமைப்புச் சட்ட விதிமுறைகளை எத்தனை பேர் படித்திருப்பர்?
அண்மையில் நான் சார்ந்திருக்கும் ஒரு கூட்டுறவுக் கழகத்தின் அங்கத்தினர்கள் பலரிடம் அக்கழகத்தின் அமைப்புச் சட்டவிதி முறைகளைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்.
அதை அவர்கள் பார்த்தது கூட இல்லை என்றனர். சட்டங்களே தெரியாவிட்டால் அச்சட்டங்களைத் தலைவர்கள் மீறுகிறார்களா இல்லையா என்பதை எப்படி அறிய முடியும்?
தமி்ழர் கதை தொடரும்...
பாவலர் சங்கு சண்முகம்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment