'சின்னப் புள்ளத் தனமாலே இருக்கு'

>> Monday, March 24, 2008


ஒரு பக்கம் திரங்கானு மாநில அம்னோ தலைவரான இட்ரிஸ்சை திரங்கானு மந்திரி புசாராக நியமனம் செய்ய வேண்டும் என பிரதமர் அப்துல்லா அகமது படாவி அடம் பிடிக்க, மற்றொரு பக்கம் எனக்கும் அடம் பிடிக்கத் தெரியும் என நாட்டின் பேரரசர் மிஸான் ஜைனால் அபிடின் கீஜால் சட்டமன்ற உறுப்பினரான அகமது சாயிட்டை மந்திரி புசாராக நியமனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் விளைவு, 22 பாரிசான் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அந்நிகழ்வுக்கு கல்தா கொடுத்து விட்டனர்.

எனவே, இன்று நடைப்பெறவிருந்த பதவியேற்பு விழா வருகின்ற புதன் கிழமை நடைப்பெறவிருக்கிறதாம். இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், அம்னோ தலைமைத்துவத்தை அவமதித்து மந்திரி புசார் பதவியை ஏற்றுக் கொள்ள சம்மதித்த அகமது சாயிட்டை, பிரதமர் அம்னோ கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டாராம்.


எது எப்படி இருந்தாலும், சுல்தான் சம்மதத்தின் பேரில் நியமிக்கும் ஒருவரே எந்த ஒரு பதவியிலும் அமர முடியும் என்பது சட்டபூர்வமானது என்கின்றனர் ஒரு சிலர். பிறகு எதற்கையா ஜனநாயகம் என்றப் பெயரில் தேர்தல் மன்னாங்கட்டி என்று வைக்கிறீர்கள்? பேசாமல், இருக்கின்ற சுல்தான்களையும் பேரரசரையும் நாட்டின் பிரதிநிதிகளை சுயவிருப்பத்திற்கேற்ப நியமித்துவிட வேண்டியதுதானே?

இதுதான் ஜனநாயக நாடா? மக்கள் கஷ்டப்பட்டு தேர்ந்தெடுப்பார்களாம், ஆனால் இறுதி முடிவு பேரரசர் கையிலாம்...!! வேடிக்கையான நாடு நம் மலேசியா...! பல லட்ச மக்களின் கையில் ஆளுக்கொரு ஓட்டுதான் இருக்கின்றது, ஆனால் பேரரசருக்கும் இதர மாநில சுல்தான்களுக்கும் ஆளுக்கு பல லட்ச ஓட்டுகள் கையில் இருக்கும்போல் தெரிகிறதே...!


சரி, அது கிடக்கட்டும்.. மாநில மந்திரி புசாராக வருவதற்கு ஒரு தகுதி வேண்டாமா? பேரரசரைக் கேட்டால், இட்ரீஸ் திரங்கானு மந்திரி புசாராக இருந்தக் காலக்கட்டத்தில், திரங்கானுவில் நடைப்பெற்ற பத்து பூரோக் கலவரத்தையும் மற்றும் தேர்தல் சமயம் நடந்தக் கலவரங்களையும் கையாண்ட முறை சரியில்லை எனக் குற்றம் சாட்டுகிறார். அதனால்தான் இம்முறை இட்ரீஸ்சுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது அவரது வாதமாக இருக்கிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் சுபிட்சத்தை கொண்டு வரும் முயற்சியாக புதிய மாநில மந்திரி புசாரை நியமிப்பது ஏற்புடையது என அவ்ர் நினைக்கிறார் போலும்.

ஆனால், குரங்குக் கையில் இருந்த பூமாலையை முதலை வாயில் போட்டக் கதையாகி விட்டது, இந்த மந்திரி புசார் நியமனம்! பேரரசர் முன்மொழிந்த அகமது சாயிட் மாநிலத்தை நிர்வகிக்க தகுதியானவரா என அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன. வாசகர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம்ம அகமது சாயிட் அண்ணாச்சி ஒரு நாள் மாநில சட்டமன்ற அவையில் என்னக் கூத்து பண்ணினார் எனப் பார்ப்போம்..இப்படி விளக்கெண்ணையாய் பேசி மந்திரி புசார் பதவி கிடைக்கும் என்றால் நானும் அதற்கு ரெடி..!இரண்டாவது படச்சுருள் நாடறிந்த ஒரு விஷயம், நமது அண்ணாச்சி அட்னான் யாக்கூப் (பகாங் மந்திரி புசார்) பலப் பேர் கூடியிருந்த வேளையில், எனக்கென்ன என்ற தோரணையுடன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒருவரை நோக்கி செய்த சைகையிது.. அவரின் பக்கத்தில் ஒரு பொக்கை வாய் செம சிரி சிரிக்கும், அதையும் பார்க்க மறவாதீர்கள்... இப்படி செய்தால் மந்திரி புசார் பதவி கிடைக்கும் என்றால், அதற்கும் நான் ரெடி!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP