அரியணை ஏறுகிறது தமிழ் மொழி..
>> Sunday, March 30, 2008
தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு கொண்டுவர நடவடிக்கை
சென்னை, மார்ச் 30- தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கூறினார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் 'குறிஞ்சி முத்தமிழ் மன்றம்' என்ற அமைப்பைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். இந்த மன்றத்தின் ஆண்டு விழா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைப்பெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
பொதுவாகவே மருத்துவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடைவெளி அதிகம். இப்படிப்பட்ட நிலையில், அறிவியல் தமிழை வளர்க்கும் நோக்கில் தனி அமைப்பை ஏற்படுத்தி அதைத் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது. முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ் அரியணை ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த வகையில் மருத்துவத் துறையிலும் தமிழ் அரியணை ஏறும். மருத்துவத்துறையில் தமிழ்வழியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நான் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். அதற்காக மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களிடம் கொடுத்த வாக்குறுதி கண்டிப்பாக காப்பாற்றப்படும். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் சென்னைக்கு அருகே அலமாதி என்ற கிராமத்தை தத்தெடுத்து மருத்துவச் சேவை செய்து வருகின்றனர். ஒரு கிராமத்தை மட்டுமல்ல, ஏராளமான கிராமங்களை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்து சேவையாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். ஏதோ கல்லூரிக்கு போனோம் படித்தோம், சினிமாவுக்குப் போனோம் என்று நின்றுவிடாமல் பொதுவாழ்வுக்காகப் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.
தகவல் : ஞாயிறு நண்பன் (நன்றி)
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment