மரத்தடியில் பிறந்த மறத் தமிழர்கள் ( தொடர் 2)
>> Monday, March 24, 2008
கோலாலம்பூரில் நீண்ட காலமாக வசிக்கும் நான், பல 'கேங் பைட்'களைப் பார்த்திருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுபோல் ஊரே வெறிச்சோடிப் போய், போலீஸ் வாகனங்கள் ஒலி பெருக்கிகள் அலற இங்கும் அங்கும் ஓடிப்பார்த்ததில்லை.
உண்மையிலேயே இது பெரிய சீரியஸான விஷயம்தான் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அந்த நாளில் நாங்கள் குடியிருந்தது கம்போங் குறிஞ்சி. இப்போது அங்காசாபுரி இருக்கும் இடத்திலிருந்து இன்னும் சிறிது மேலே சென்றால் ஒரு மலை முகட்டைத் தாண்டிய பள்ளத்திற்குள் ஒளிந்துக் கொண்டிருந்த கம்பத்து வீடு.
போவதெங்கே புரியவில்லை
பிரிக்பீல்ட்சிற்கும் அதற்கும் வெகுதூரம். இதுபோன்ற கலவர நேரத்தில் நடந்து போவது இயலாது. எங்கே தங்குவது எப்படிப் போவது? சாலையில் நிற்பதோ நடப்பதோ பெரிய ஆபத்தானது என்பது எனக்குப் புரிந்தது. கலவரக்காரர்களில் ஒருவன் எனக் கருதி சுடப்படலாம், அல்லது கலவரக்காரர்களால் தாக்கப்படலாம். செய்வதறியாது திகைத்தேன் நான்.
அமைதியும், சுதந்திரமும் உள்ள வாழ்க்கையின் பெருமை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தான் நமக்குப் புரிகிறது. வியாபார நிலையங்கள் வீடுகள் அனைத்தும் மூடப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. நமக்கு முன்பின் அறிமுகமானவர்களைத் தவிர வேறு எவரும் கதவைத் திறக்க மாட்டார்கள். அடைக்கலம் தரமாட்டார்கள் என்பது திண்ணம். யோசித்தேன்! பிரிக்பீல்ட்ஸ் லாசாலே பள்ளிக்கு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கும் பஞ்சாட்சரம் கம்பத்திலே நீலகண்டராவ் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், சுங்கை சிப்புட் 'மலைநாடு' அச்சகத்தில் நான் பணியாற்றிய போது போர்மேன்னாக இருந்தவர். அவர் வீட்டில் போய் தங்கி இரவைக் கழித்துவிட்டு மறுநாள் காலையில் போகலாம் என எண்ணினேன். ஆனால், நம்மை வரவேற்று வீட்டில் இரவு தங்க இடம் தருவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
காரணம் நான் பலமுறை அவரை பிரிக்பீல்ட்சிலும், பஞ்சாட்சரம் கம்பத்திலும் சந்தித்திருக்கின்றேன். ஆனால் பேசிவிட்டு ஏதாவது சல்ஜாப்புகள் கூறிவிட்டு நழுவி விடுவாரே தவிர 'வீட்டுக்கு வாரும்' என என்னை அழைத்ததில்லை.
"உங்கள் வீட்டுக்கு ஒருநாள் வரணும் ஜி!" என்று நான் கூறினாலும் கூட எங்கையா நான் ரொம்ப வீட்டிலே இருக்கிறதில்லை!" எனக் கூறித் தவிர்த்துவிடுவார்.
அவரைச் சொல்லியும் குற்றம் இல்லை! அவருக்கு இரண்டு அழகிய பெண் பிள்ளைகள் இருந்தனர். வம்பை விலை கொடுத்து வாங்குவானேன் என என்னை அவர் வீட்டுக்கு வரவிடாமல் தடுத்திருக்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் நானும் அப்படி ஓர் எண்ணத்தை உள்மனத்தில் வைத்துக் கொண்டுதான் அவர் வீட்டுக்கும் பல முறை செல்ல முயன்றேன். அவர் அப்போது என்னைத் தவிர்த்த போதிலும் பிற்காலத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரே எனக்கு மாமனார் ஆனார்! ( அது ஒரு சுவாரசியமான் கதை)
-தமிழர் கதை தொடரும்
-பாவலர் சங்கு சண்முகம்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment