மரத்தடியில் பிறந்த மறத்தமி்ழர்கள் (தொடர் 5)
>> Monday, March 31, 2008
அச்சம் இருக்க வேண்டும்
சட்டங்களை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் அங்கத்தினர்களுக்கும் தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். வெறும் கைத்தூக்கிகளாகவும் தனிமனித துதிபாடுபவர்களாகவும் அங்கத்தினர்கள் இருக்கக்கூடாது.
அப்போதுதான் நேர்மையான தலைவர்கள் உருவாவார்கள். வெறும் வாரிசு தலைமைத்துவ முறைகள் தகர்க்கப்படும். வாரிசுகளாக இருப்பினும் அவர்கள் உண்மையான தியாகிகளாக இருந்தால்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர் என்னும் நியதி உறுதிபடுத்தப்படும்.
எதிர்காலத்தில் எத்தனை தேர்தல்கள் நடந்தாலும், எந்தக் கட்சி வென்றாலும், எந்தத் தரப்புத் தோற்றாலும், நிரந்தரமான வெற்றி தேச அமைதிக்கும் நிரந்தரமான தோல்வி இன, மதப் பிளவுக் கொள்கைகளுக்கும் ஏற்பட வேண்டும் என்பதே 1969 மே 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை துன்பப்பட்ட என்போன்றவர்களின் பிரார்த்தனை!
இன, சமய ஒற்றுமையைப் பொருத்தவரை நம் நாட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் நகர்ப்புற மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்திருக்கின்றனர்! ஒருவர் தலைமைத்துவத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கை முறையே நம் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது!
இந்தியர்கள் இந்தியத் தலைவர்கள் மூலமாகவும் சீனர்கள் சீனத்தலைவர்கள் மூலமாகவும், மலாய்க்காரர்கள் மலாய்க்காரத்தலைவர்கள் மூலமாகவும்தான் அரசாங்கத்தை அணுக முடியும் அனுகூலங்களை அடைய முடியும் என்னும் பழைய கொள்கைக்குப் பாக்குப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த கங்காணி முறையையும் மாற்றி அமைத்து தோட்டத்தொழிலாளர் வாழ்க்கை முறையை தேசம் முழுவதும் அமுல்படுத்துவதே நல்லது!
அரசியலில் மட்டுமல்ல எத்துறையிலும் வெற்றியும், தோல்வியும் வெயிலும் மழையும் போல! பெய்வதும் காய்வதும் நிரந்தரமல்ல! இன்றுத் தோல்விப் பாதையை எதிர்நோக்கியுள்ள ஆளும் பாரிசானில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும் தோல்வியிலும் வெற்றியிலும் துவைத்து எடுக்கபட்டவையே!
ஒருகாலத்தில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட டேவிட்டிலிருந்து கங்கா நாயர்வரை வெற்றிக்கொடி நாட்டினர். பின்னர் தோல்வி அவர்களைத் துரத்தியது! இன்று பாரிசானுக்குப் பரிதாப நிலை! ஏதிர்காலத்தில் இவர்கள் இழந்த வெற்றியை மீண்டும் பெறலாம்.
இதுதான் ஜனநாயகம்! அரசியல்! தோல்வியில் துவளாதவர்களே வெற்றிப்பாதையில் வீறுநடை போட முடியும்!
லிம் குவான் எங்கும், அன்வாரும் தோல்விகளையும் சிறைக்கோட்டையையும் கண்டு துவண்டிருந்தால் இன்று வெற்றிக் கனியைத் தட்டி பறித்திருக்க முடியாது!
தமி்ழர் கதை தொடரும்...
பாவலர் சங்கு சண்முகம்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment