மரத்தடியில் பிறந்த மறத் தமிழர்கள்! (தொடர் 3)
>> Tuesday, March 25, 2008
மதியாரும் மாமனாரும்
வருங்கால மாமனார் என அப்போது எனக்குத் தெரியாததால், மதியார் வாசலை மிதியாதே என்பதுபோல் அவர் வீட்டுக்குப் போகாமல் பங்சார் ரோட்டை நோக்கி நடந்தேன். வெள்ளைக் கைக்குட்டையை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டேன் சரண்டரின் சின்னமாக.
பங்சாரில் நடு ரோட்டில் சில மோட்டார் சைக்கிள்களும் காடிகளும் எரிக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருந்தன! போலீஸ் காடிகளின் ஓட்டமும் நின்று போய் இருந்தது. ஆன் சென் ரோட்டுப் பக்கமிருந்தும் ஆஜி டோலா கம்பத்துப் பகுதியிலிருந்தும் எதோ ஆரவாரமான சப்தங்களும் கூக்குரல்களும், இனங்காண முடியாத அலறல் சப்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.
இனிமேலும் சாலையில் நடப்பது சரியில்லை என முடிவுக்கு வந்த நான், சாலை ஓரமாக இருந்த இரயில்வே தொழிலாளர் குடியிருப்புகள் ஏதேனும் ஒன்றில் இரவைக் கழிக்கலாம் என்று எண்ணினேன். அப்போதுதான் ராதாமணியின் வீடு அங்கு இருப்பது நினைவுக்கு வந்தது.
அப்போது தமிழர் திருநாள் நாடகங்களில் எங்களுடன் நடித்துவந்தவர் ராதாமணி. பிற்காலத்தில் இவர் புகழ்பெற்ற வானொலி நடிகையானார். பிரபல எழுத்தாளர் பெரி நில பழனிவேலனை மணந்து கொண்டு சிங்கப்பூருக்குச் சென்றார். தமிழை மிக அழகாகப் பேசும் நம் நாட்டு நடிகையரில் முக்கியமானவர்.
இரயில்வே குவார்ட்டர்சில் இருந்த இவர்களது வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினேன் தட்டினேன். திறக்கப்படவில்லை. வீட்டில் யாரும் இல்லையா? அல்லது பயந்துக்கொண்டு திறக்கப்படவில்லையா என்பது தெரியவில்லை.
வேறுவழியில்லை! எப்படியோ நடந்துதான் சென்றாகவேண்டும். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, சாலையைக் கடந்து லீவர் பிரதர்ஸ் பக்கம் வந்து பந்தாய் பகுதியை நோக்கி வேக நடைப்போட்டேன். திடீரென ஒரு கும்பல் கம்பத்துப் பக்கமிருந்து ஓடி வந்து கத்திக் கொண்டே யாரையோ விரட்டிக் கொண்டு பந்தாய் டாலாம் திசையை நோக்கி ஓடியது! இனியும் நடந்து செல்வது பெரும் ஆபத்து! அருகே இருந்தது பூங்கா ராயா ரெஸ்டாரண்டுக்கு ஓடிச் சென்று கதவைப் பலமாகத் தட்டினேன். மீண்டும் மீண்டும் தட்டிய பிறகு இலேசாகக் கதவைத் திறந்து மூக்கைமட்டும் வெளியே நீட்டிக் கொண்டு பார்த்தது ஓர் உருவம்.
விஷயத்தை விளக்கி, இன்று இரவு மட்டும் தங்க இடம் தரும்படி கெஞ்சினேன். மலையாளமும் தமிழும் கலந்து "அடபயம் வாணாம். இப்படியே சி.இ.பி. குள்ளே பூந்து போ நம்ம ஆள்களை ஒண்ணும் செய்யாது!? என்று கூறிவிட்டுக் கதவைப் பட்டென மூடிக்கொண்டார் அந்த மனிதர்.
இதுபோன்ற சந்தர்ப்பத்தில், நகர் முழுமைக்கும் மின்சாரம் விநியோகிக்கும் சி.இ.பி. பவர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்! நகர மின்சார விநியோகத்தைக் கீழறுப்புச் செய்ய எவனோ புகுந்து விட்டான் என என்னைப் போட்டுத் தள்ளிவிட மாட்டார்களா? புத்திசாலித்தனமாக சி.இ.பி பவர் ஸ்டேஷனுக்கு நுழையவில்லை நான்.
அடுத்த கட்டடத்தின் நுழைவாசலில் கம்பி கேட் இல்லை. உள்ளே சென்றேன். கும்மிருட்டு! கரப்பான் பூச்சி நாற்றம். உலகிலேயே எனக்கு இரண்டே இரண்டிற்குத்தான் அதிகப் பயம்! ஒன்று, நம்பவைத்துக் கழுத்தறுக்கும் நாசக்காரர்கள், மற்றொன்று கரப்பான் பூச்சி! வேறு என்ன செய்வது.
'நாயர் பிடிச்ச புலிவாலு!' என்பதுபோல், திரும்பி பிரிக்பீல்ட்ஸை நோக்கிப் போவதும் முடியாது தொடர்ந்து கம்போங் குறிஞ்சியை நோக்கிச் செல்லவும் முடியாது! கலவரத்தில் சிக்குவதைவிட, கரப்பான் பூச்சிகளிடையே உட்கார்ந்திருப்பது உசிதம் எனப்பட்டது.
கட்டடத்திற்குள் நுழைந்தேன். மாடிப்படிகளுக்குக் கீழே படுத்துக்கொள்ளத் தக்க இடம் இருந்தது. விடியும் வரை அங்கேயே ஒளிந்திருக்கலாம் காலையில் பயணத்தைத் துவங்கலாம் என முடிவு செய்தேன்.
நேரம் செல்லச் செல்ல அச்சம் அதிகரித்தது. சாலையில் யார்யாரோ இங்கும் அங்கும் ஓடுவதும் யாரோ யாரையோ விரட்டிச் செல்வதுமாக அப்போதைக்கப்போது சப்தம். 'நிமிடம் வருடமாக நகர்ந்தது' எனக் கதைகளில் படிக்கிறோம். அதை அப்போதுதான் உணர்ந்தேன். வெளியே கலகக்காரர்கள் நடமாட்டம். உள்ளே கரப்பான் பூச்சிகளின் தாக்குதல். கட்டடத்திற்கு வெளியே வாசல் ஓரமாக நாலைந்து பேரின் நடமாட்ட அரவம். ஏதோ தகரடின்களை திறப்பது போன்ற சப்தம், வந்து எட்டிப்பார்க்கும் தைரியம் எனக்கில்லை.
கட்டடத்தைப் பற்றவைத்துவிடுவார்களோ! இந்த இடமும் பாதுகாப்பு இல்லை என்பது உறுதி. இங்கிருந்து வெளியாகிவிட வேண்டும். காத்திருந்தேன். கட்டடத்தின் ஓரமாகக் கேட்ட சப்தம் நின்றதும் மெதுவாக வந்து எட்டிப் பார்த்தேன்.
ஒருவரும் இல்லை. வெளியே வந்து திகைத்து நின்றேன். என்ன செய்வது? எங்கே செல்வது? ஒன்றும் புரியவில்லை. இந்தக் கோலாலம்பூரில் நடுவீதியில் நிற்கும் நிலை எனக்கு ஏற்படும் என எண்ணிக்கூடப் பார்த்தது இல்லை நான்!
"குடை நிழல் ஏறிக் குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்தோர் நாள் நண்ணினும் நண்ணுவர்! எனத் தெரியாமலா சொன்னார்கள்!
கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் எல்லாம் சொகுசாக பாதுகாப்பாக வீட்டுக்குள் குடும்பத்துடன் குதூகலமாக இருக்கிறார்கள்! அப்பாவிகளான நாம் அல்லல்பட்டு நடுவீதியில் நிற்கிறோம். கட்டத்திற்கு வெளியே கிடந்த தகர டின்னும் எண்ணெய் நாற்றமும் தீமூட்டும் முயற்சி நடந்திருக்கிறது என்பதைக் காட்டியது. தீவைப்பு முயற்சியை மேற்கொண்டவர்கள் போலீஸ் காடியின் சப்தம் கேட்டு ஓடி ஒளிந்திருக்கலாம் அல்லது அது காங்கிரீட் கட்டடமானதால் தீவைக்கும் முயற்சி பலிக்காமல் போயிருக்கலாம். கட்டடத்தின் முதல் மாடி ஜன்னல் திறக்கப்பட்டு விளக்கு எரிந்தது. ஆள் நடமாட்டம் தெரிந்தது. உதவி கேட்டு பலமாகக் குரல் கொடுத்தேன். மேலே இருந்து ஓர் உருவம் தலையை நீட்டி என்னை உற்றுபார்த்து விட்டு " சார் நீங்களா? இங்கே என்ன செய்கிறீர்கள்? " எனக் குரல் கொடுத்தது.
எனக்கு அது யார் என்று உடனடியாகத் தெரியாவிட்டாலும் யாரோ அறிமுகமானவர்கள் என அறிந்ததும் போன உயிர் திரும்பி வந்தது.
" ஆமா... ஆமா... இராத்திரிதர்களும்... அதுதான் என்று கத்தினேன்.
கதவைத் திறந்து கொண்டு வந்து அன்று என்னைக் காப்பாற்றியது ரமணி.
தமிழர் கதை தொடரும்...
-பாவலர் சங்கு சண்முகம்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment