புந்தோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் பதவி விலகல்..!!!
>> Monday, March 31, 2008
பொதுதேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது ச.செ.கா கட்சி பேரா மாநில ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதாக, பேராக் இந்தியர்களுக்கு வாக்குறுதி அளித்ததை மறந்துவிட முடியாது.
ஆனால் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டனர் ச.செ.க வினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாரப்பூர்வமாக புந்தோங் தொகுதி மாநில சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் தனது பதவியிலிருந்து விலகியிருக்கிறார். பேராக் மாநில ஆட்சிக் குழுவில் ஓர் இந்தியருக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தது இந்திய மக்களுக்கு பேரிடியும் பெருத்த ஏமாற்றமும் ஆகும் என ச.செ.க கட்சி தேசிய செயளாலர் லிம் குவான் எங்கிற்கு அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திரு.சிவ சுப்பிரமணியம் அவர்களின் பதவி விலகலும் இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிடியாகும். ஏற்கனவே பேராக் மாநில ஆட்சிக்குழுவில் இந்தியர்களுக்குப் போதிய இடம் கிடைக்காமல் வருத்தப்பட்ட சமூகத்திற்கு மீண்டும் ஒரு பேரிடியாக மாநில சட்டமன்ற உறுப்பினரான ஒரு இந்தியரை இன்று இழக்க நேரிட்டுள்ளது.
மலேசியாவிலேயே புந்தோங் தொகுதிதான் இந்தியர்களின் வாக்குகள் பெரும்பான்மை உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களின் இரும்புக் கோட்டையான புந்தோங் தொகுதியைப் பற்றி அறியாதவர்களுக்கு, இத்தொகுதியைப் பற்றி ஒரு பதிவை வருங்காலத்தில் இடுகிறேன்.
* இன்று பதவி விலகியதாகக் கூறிய திரு. சிவ சிப்பிரமணியம் சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பின் தனது பதவி விலகலை மீட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து புந்தோங் தொகுதி மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவியில் நீடிப்பார். இதேப் போன்று பொதுத் தேர்தல் நடைப்பெறுவதற்கு முன்பு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரான ஃபோங் போ குவான் பதவி விலகுவதாக அறிவித்தப் பின் சில நாட்களுக்குப் பின் தனது முடிவை மாற்றிக் கொண்டு பதவி விலகலை மீட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment