இருட்டு அறையில் 24 வருடங்கள் !! மகளை தந்தையே… !!

>> Wednesday, April 30, 2008


( கொடூரத்தை தனக்குள் புதைத்திருந்த வீடு )

இப்படிக் கூட உலகில் மனிதர்கள் இருக்கின்றார்களா எனுமளவுக்கு உறைய வைக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தச் செய்தி போல உறைய வைத்த செய்தியை சமீபகாலமாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

இருபத்து நான்கு வருடங்களாக தனது மகளை (எலிசபெத்) குகை போன்ற வெளிச்சமே நுழைய முடியாத அறைகளில் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்திருக்கிறான் ஒரு தந்தை.

சின்னச் சின்ன குறுகலான குகைகள் போன்ற ஐந்தடி உயரமே உள்ள, முழுவதும் அடைக்கப்பட்ட உறுதியான அறைகளில் அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறாள். ரகசிய அறை மூலம் தந்தை அந்த அறைகளுக்குச் செல்ல முடியும். அதற்கான நவீன கதவையும், அதைத் திறக்கும் சங்கேத எண்ணையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த அந்த கொடூரமான தந்தைக்கு இப்போது வயது 73.இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது வியன்னாவிலிருந்து 80 மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் பகுதியில்.

எலிசபெத் பதினெட்டு வயது சுட்டிப் பெண்ணாக இருந்தபோது அவளுடைய கைகளை கட்டி ஒரு இருட்டு அறைக்குள் பூட்டி அவளை பலாத்காரம் செய்த தந்தை, அவள் வீட்டை விட்டு ஓடி விட்டதாக நாடகமாடி எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறான்.

அதன்பின் அவளைக் கொண்டே, “ என்னைத் தேடாதீர்கள் “என்று ஒரு கடிதம் எழுதி வாங்கி அதை அனைவரிடமும் காண்பித்து இருட்டு வாழ்க்கையை அவளுக்கு நிரந்தரமாக்கியிருக்கிறான்.

அந்த மனிதாபிமானமற்ற விலங்கு, கடந்த இருபத்து நான்கு வருடங்களாக அவளை தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து எட்டு குழந்தைகளுக்குத் தாயாக்கி இருக்கிறது. வெளிச்சமே இல்லாத இருட்டு அறைகளில் அவள் தாய்மை நிலையில் பிரசவத்தை எதிர்கொள்ளும் கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.அவற்றில் ஒருமுறை பிறந்த இரட்டைக் குழந்தைகள் மருத்துவ கவனிப்புகள் இன்றி பிறந்த சில நாட்களிலேயே இறந்திருக்கின்றன.

தாயுடன் மூன்று குழந்தைகளையும் சன்னலோ, கதவோ, வெளிச்சமோ, வெளிக்காற்றோ இல்லாத அந்த அறைகளில் அடைத்து வைத்திருந்த கொடூர தந்தை மூன்று குழந்தைகளை தன்னுடன் வைத்து வளர்த்தியிருக்கிறான்.

வீட்டு வாசலில் பச்சைக் குழந்தையைப் போட்டு விட்டு மகள் கைப்பட “ எனக்கு வாழ வசதி இல்லை இந்தக் குழந்தையைக் காப்பாற்றுங்கள் “ என ஒரு கடிதம் எழுதி வாங்கி அதையும் குழந்தையுடன் வாசலில் வைத்து விட்டு மனைவியையும் ஏமாற்றி, சுற்றியிருப்பவர்களையும் ஏமாற்றியிருக்கிறான்.


(பதினெட்டு வயதில் எலிசபெத் vs மகள் மோனிகா வயது 14 )

அவனுடைய மனைவி, அதே வீட்டின் மாடியில் இந்த கொடுமைகள் குறித்த எந்த ஒரு அறிவும் இன்றி கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக பேரன், பேத்திகளுடன் தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார் என்பது வலியை இன்னும் அதிகப்படுத்துகிறது.

அறைகளில் தாயுடன் அடைபட்டுக் கிடந்த மூத்த மகள் கெர்ஸ்டினுக்கு, தீமையில் நிகழ்ந்த நன்மையாக, உடல் நிலை மிகவும் சீர் குலைந்திருக்கிறது. 19 வருடங்களாக் ஒரு சொட்டு சூரிய ஒளியைக் கூட காணாத அவளை தந்தை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றிருக்கிறான். அங்கே தான் இந்த பதற வைக்கும் உண்மை வெளி வந்திருக்கிறது.

மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமெனில் தாயிடமிருந்து சில தகவல்கள் பெற வேண்டுமென மருத்துவமனை வற்புறுத்தியதால் அந்தக் கொடூரத் தந்தை தனது மகளை இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அறைச் சிறையை விட்டு வெளியே கொண்டு வந்திருக்கிறான்.

மருத்துவமனையில் உடலும் மனமும் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையின் கொடுமைக்கு ஆளான மகள் சொன்ன கதைகளைக் கேட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. இனிமேல் தந்தையை நான் பார்க்கவே கூடாது எனும் கதறல் விண்ணப்பத்துக்கு உறுதி அளித்த பிறகே அந்த 42 வயது மகள் பேசியிருக்கிறார்.

11 வயது முதலே தன்னிடம் பாலியல் தவறுகள் செய்து வந்த தந்தை 1984 ஆகஸ்ட் 28ம் தியதி கைகளில் விலங்கிட்டு அறைகளுக்கு இழுத்துச் சென்றபோது இத்தனைக் கொடுமைகளைச் சந்திப்போம் என கனவிலும் நினைக்கவில்லை என்ற அவளுடைய கதறல் மனிதத்தின் மேல் அவமானமாய் படிகிறது.பதினெட்டு வயதான ஸ்டீபன், ஐந்து வயதான பெலிக்ஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 19 வயதான கெர்ஸ்டன் மற்றும் அந்தக் குழந்தைகளின் தாய் அனைவருமே உளவியல் ரீதியான அழுத்தத்தில் இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1993, 1994 மற்றும் 1997 களில் மூன்று குழந்தைகளை (அலெக்சாண்டர், மோனிகா, லிசா) கொடூரத் தந்தையே வாசலில் போட்டு விட்டு மகள் போட்டு விட்டுச் சென்றதாக எடுத்து வளர்த்தியிருக்கிறான்.

அந்த பரபரப்பான சாலையும், சுற்றியிருக்கும் மக்களும் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்த இந்த வயதானத் தம்பதியினரின் பின்னால் இப்படி ஒரு கொடூரத்தின் உச்சம் புதைந்து கிடக்கும் என தங்களது கனவின் ஓரத்திலும் கருதியிருக்க வாய்ப்பே இல்லை.அறைகளில் அடைபட்டுக் கிடந்த எலிசபெத்தின் ஐந்து சகோதர சகோதரிகளும் தங்கள் சகோதரிக்கு இப்படி ஒரு கொடூரமான நிலையில் இருப்பதைத் தெரியாமல் வசதியான இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

தினமும் தனது பேரன், பேத்திகளை பள்ளிக்கூடத்திற்கு கூட்டிச் செல்லும் வயதான பாட்டிக்கு தனது மகள், தான் குடியிருந்த வீட்டிலேலே இப்படி ஓர் அதிர்ச்சி வாழ்க்கையை வாழ்ந்து வந்தது தெரிந்திருக்கவில்லை.புனிதத்தின் உயர்நிலையில் வைத்து நாம் போற்றும் தந்தை மகள் உறவில் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருப்பது உயிரை உறைய வைக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது மகள் மீது தந்தை கொள்ளும் பலாத்கார நிகழ்வுகள் அவமானச் சின்னங்களாக முளைத்தெழுந்தாலும், 24 வருடங்களாக இருட்டு அறைகளில், குழந்தைகளோடு ஒரு அடிமையை விட அதிகபட்ச கேவலமான வாழ்க்கையை வழங்கியிருக்கும் தந்தை ஒட்டு மொத்த மனித குலத்தின் அவமானச் சின்னமாக உருவெடுத்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

மரணத்தை நோக்கிய பயணத்தில் முதுமையையும் கடந்து 73 வது வயதில் இருக்கும் கொடூரத் தந்தையை சட்டம் எப்படி தண்டித்தாலும் அது குறைவானதாகவே இருக்க முடியும். உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், வாழ்வின் முக்கியமான வருடங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்ட மகளுக்கு இனி வரும் காலமேனும் சற்று நிம்மதியான வாழ்க்கை அமைய பிரார்த்திப்பதை விட வேறென்ன செய்ய முடியும் நாம் ?

த‌க‌வ‌ல் : அல‌ச‌ல் (ந‌ன்றி)

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP