வேண்டுமென்றே உதயகுமாருக்கு மருந்து கொடுக்கப்படவில்லை!!!

>> Wednesday, April 9, 2008





கமுண்டின் தடுப்புக்காவல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயகுமார் நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக அவருக்கு வேண்டுமென்றே மருந்து கொடுக்கப்படவில்லை. அவரது இனிப்பு நீர் அளவு 18.8 ஆகும். உதயகுமாரின் வழக்கறிஞர் மலேசியகினியிடம் வழங்கியத் தகவல்.

டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இண்ட்ராப்பினர்களில் ஒருவரான உதயகுமாருக்கு கடந்த ஒரு மாத காலமாக வேண்டுமென்றே அவருக்கு தேவைப்படும் நீரிழிவு நோய்க்கான மருந்து கொடுக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞரான என்.சுரேந்தரன் இன்று மாலை மலேசியகினியிடம் கூறினார்.

இப்போது உதயகுமார் தைப்பிங் பொது மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறுநீரின் இனிப்பு அளவு 18.8 ஆக இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் கைவிலங்கிடப்பட்டுள்ளார்.

உதயகுமார் தான் நன்றாக இருப்பதாக கூறினாலும் அவர் மிக சோர்ந்த நிலையில் இருக்கிறார் என்று கண்ணீர் சிந்தியவாறு அவரது மனைவி மலேசியகினியிடம் கூறினார்.

“அவர் ஒரு குற்றமும் செய்யவில்லை. அவர் நிரபராதி. அவரை ஏன் இவ்வாறு கொடுமைப் படுத்துகிறார்கள்? அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் யார் பொறுப்பு? எனக்கு நீதி வேண்டும், ” என்று தழுதழுத்தக் குரலில் நீதி கேட்டார் உதய குமாரின் மனைவி!

பிரதமருக்கு எச்சரிக்கை

“உதயகுமாருக்கு நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், பிரதமர் அப்துல்லா படாவிதான் அதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்தார் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான மா.மனோகரன்.

“சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மலேசியா முழுவதிலும் ஆட்சேப பேரணியும் நடக்கும்”, என்று மனோகரன் மேலும் கூறினார்.

உதயகுமாரின் வழக்கறிஞர் என். சுரேந்திரன் ஏன் உதயகுமார் ஒரு கிரிமினல் குற்றவாளியைப்போல் நடத்தப்பட வேண்டும் என்று வினவினார்.

உதயகுமாரின் உடல்நிலை மோசமாகிக்கொண்டிருப்பதோடு கவலைக்குரியதாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

கமுண்டின் தடுப்புக்காவல் மைய அதிகாரிக்கு உதயகுமாரின் உடல்நிலை குறித்து கடிதம் எழுதியிருந்ததாகவும், ஆனால் அதற்கு எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் இப்போது உதயகுமார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வழக்கறிஞர் என். சுரேந்திரன் மேலும் கூறினார்.

உதயகுமாருக்கு உடனடியாக சிறப்பு மருத்துவ சிகிட்சை அளிக்கப்பட வேண்டும். அத்துடன் உதயகுமாரின் குடும்பத்தினர் அவருக்கு சிறப்பு மருத்துவ சிகிட்சை அளிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், இசா சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இண்ட்ராப்பினரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று மா. மனோகரன் கேட்டுக்கொண்டார்.

தகவல் : மலேசியாகினீ

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

thamilam08 April 10, 2008 at 8:48 PM  

5 இந்து உரிமைக்குழு நடவடிக்கை வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு “மிரட்டல்ல”
தமிழன் 08

இவர்களின் குற்றம்தான் என்ன?

மலேசியாவில் வாழும் இந்தியர்களின் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடிய இந்த 5 வீரர்களின் நிலமையை சற்று நினைத்துபாருங்கள். தற்போதைய பிரதமரும் அப்போதைய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சருமான அப்துல்லா அகமட் படாவி இந்த 5 வீரர்களின் கைதுகளுக்கான விண்ணப்பத்தில் கைச்சாத்திட்டார். முளுமையான பொலிஸ் தீரவிசாரணைகளுக்குப்பின் கையெழுத்திட்டார் எனவும் இவ்வைவரும் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு மிரட்டலாக உள்ளது என சட்டத்துறைத் தலைவர் கானி பட்டில் கூறியிருக்கின்றார். இவர் தனது உயர் நீதி மன்ற வாதத்தில்

(1) இவ்வைவரின் கடந்த கால நடவெடிக்கைகள் நாட்டின் இனவெறியும்
(2) அரசாங்கத்தின் மேலுள்ள வெறுப்பையும் தூண்டுவதாகவும்
(3) இவ்வைவரும் இலங்கையிலுள்ள பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுடன் (LTTE) தொடர்பு வைத்திருப்பதாகவும் இவர்கள் மூலம் கலவரத்தை இந்நாட்டில் தூண்டி விடுவதற்கும் வழிவுக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது உண்மையாக இருந்தால், சட்டத்துறைத் தலைவர் கானி பட்டில் இந்த உண்மையை இதுவரை காலமும் வெளியிட ஏன் முன்வரவில்லை. ஏனெனில் இந்த குற்றச்சாட்டில் எதுவித உண்மைமையோ ஆதாரங்களோ இல்லை. இந்நாட்டு மக்களுக்கு தெரியும் இந்த 5 வீரர்கள் நடவெடிக்கைகளில் எந்த ஒரு ஒளிவு மறைவோ சூழ்ச்சியோ இல்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை. வாய்பேச்சு மூலம் எவரையும் குற்றவாளியாக்கமுடியாது. உண்மையான, உறுதியான, உரமான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவேண்டும். இந்த மாதிரியான ஆதாரங்கள் இல்லாததால் இந்த அரசாங்கம் இசா (ISA) சட்டத்தை இவ்வைவரின் மேல் சுமர்தியுள்ளது. இதே குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்திற்கு வருமானால் அரசாங்கம் உண்மையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும். அப்படியாயின் இவ்வைவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் எப்போதே நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் இது ஒரு பொய்க்குற்றச்சாட்டு என்பதே உண்மை.

இனவெறி
நான் ஆணித்தரமாக பிடதமருக்கும், சட்டத்துறைத்தலைவருக்கும் மற்றும் சகல அரசாங்கத்திற்கும் கூறுவது என்னவென்றால் இனவாதத்தை தூண்டிவது இவ்வைவரும் காரணம் இல்லை. முழுக்காரணகர்த்தாக்கள் இந்த அரசாங்கமும், அவர்களின் இஸ்லாமிய முற்போக்குக் கொள்கைகளும் தான் இந்த இனவெறிக்கும் நம் நாட்டு மக்களின் பிரிவுக்கும் காரணமானவர்கள் என்பதுதான் உண்மை.

M மூர்த்தி முஸ்லீமாக புதைக்கப்பட்டார், ஆனால் வாழும்போது முழு இந்துவாக வாழ்ந்தார். இச்சம்பவம் மட்டுமல்ல மற்றய இஸ்லாம் அல்லாத மதத்தினரின் சடலங்களைப் பறிப்பதும் மதமாற்றங்களின் குள்றுபடிகளான லீனா யோய், M இரேவதி, சுபாஷினி போன்றவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும் தான் இந்த நாட்டில் இனவாதம் உருவாகுதற்கு முக்கிய காரணங்களும் மூலகர்த்தாவுமாகும். மலேசியாவில் வாழும் இந்தியர்களின் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடிய இந்த 5 வீரர்களுமல்ல.

இன்றைய காலகட்டத்தில் பேசப்படும் இனவாதம், மதவாதம் இந்த அரசாங்கத்தால் அல்லது அரசாங்கம் சார்ந்த இயக்கங்களால் இந்தியர்களின் வழிபாட்டுத்தளங்கள் மீதும் சிலைகள் மீதும் பயங்கர இயந்திரங்கள் கொண்டு கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்ட நாளில் இருந்து நமது இதயத்திலிருந்து உதிரம் சொட்டத்தொடங்கியது. அத்துடன் இந்த அரசாங்கதின் மேலுள்ள வெறுப்புணர்ச்சியும் வேரூண்டத்தொடங்கியது. இது நம்மவர் குற்றமா?

இது மட்டுமா, கிறிஸ்தவர்களின் பைபிள்கள் பறிமுதல் செய்வதும் மறு மதத்தவர்களிடையே இஸ்லாமிய கொள்கைகளைத் திணிப்பதும் இஸ்லாமிய மதத்தைத் தவிர்த்த மற்ற மதங்களின் நம்பிக்கைகளைக் கேலி கிண்டல் செய்வதும் இவர்களிடையே சர்வசாதரணமாகிய ஒரு நிலமையாகிவிட்டது. கம்போங் மேடானில் நடந்த இனப்படு கொலைகளுக்கும் பிரான்சிஸ் உடையப்பன் மரணத்திற்கும் இது போன்ற சம்பவங்களுக்குமான பொலிஸ் விசாரணைகள் இந்த அரசாங்கத்தால் மறுக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதும் தான் உண்மை.

அரசாங்கத்தின் மேலுள்ள வெறுப்பு
இவ்வரசாங்கத்தால் எங்களது சம உரிமைகளும் சம வாய்ப்புக்களும் மறுக்கப்பட்டதும் அதை கண்மூடித்தனமாக மறைத்ததும் தான் இந்த அரசாங்கத்தின் மீது எமது வெறுப்புனர்ச்சியைத் தூண்டுவதற்கு மூல கர்த்தாவாகும். இதற்கெல்லாம் இந்த இன, மதவாத அரசாங்கமே முளுக்காரணம். மலேசியாவில் வாழும் இந்தியர்களின் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடிய இந்த 5 வீரர்களுமல்ல.

இவ்வரசாங்கம் இந்நாட்டை ஒரு முஸ்லீம் நாடாக மாற்ற மும்மரமாக முயற்ச்சி செய்து வருகின்றது. ஆனால் இது ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. இந்த மாதிரியான உணர்ச்சியற்ற செயல்களால் ஒற்றுமையாக இருந்த சமுதாயம் இன்று பிளவுபட்டுள்ளது. இதுதான் இன்றைய உண்மை நிலை.

அவரவர் சமைய வழிபாடுகள், பேச்சுரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம் போன்றவை எமது அரசியல் அமைப்புச்சட்டத்தில் உள்ள நமது உரிமைகள், ஆனால் இவைகள் எல்லாம் எமது கண்முன்னால் பறிக்கப்படுகின்றது.

கடந்த 50 வருடங்களில் நமது அரசியல் அமைப்புச்சட்டம் 600 தடவைகளுக்கு மேல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் நன்மையடைந்தவர்கள் அதிக மலேகாரர்களே தவிர வேறொருவர்களும் அல்ல. இம்மாற்றங்கள் இந்த நாட்டை ஒரு முஸ்லீம் நாடாக மாற்ற அரசாங்கம் எடுத்த கண்மூடித்தனமான முடிவு.

மலேசியர்கள் எல்லோரும் இந்த நாட்டின் மைந்தர்கள் (Bumiputra) என்பதை ஏற்றுக்கொள்ள இந்த அரசாங்கம் தனது ஆணவப்போக்கால் மறுத்துவிட்டது. ஏன் இந்த இன, மத வெறிப்போக்கு?

பாடசாலைகளில்லுள்ள தகுதியற்ற கல்வி முறைகள், தகுதி அடிப்படையில் பல்கலைகூடங்களின் தேர்வுகள் இல்லாமல் இனவாரியான கோட்டா முறையில் வழங்குதல் போன்ற காரணங்களால் நம் சமுதாயத்தில் பல திறமையான மாணவர்களின் திறமைகள் இவ்வரசாங்கத்தால் புதைக்கப்படுகின்றது.

மேலும் இவ்வரசாங்கத்தால் கையாளப்படும் இன, மதவெறிக்கொள்கைகளாலும், தேசியப் பொருளாதாரக் கொள்கைகளாலும் (NEP) முஸ்லீம் அல்லாதவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், சிறு அல்லது நடுத்தர வர்த்தகங்கள் செய்வதற்கான அதிகாரங்கள், சமவேலை வாய்ப்புக்கள் மற்றும் வங்கிக்கடன் வசதிகள் போன்ற இந்தச் சலுகைகள் பெரும்பான்மை இனத்திற்கே சாதகமாக பயன்படுத்தப்படுகின்றது.

அமைச்சர்களினதும் அவர்களது அமைச்சுக்களினதும் நடத்தைகளை மறைப்பதும் தங்களுடைய தனிப்பட்ட சொந்த விடயங்களில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும் சாதாரண விடையமாகி விட்ட ஒன்று. ஒளிவுமறைவு இல்லாமல் இந்த அமைச்சுக்கள் இயங்கி இருக்கவேண்டும். ஆனால் அப்படி நடந்து கொள்ளத் தவறிவிட்டார்கள்.

அமைச்சர்கள் குழப்பமுள்ள பேச்சுக்களும், இனவாத மதவாத, பாலியல் பேச்சுக்கள் பொது இடங்களிலும் பாராளுமன்றத்திலும் பேசுவது அவர்களது மிதமான போக்கைக் காட்டுகின்றது. ஆனால் இவர்கள் எல்லா விதிமுறைகளை மீறியும் அவர்கள் மீது எந்த ஒரு நடவெடிக்கைகளும் எடுக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது.

சிறுபாண்மை இனத்தினரின் கோரிக்கைகள், மனுக்கள், கடிதங்கள், மேல் முறையீடுகள், மேலும் மனக்குறைகளை இவ்வரசாங்கம் செவிசாய்க்க மறுத்ததால் அதன் மேலுள்ள வெறுப்பு எரிமலையாக வெடித்தது. ஆனால் சரியான வழிமுறைகள் பின்பற்றவில்லை என இந்த அரசாங்கம் கூறியது. ஏன் இந்த நாடகம்?

2007 ஆடி மாதம் 5000 இந்தியர்களுக்கு மேல் புத்திரா ஜெயாவில் திரண்டு தமது 18 கோரிக்கைகளை நமது பிரதமரின் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். வழக்கறிச்சர்கள் நியாயத்திற்காகப் போராடினார்கள். நேர்மையான நியாயமான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என பெர்சே போராடியது. இந்து உரிமைக்குழு சிறுபாண்மை இந்தியர்களின் உரிமைக்காக போராடினார்கள். 5 வயது வைஷ்ணவி நமது பிரதமருக்கு பூ கொடுத்து தனது அன்பைத் தெருவிக்க வந்தார். ஆனால் நடந்தது என்ன? பொலிஸின் அஜாரகமும் ஆதிக்கமும் தான் தலைதூக்கியது. கண்ணிலடங்காத கைதுகள், அடி, உதை, கண்ணீர் புகை, அமில நீர் பாய்ச்சல் போன்றவற்றால் நாம் தாக்கப்பட்டோம். இது தான் ஜனநாயகமா?

இந்த அரசாங்கம்தான் இந்த காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்புணர்ச்சியையும் தூண்டியது. இந்தியர்களின் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடிய இந்த 5 வீரர்களுமல்ல.
முறையான வழியில் கூறப்படுமானால் இந்த எல்லா அழிவுகளுக்கும் இந்த அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் தான் முழு காரணகர்தாக்கள். இவர்கள் நடத்திய நாடகம் தான் இந்த நாட்டுக்கு செய்த மிகப் பெரிய இராஜ துரோகம். இவர்கள்தான் உண்மையில் கமுந்திங் தடுப்புக்காவலில் தடுத்துவைத்திருக்கப் படவேண்டியவர்கள். இவர்கள்தான் இந்த நாட்டின் சுபீட்சத்தையும் சமாதானத்தையும் கெடுப்பவர்கள். இந்த 5 வீரர்களுமல்ல.

மார்கழி 13ம் திகதி இந்த 5 வீரர்களின் கைதுகளுக்கு முன்னர் இவர்களைக் கைது செய்ய நமது பிரதமர் (இசா) முயற்ச்சி செய்திருக்கவேண்டும். அதுதான் சரியான வழிமுறையும் கூட.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு
மேலும் பயங்கரவாத இயக்கமான LTTEயுடன் தொடர்புடையதாக இந்த அரசாங்கம் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தியபோது திரு. உதயகுமார் இவ்வரசாங்கத்திடம் ஒரு துளி ஆதாரம் காட்டும்படி கடுமையான சவால் விட்டார். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்னவென்றால் இந்தக் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை என்பதுதான். இப்படி ஏதும் பயங்கரவாத தொடர்பு இருப்பின் திரு. வேதமூர்த்தியின் வரவைப் பிரித்தானிய அரசாங்கம் அங்கீகரிப்பதோடு எவ்வாறு புகழிடம் வழங்கியிருப்பார்கள். எல்லோரும் சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டிய விஷயம். ஏனெனில் பிரித்தானிய அரசாங்கம் பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்ப்பதோடு அதை அடியோடு ஒழிப்பதற்கு சகல முயற்சிகளை எடுத்துவருகின்றது. அத்துடன் மலேசிய அரசாங்கத்த்தின் அறிக்கையில் உண்மையிருப்பின் சர்வதேச பொலிஸ் படை (Interpol) தனது விசாரணைகளைத் தொடங்கியிருக்கும். திரு. வேதமூர்த்தி இலண்டனில் இருந்து இந்து உரிமைக்குழுவை நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆழாக்கப்பட்டார். உண்மையான ஜனநாயக நாடு எந்த ஒரு நபர் உரிமைக்காகப் போராடுகின்றாரோ அவரை பயங்கரவாதி என பெயர் சூட்டமாட்டார்கள். ஆனால் சட்டத்தரணி போராடுகின்றார் என்றால் அவரை பயங்கரவாதி என்கிறது நமது மலேசியா. முதலில் சட்டத்துறைத் தலைவர் கானி பட்டில் பயங்கரவாதத்தைப் பற்றி தெளிவாகவும் விபரமாகவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மேன்மை தங்கிய பிரதம மந்திரி அவர்களே, தங்கள் மீதும் தங்கள் அரசாங்கத்தின் மீதும் நாட்டுமக்கள் நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்டார்கள். தற்போது ஆட்சி அமைத்திருக்கும் எதிகட்சிகள் மூலம் பல உண்மைகளும் தில்லு முல்லுகளும் அம்பலத்திற்கு வரத்தொடங்கியுள்ளது. இது ஆரம்பம்தான். அம்னோ அரசால் மலேசிய திருநாட்டிற்கு இழைத்த இப்பெரும் சுமைகளைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்றைய எதிர்கட்சிகள் உள்ளனர்.

எவ்வாறு இத்திருநாட்டிற்கு இவ்வளவு தீங்கு செய்ய நாம் அனுமதித்தோம் என்பதை நம்மால் நம்பமுடியவில்லை. ஏனெனில் எல்லாத்திசைகளாலும் எமது உரிமைகள் மறைக்கப்பட்டதும் மறுக்கப்பட்டதும் தான் காரணம். நாம் இப்போது அந்தக் கூட்டில் இருந்து வெளியே வந்துவிட்டோம். நமது மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் பாடுபட்டு இதற்கு இன்று சிறையிலும் தனிமையில் வாடும் நமது அந்த 5 வீரர்களும் மற்றும் திரு. வேதமூர்த்தியும் தான் காரணகர்த்தாக்கள். இவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, நமது உரிமைக்காகப் போராடிய தியாகிகள்.

இந்த அரசாங்கம் தாங்களால் தங்களுக்கு ஏற்படுத்திய ஆயாத வடுக்கள் தான். மலேசியாவில் வாழும் இந்தியர்களின் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடிய இந்த 5 வீரர்களுமல்ல. அகந்தையான கொள்கையயும் மிடுக்கான செயல்களையும் தவிர்த்து நாட்டு மக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், வெளிநாட்டு இயக்கங்கள் போன்றவற்றின் கோரிக்கைகளைத் தயவுசெய்து செவிமடுக்குமாறு வேண்டிக்கொள்வதுடன் ஒடுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடிய இந்த 5 வீரர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும். அத்துடன் திரு. வேதமூர்த்தியின் வருகைக்கு எந்தவிதமான பாதகம் விளைவிக்காமலும் அவரது குடும்பதுடன் சேர அனுமதி அளிக்க இந்த அரசாங்கம் உறுதியளிக்கவேண்டும்.

இவ்வளவு கால அடக்குமுறைகளின் பின்னர் நம்பத்தக்க உண்மையாக நமது உரிமைக்காக போராடக்கூடிய இந்த இந்து உரிமைக்குழு இயக்கத்தின் சட்டத்தரணிகள் மூலம் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு இவர்கள் எந்த ஒரு புகழுக்கோ பணத்திற்கோ ஆசைப்படாமல் நமது வருங்கால சமுதாயத்திற்காக போராட தங்களையே அர்ப்பணித்தவர்கள்.

இவர்கள் பயங்கரவாதிகளோ, முற்போக்குவாதிகளோ, தீவிரவாதிகளோ அல்லர், சட்டத்தை மதிக்கும் இந்த சட்டத்தரணிகள் அவர்களது கடமைகளை அமைதியும் சுபீட்சமும் நிலைக்க போராடுகின்றார்கள்.

மலேசியச் சட்டவியல் கோர்ப்பு(Legal Professional Act) 1976 பகுதி(section) 46ன் கீழ் கூறப்படுவது யாதெனில்: “பயமோ பாரபட்சம் இல்லாமலும் (without fear or favour) உரிமைகளைப் பாதுகாப்பதும்தான் ஒரு சட்டத்தரணியின் கடமை”

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP