மரத்தடியில் பிறந்த மறத்தமி்ழர்கள் (தொடர் 6)
>> Saturday, April 5, 2008
வெற்றியும் தோல்வியும் திடீரென வானத்திலிருந்து விழும் எரிநட்சத்திரமன்று. ஓர் இயக்கத்தின் பல ஆண்டுகாலச் சொல்லையும் செயலையும் உள்ளடக்கி உருவாகும் பரிணாம வளர்ச்சி அது! சம்பந்தப்பட்ட பலரும் பல சந்தர்ப்பங்களில் அதை உருவாக்குகின்றனர்.
"கர்ணனை நான் கொன்றுவிட்டேனே!" என் அரற்றினான் அர்ச்சுனன்.
"குண்டலத்தையும் கவசத்தையும் யாசித்துக் கவர்ந்து சென்ற பகலவனிலிருந்து, தேரைப் பாதியில் நிறுத்திச் சென்ற சல்லியன் வரை ஏற்கனவே பலர் கர்ணனைக் கொன்று குற்றுயிராக்கி விட்டனர்! நீ செத்தப்பாம்பை அடித்துவிட்டு ஏனடா நான் கொன்றேன்! நான் கொன்றேன்! என அலட்டிக் கொள்கிறாய் என்றான் கண்ணன்.
வெற்றியும் தோல்வியும் பிறர்தர வாரா!
பாரிசானின் இன்றைய தோல்விக்கு அண்மைய காலமாகவே பலரும் பங்களிக்கத் துவங்கி விட்டனர். பாரிசானுக்கு முதல் அடியாக விழுந்தது அன்வாரின் முகத்தின் மீது வீசப்பட்ட குத்தும் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும்!
"நேற்றுவரை துணைப்பிரதமராக இருந்த ஒருவருக்கே இன்று இந்நிலை என்றால் நம் கதியெல்லாம் என்ன ஆகும்?" என எல்லாச் இனச் சாமான்ய மக்களும் மிரண்டனர்! பேச்சுச்சுதந்திரம் எழுத்துச் சுதந்திரமற்ற லஞ்ச லாவண்யங்கள் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டது போன்ற உணர்வு எல்லாருக்குமே பிரதமர் படாவி பதவிக்கு வரும் முன்னரே ஏற்பட்டது.
இந்த உணர்வுகளே கடந்த தேர்தலில் வாக்குப் பெட்டிகளில் எதிரொலித்தது!
நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் படாவியைத் தவிர வேறுயாரேனும் பாரிசானுக்குத் தலைமை தாங்கித் தேர்தல் களத்தில் குதித்திருந்தால் இன்றைய வெற்றியைக்கூட எட்டிப்பிடித்திருக்க முடியாது!
கடந்த காலத்தில் கூட்டணி, பாரிசானாக மாறியது போல், படகுச் சின்னம், தராசு சின்னமாக மாற்றப்பட்டதுபோல் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்சிகள் மாற்றம் காண வேண்டும் இனி!
இன நிற மத வேறுபாடுகள் பற்றிப் பேசியும் அவற்றின் பாதுகாவலர்களாக தங்களை அடையாளம் காட்டியும் அரசியல்வாதிகள் இனியும் பெயர் போட முடியாது!
மேம்பட்ட கல்வி வாய்ப்புகளால் மக்களின் சிந்தனையும் மேம்பட்டிருக்கிறது. முந்திய புதிய பொருளாதாரக் கொள்கையிலிருந்து அனைத்துக் கொள்கைகளையும் அனைவரும் மறுபரிசீலனை செய்யத் துவங்கி விட்டனர் இப்போது!
"தேம்ஸ் நதிக்கரையில் பசியால் அழும் குழந்தையின் வேதனைக்குரலுக்கும் இடையில் வேற்பாடு கிடையாது!" என முழங்குகிறார் பிரபல மலாய்க் கவிஞர் ஒஸ்மான் அவாங். தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று கர்ஜித்த பாரதியின் சமத்துவ முழக்கமே ஒஸ்மான் அவாங்கின் கவிதையிலும் ஓங்கி ஒலிக்கிறது!
இதுவே நமது புதிய பொருளாதாரக் கொள்கை!
காலத்திற்கேற்ப மலேசியர்களின் சிந்தனையும் மாறாவிட்டால் நமது கப்பல் கரை சேராது! உலக மாற்றங்களை அரசியல்வாதிகளும் சாதாரண மக்களும் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா?
ஒரு காலத்தில் இங்கிருந்து இந்தியா செல்பவர்களுக்கு தோட்டத்தைக் கூட்டி விருந்து நடத்தி மோதிரம் போட்டு வழியனுப்பி வைத்து விட்டு, பத்திரிக்கையிலும் அவரது படத்துடன் 'தாயகம் செல்கிறார்!' என்று செய்தி வெளியிடுவோம். ஊருக்குச் செல்பவர்கள் மூலம் உற்றார் உறவினருக்கு சேதி சொல்லிவிடுவோம்.
இன்று ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இந்தியச் செய்தியை தொலைக்காட்சியில் காண்கின்றோம். சட்டைப் பையிலிருக்கும் கைத்தொலைப்பேசியை அழுத்தி கணநேரத்தில் கண்டவராயன் பட்டியில் உள்ள கந்தசாமி தாத்தாவுடன் கதை பேசுகின்றோம்! காலையில் கோலாலம்பூரில் பசியாறிவிட்டுப் புறப்பட்டால் மதிய சாப்பாட்டை மவுண்ட் ரோட்டில் வைத்துக் கொள்ள முடிகிறது! எங்கும் எதிலும் கணினி மயம்! இயந்திர மனிதர்கள் சேவைத் துறையை ஆக்கிரமிக்கத் தயாராகி வருகின்றனர்.
வெள்ளைக்காரன் கண்டுபிடித்த இந்த விந்தைகளால் உலகமே ஒரு கிராமமாகி விட்டது இப்போது! கருப்பர் ஒருவர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடுவார் என நாம் முன்பு கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?
'அடிமைத்தனத்திலிருந்து எழுந்த' புக்கர்டி வாஷிங்டன் காலத்தை விட்டுத் தள்ளுங்கள். அண்மையை மார்டின் லூதர் கிங் காலத்திலேனும் இதை எதிர்பார்த்திருப்போமா?
விஞ்ஞான மாற்றத்தோடு இணைந்து உலக மக்களின் சிந்தனையிலும் பெரும் மாற்றங்கள் உருவாகி வருகின்ற காலம் இது!
இன்னும் இனவாதக் குட்டையிலேயே கிடந்து நாம் உழன்று கொண்டிருக்க முடியாது! உழன்று கொண்டிருக்கக் கூடாது!
ஆனால், ஒருசில அரசியல்வாதிகள் இன்னும் இனவாதக் குட்டையையே குழப்பிக் கொண்டிருக்கின்றனர். காரணம், அதில்தான் அவர்கள் பணம் பதவி பட்டம் என்னும் பாவால் மீன்களைப் பிடித்டு வயிராறச் சாப்பிட முடியும்! அதற்கு இடம் தரலாமா நாம்!
ஒரு தனிமனிதன் தான் சார்ந்த இனத்தின் மீது தனி அன்பு கொள்வதில் தவறு இல்லை. ஆனால் சக இனத்தின் மீது வெறுப்புக் கொள்ளக் கூடாது. மற்ற இனங்களைப் புறக்கணிக்கக் கூடாது! தன் மொழியின் ஒருவருக்கு பற்று இருக்கலாம். ஆனால் பிற மொழியின் மீது பகை இருக்கக் கூடாது! தான் சார்ந்த சமயத்தின் மீது பாசம் இருக்கலாம் ஆனால் அடுத்த சமயத்தின் மீது அருவெறுப்பு இருக்கக் கூடாது!
அமைதியான சகோதரத்துவ மனித வாழ்க்கைக்காகத்தான் இன மொழி சமயம் அனைத்துமே தவிர இன மொழி சமயத்திற்காக அமைதியான மனித வாழ்வு அர்ப்பணிக்கப்படக்கூடாது!
தமிழர் கதை தொடரும்...
-பாவலர் சங்கு சண்முகம்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment