ஜெனிவாவில் இந்து உரிமைப் பணிப்படை, வேதமூர்த்தி ஐ.நா அதிகாரிகளை சந்திப்பார்.
>> Wednesday, April 16, 2008
ஹிண்ட்ராப் தலைவர்களின் விடுதலை உட்பட மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளை விவாதிக்க ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் ஹிண்ட்ராப்புக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது ! ஜெனிவா வந்தடைந்தார் வேதமூர்த்தி.. !
(ஜெனிவாவிலிருந்து மோகனன் பெருமாள்)
ஜெனிவா, ஏப்ரல் 17 ,
இ.சாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர்களின் விடுதலை உட்பட சிறுபான்மை இந்திய சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு சமூக பொருளாதார பிரச்சனைகள் குறித்து ஐ.நா பேரவையின் மனித உரிமை ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க ஹிண்ட்ராப் தலைவர் திரு.வேதமூர்த்தி இன்று ஜெனிவா வந்து சேர்ந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இலண்டனில் தங்கி, இண்ட்ராப் இயக்கத்திற்கு அனைத்துலக ஆதரவை திரட்டி வரும் திரு.வேதமூர்த்தியின் கோரிக்கையை ஏற்று அவரை சந்திக்க ஐ.நா பேரவை அனுமதி அளித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை மாலை 2.30 மணிக்கு ( மலேசிய நேரம் இரவு 9.30 மணிக்கு ) ஜெனிவாவில் உள்ள ஐ.நா பேரவையின் தலமையகத்தின், மனித உரிமை ஆணையத்தின் எட்டுப் பிரிவுத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்துவார்.
கடந்த 50 ஆண்டுகளில் மலேசியா அடைந்துள்ள வளர்ச்சிக்கும் வனப்பத்திற்கும் ஏற்ப சிறுபான்மை இந்திய சமூகம் வளர்ச்சி அடையவில்லை. மூன்று தலைமுறை காலம் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக வாழும் இந்திய சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், கடந்த நவம்பர் 25ம் தேதி, கோலாலம்பூரில் நடைப்பெற்ற மாபெரும் மக்கள் பேரணியை கலகத் தடுப்பு போலீசார் இரசாயன நீர் மற்றும் கண்ணீர் புகை வீசி கலைத்தனர்.
அன்று முதல் ஹிண்ட்ராப் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.
தீவிரவாதிகளா?
அப்பேரணிக்கு ஏற்பாடு செய்த ஐந்து முக்கிய தலைவர்களான திரு.உதயகுமார், திரு.மனோகரன், திரு.கணபதிராவ், ஆகியோரை போலீசார் இ.சாவில் கைது செய்தனர். விடுதலை புலிகளின் ஆதரவை நாடினார்கள், அவர்களுக்கு தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு இருக்கிறது, அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் மிரட்டல் இருக்கிறது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனிடையே தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புள்ள சட்டவிரோத இயக்கம் என மலேசிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராப்பின் தலைவர் திரு.வேதமூர்த்தியை சந்திக்கவும் அவரது விளக்கங்களை செவிமடுக்கவும் ஐ.நா பேரவை அனுமதி அளித்துள்ளது.
மலேசிய இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார பிரச்சனைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஹிண்ட்ராப் சமர்ப்பித்த 18 அம்ச அறிக்கையை விவாதிக்க அரசு அனுமதி அளித்திருந்தால், இந்த விவகாரம் மிக சுமூகமான முறையில் உள்நாட்டிலேயே தீர்க்கப்பட்டிருக்கலாம் என திரு.வேதமூர்த்தி தெரிவித்தார்.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment