எகிப்தில் த‌மிழ் பிராமி எழுத்துக‌ள் க‌ண்டுபிடிப்பு..!

>> Saturday, April 26, 2008


சென்னை : த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஓர் உடைந்த‌ சாடியொன்று அண்மையில் எகிப்தில் க‌சீர் அல் க‌டீம் எனும் செங்க‌ட‌லின் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் வ‌சிப்பிட‌த்தில், அக‌ழ்வாராய்ச்சியின் மூல‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வ‌ழி இவ்வெழுத்துக‌ள் கி.மு முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌வையாக‌ இருக்கும் என‌வும் இது ஒரு ம‌கிழ்ச்சியூட்டும் க‌ண்டுபிடிப்பு என‌வும் வேதியிய‌லாள‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.

இத்த‌மிழ் பிராமி லிபிக‌ள் சாடியின் இருபுற‌த்தில் இருமுறை பொறிக்க‌ப்ப‌ட்டு காட்சிய‌ளிக்கின்ற‌ன‌. பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் 'பானை ஒரி' (பானையை தொங்க‌விடுவ‌த‌ற்காக‌ க‌யிற்றால் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை)எனும் அர்த்த‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌. பிரிட்ட‌னில் உள்ள‌ 'ச‌வுத்தாம்த‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தைச் சார்ந்த‌ தொல்பொருளாராய்ச்சிக் குழுவில் அட‌ங்கிய‌ பேராசிரிய‌ர் டீ.பீகோக்கு ம‌ற்றும் முனைவ‌ர் எல்.புளூ ஆகியோர், அண்மையில் எகிப்திலுள்ள‌ க‌சீர் அல் க‌டீம் எனும் ப‌ழமைவாய்ந்த‌ இட‌த்தில் அக‌ழ்வாராய்ச்சிப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டிருக்கும்பொழுது, ப‌ழ‌ங்கால‌ எழுத்துக்க‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ உடைந்த‌ சாடியைக் க‌ண்டெடுத்துள்ள‌ன‌ர்.


இல‌ண்ட‌னில் அமைந்துள்ள‌ பிரிட்டிசு அருங்காட்சிய‌க‌த்தில் ப‌ழ‌ங்கால‌ பானை,க‌ல‌ன்க‌ள் குறித்த‌ ஆராய்ச்சியில் நிபுண‌த்துவ‌ம் வாய்ந்த‌ முனைவ‌ர் ரோபேர்த்தா தோம்பேரு, க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ இவ்வுடைந்த‌ சாடி இந்தியாவில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌தென்றும், இச்சாடி கொல்க‌ல‌ன் வ‌கையைச் சார்ந்த‌து என‌வும் அடையாள‌ம் க‌ண்டுபிடித்துள்ளார்.

தொல்லிய‌ல் நிபுண‌ரான‌ ஐராவ‌த‌ம் ம‌காதேவ‌ன், க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் கி.மு ஒன்றாம் நூற்றாண்டின் த‌மிழ் பிராமி லிபி வ‌கையை சார்ந்த‌வை என‌ அறுதியிட்டுக் கூறுகிறார். இக்கூற்றிற்கான‌ ஆதார‌ங்க‌ளை திர‌ட்டுவ‌தில் அவ‌ர், பாண்டிச்சேரியில் அமைந்துள்ள‌ பிரென்சு க‌ல்வி க‌‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் மொழியிய‌ல் நிபுண‌ரான‌ பேராசிரிய‌ர் சுப்ப‌ராயுலு, புதுச்சேரியில் அமைந்துள்ள‌ ம‌த்திய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் பேராசிரிய‌ர் கே.இராச‌ன், ம‌ற்றும் த‌ஞ்சாவூர் த‌மிழ்ப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தின் பேராசிரிய‌ர் வீ.செல்வ‌குமார் போன்றோரின் நிபுண‌த்துவ‌ங்க‌ளை உத‌வியாக‌ப் பெற்றுள்ளார்.

அக‌ழ்வாராய்ச்சியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துகள் 'பானை ஒரி' என‌ ஒலிப்ப‌தாக‌வும், 'ஒரி' எனும் சொல் த‌மிழில் 'உரி' (க‌யிற்றில் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை) என அழைக்க‌ப்ப‌டுவ‌தாக‌வும், அது ம‌ருவி 'ஒரி' என‌ ப‌ர்சி எனும் ம‌த்திய‌ திராவிட‌ மொழியில் இன்று வ‌ழ‌க்கில் இருப்ப‌தாக‌வும் திரு.ம‌காதேவ‌ன் தெரிவித்தார். த‌ற்கால‌த்தில் க‌ன்ன‌ட‌ மொழியில் 'ஒட்டி' என‌ புழ‌ங்கிவ‌ரும் சொல் 'ஒர்ரி' எனும் சொல்லின் ம‌ருவ‌லாக‌ இருக்க‌க் கூடும் என‌ அவ‌ர் தெரிவித்தார்.

க‌சீர் அல் க‌டீமில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ த‌மிழ் பிராமி எழுத்துக்க‌ளை 'ஒர்ரி' என‌வும் வாசிக்க‌லாம், ஆனால் பெரும்பாலும் த‌மிழ் பிராமி லிபியை பொறுத்த‌ம‌ட்டில் ஒரே வித‌மான‌ ஒலிக‌ளை இர‌ட்டிப்புப் செய்யாது என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

இதேப் போன்ற அக‌ழ்வாராய்ச்சியொன்று க‌சீர் அல் க‌டீமில் 30 ஆண்டுக‌ளுக்கு முன்பு ந‌ட‌த்த‌ப்பெற்று, த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ கி.பி முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌ இர‌ண்டு சாடிக‌ள் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இதேப் போன்ற‌ த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ சாடிக‌ள் 1995ஆம் ஆண்டில் எகிப்தின் செங்க‌ட‌ல் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ பெரேனிக்கே எனும் ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் குடியிருப்புப் ப‌குதியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ திரு.ம‌காதேவ‌ன் கூறினார்.

மேற்கத்திய‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும், த‌மிழ் ச‌ங்க‌ கால‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும் குறிப்பிட்டுள்ள‌துபோல‌ ரோமானிய‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌ர்க‌ளுக்கும் செங்க‌ட‌ல் வ‌ழி வ‌ணிக‌த் தொட‌ர்பான‌து நூற்றாண்டின் ஆர‌ம்ப‌க் கால‌க்க‌ட்ட‌த்திலேயே கொடிக்க‌ட்டி ப‌ற‌ந்த‌தை இத்த‌கு க‌ண்டுபிடிப்புக‌ள் ஆதார‌ப்பூர்வ‌மாக‌ நிரூபித்துள்ள‌ன‌.

'திரைக‌ட‌ல் ஓடியும் திர‌விய‌ம் தேடு' என்று சும்மாக‌வா கூறினார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.. வெறும் வெற்றிலையை வாயில் போட்டு மென்று, திண்ணையில் வேலை வெட்டி இல்லாம‌ல் அம‌ர்ந்துக் கொண்டு கூறிய‌ ப‌ழ‌மொழிய‌ல்ல‌ இது. அனுப‌வ‌ப்பூர்வ‌மாக‌வே சாதித்துக் காட்டியிருக்கிறார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.

வாழ்க‌ த‌மிழ‌ர்.. வ‌ள‌ர்க‌ அவ‌ர்த‌ம் மாண்பு..!



* தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பயன்பட்ட எழுத்து முறைமை. இது தமிழி எனவும் அழைக்கப்படுகிறது. இது அசோகனின் பிராமி எழுத்து முறையில் இருந்து உருவானது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாக பின்னர் உருமாறின

த‌க‌வ‌ல் : த‌மிழ் வீக்கிப்பீடியா

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP