இப்படிக்கு, சொல்லமாட்டேன்...
>> Tuesday, April 29, 2008
(நீ யாருனு எனக்குத் தெரியும்.. நான் யாருனு உனக்குத் தெரியாது..!)
அண்மையில் ஒரு தமிழ்ப் பள்ளி ஆசிரியை என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினார்.
அவர் சிரித்துக் கொண்டே,
"சார் இத படிச்சு பாருங்களேன்"
என்று என்னிடம் நீட்டப்பட்ட கடிதத்தை படித்தேன். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது..
"என்ன கொடும டீச்சர் இது.."
"அதான் சார், என் கிளாசு பிள்ளை ஒண்ணு இப்படி எழுதியிருக்கு, கேட்டதுக்கு இல்லவே இல்லேன்னுருச்சி.."
அப்படி அந்த கடிதத்தில் என்னதான் இருக்கிறது? ஒன்றும் பெரியதாக சொல்வதற்கில்லை..
ஒரு மாணவி, தன்னுடைய தோழி மற்ற மாணவியிடம் நெருக்கமாக பழகுவது பொறுக்காமல் எழுதிய கடிதமே அது..
சில எழுத்துப் பிழைகளோடு உணர்ச்சி பூர்வமாக திட்டி எழுதப்பட்ட கடிதம் உங்கள் பார்வைக்கு.. படத்தை சுட்டி பெரிதாக்கி படித்துப் பாருங்கள்..
பக்கம் 1
பக்கம் 2
இதற்கு சில கருத்துகளை சொல்ல நினைத்தபோது, வாசகர்களிடமே கேட்டால் என்ன என்று தோன்றியது?
எனவே கேட்கிறேன்..
நீங்கள் ஒரு ஆசிரியராக இருக்கும் பட்சத்தில், இக்கடிதத்தைப் பார்த்ததும் உங்களின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாயிருக்கும்?
வாசகர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களை மின்னஞ்சல் வழியாகவோ, அல்லது கருத்து ஓலையிலோ தெரிவிக்கலாம். இப்பகுதியில், ஆசிரியர் பணியில் இருப்பவர்களும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள வரவேற்கப்படுகின்றனர். அனைத்து கருத்துகளும் பதிவிடப்படும். இதை ஒரு சுயசோதனையாகவும், உங்கள் மனோவியல் திறனை சோதித்துக் கொள்ளும் களமாகவும் ஏற்றுக் கொண்டு சிறந்த பதிலைக் கொடுக்கவும்.
பதிலுக்காக காத்திருக்கிறேன்...
2 கருத்து ஓலை(கள்):
அந்த மாணவியிடம் திறமையுள்ளது, கட்டுரை வரைவதில் அவருக்கு ஊக்கம் கொடுக்கலாம். நான் ஆசிரியராக இருந்தால், அம்மாணவிக்கு கட்டுரை எழுத ஊக்குவிப்பேன். தண்டனை கொடுக்க நினைத்தால் உடனுக்குடன் 100க்கும் குறையாத சொற்களுக்கு ஒரு கட்டுரையை எழுதி சமர்ப்பிக்கச் சொல்வேன். நான் கொடுக்கும் தலைப்பு 'காண்டாமிருகம்"
வாணி,
புக்கிட் ஜாலில்
இன்றைய நவீன கல்விமுறை மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளது எனலாம். தமிழ் பள்ளிகள் மட்டுமல்லாது மலாய்,சீன பள்ளிகளிலும் கட்டொழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாங்கள் படிக்கும் காலங்களில், ஆசிரியரைக் கண்டால் நடுங்குவோம். அந்த பயத்தினாலேயே வீட்டுப்பாடங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்திருப்போம். ஆசிரியர்கள் என்னை கண்டித்து அடித்திருந்தாலும் இன்று நான் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு என் ஆசிரியர்களும் ஒரு காரணம். ஆனால் இன்றையக் காலக்கட்டத்தில் தங்களது பிள்ளைகளின் மீது ஒரு சிறு துரும்பு பட்டுவிட்டாலும் பெற்றோர்கள் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். என் பள்ளியில் ஒரு பிள்ளையின் தந்தை கத்தியை எடுத்துக் கொண்டு வந்து ஆசிரியரை மிரட்டிய கதையெல்லாம் நடந்திருக்கிறது. இன்று மற்றொரு புதிய வித்தையை பெற்றோர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆசிரியர் மாணவன்/மாணவியை அடித்து விட்டால் காவல் நிலையத்தில் புகார் செய்து விடுகிறார்கள். நம்முடைய கல்வி முறை மாற வேண்டும். பிரம்படி கொடுக்கும் உரிமை ஒவ்வொரு ஆசியருக்கும் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏன், இதைக் கூறுகிறேன் என்றால், அண்மையக் காலமாக செய்தி தாட்களில் 'ஆசிரியர் மாணவனை அடித்து கொடுமை படுத்தினார்', 'ஆசிரியர் காலணியைக் கழற்றி மாணவன் கன்னத்தில் அறைந்திருக்கிறார்' என இன்னும் பல அதிர்ச்சிகரமான செய்திகளை நாம் அன்றாடம் கேட்கவேண்டியுள்ளது. இதற்கு காரணம் ஆசிரியருக்கு தண்டனை கொடுக்கும் உரிமை பறிக்கப்பட்டதுதான். சில மாணவர்களின் சேட்டைகளை பல நாட்களாக கவனித்து வரும் ஆசிரியர்கள், அறிவுரை மற்றும் பெற்றோர்களை அழைத்து பிரச்சனையைப் பற்றிக் கூறுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கினாலும், ஒரு சில மாணவர்கள் திருந்துவதில்லை. இதுவே அந்த ஆசிரியருக்கு ஒரு விதமான மன உளைச்சலைக் கொடுத்து விடுகிறது. ஒரு ஆசிரியராக இருக்கும் எனக்கு அதன் வலி தெரியும். இது சதீஷ் ஐயா அவர்களுக்கும் விளங்கும் என நினைக்கிறேன். என் மனதில் தோன்றியதை வெளிப்படையாகக் கூறிவிட்டேன். மாணவர்கள் கட்டொழுங்கு சில சமயங்களில் பிரம்படியையும் நம்பி இருக்கின்றன, அன்பையும் நம்பி இருக்கின்றன. இரண்டுமே ஒரு ஆசிரியருக்கு வேண்டும்.
அந்த கடிதத்தை எழுதிய மாணவியை சொல்லி குற்றம் இல்லை, எல்லாம் நாம் நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கும் கல்வி முறைதான்.
நன்றி,
தமிழாசிரியன்
நெகிரி மாநிலம்
Post a Comment