பிரிட்டன் பிரபுக்களின் சபையில் இண்ட்ராஃப்!

>> Wednesday, December 10, 2008


லண்டனில் அரசியல் தஞ்சமடைந்திருக்கும் இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தியின் கடுமையான முயற்சியின் பலனாக, மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகள் முதன்முறையாக பிரிட்டன் பிரபுக்களின் சபையில் (House of Lords) விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரபுக்களின் சபை என்பது பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையாகும். நாட்டின் பல முக்கிய முடிவுகள் இந்த பிரபுக்களின் சபையில்தான் எடுக்கப்படுகின்றன. இச்சபைக்கு அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள முழுப் பெயர் 'சீலத்திருவும்,செம்மையும்,ஞானத்துறவியரும்,திருவருளும் தாங்கிய பிரித்தானிய பெருநாட்டின் மற்றும் வட அயர்லாந்து நாட்டின் பேரவைக்கூடல்' ('The Right Honourable the Lords Spiritual and Temporal of the United Kingdom of Great Britain and Northern Ireland in Parliament assembled') என்பதாகும்.

இண்ட்ராஃப் இதுவரையில் ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணையம்வரை மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து விவாதித்திருக்கிறது. அமெரிக்க செனெட் சபையிலும் இப்பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதி கிடைத்த சமயத்தில்தான் திரு.வேதமூர்த்தியின் அனைத்துலக கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதனையடுத்து பலருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பாக பிரிட்டன் பிரபுக்களின் சபையில் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து நேற்று பேசப்பட்டிருக்கிறது.



கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் கல்வி அமைச்சர் சாந்திப் வர்மாவின் தலைமையில் 65 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நான்கில் ஒரு பகுதியினர் மலேசியர்கள் பங்கேற்றனர். இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி, வியூக, தலைமைத்துவக் கழகத்தில் பொதுக் கொள்கை ஆய்வு மையத்தின் இயக்குநரான திரிசா இயோ, மலேசியாகினியின் ஆசிரியர் திரு.கே.கபிலன், அமெரிக்க இந்து அறக்கட்டளையின் பொதுக் கொள்கை இயக்குநர் இசானி சௌதுரி போன்றோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் விவாதங்களை முன்வைத்தனர்.


இக்கூட்டத்தில் திரிசா இயோ உரையாற்றுகையில், மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைய பொருளாதாரக் கொள்கையை முழுமையாக சீரமைக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கல்வி, வீடமைப்பு, வேலை வாய்ப்பு போன்ற அடிப்படைக் கூறுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மலேசிய இந்தியர்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் சரியான முறையில் வெளிப்படையாக பொது நிறுவனங்களின்வழி வழங்கப்பட ஆவண செய்ய வேண்டும். மேலும், சமுதாய சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் இனங்களின் அடிப்படையில் செயல்முறைப்படுத்தப் படாமல், தேவையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதில் பெயர்போன திரிசா இயோ கூறுகையில், மலேசியாவில் 40,000 மலேசிய இந்தியர்கள் பிறப்புப் பத்திரம் இல்லாமல் இருப்பதாகவும், இதன் அடிப்படையில் அவர்களுக்கு பள்ளியில் படிப்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும், பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதற்கும், கல்விக் கடனுதவிகள் பெறுவதற்கும், முறையான மருத்துவ சிகிச்சைகள், வணிக மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்குமுரிய வாய்ப்புகள் அற்றுப்போகும் நிலை உருவாகிவிடுவதாகக் கூறினார்.

2006-ஆம் ஆண்டில் அரசாங்க வேலைகளில் 7.2 சதவிகிதம் இடம் பிடித்திருந்த மலேசிய இந்தியர்களின் இன்றைய நிலை வெறும் 2.8 சதவிகிதம்தான். இப்பிரச்சனை தொடர்ந்து நீடிக்காமலிருக்க அரசாங்கக் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மலேசியாகினி ஆசிரியர் திரு.கபிலன் உரையாற்றுகையில், மலேசிய இந்திய தோட்டத் தொழிலாளர்கள் நாடு சுதந்திரமடைந்து இன்றுவரை பெரிய மாற்றங்கள் ஏதும் பெற்றுவிடவில்லை என்று கூறினார். இன்றுவரையில் அடிப்படை வசதிகளான வீடு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு தோட்டத் தொழிலாளர்கள் போராட வேண்டியுள்ளது என அவர் கூறினார். மலேசியாகினியை பொறுத்தமட்டில் இப்பிரச்சனை குறித்து பலமுறை வெளியுலகிற்கு நன்முறையில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது என்றும், அண்மையில் அடிமைத் தொழிலாளர்கள் குறித்த பிரச்சனையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது என அவர் கூறினார். 1941 ஆண்டிலியே தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து கொடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாகவும், இன்றுவரையில் அவ்வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும், அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏதும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை எனவும் கூறினார்.


இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி உரையாற்றுகையில், மலேசிய அரசாங்கத்தின் தவறான கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் தொடர்ந்து இண்ட்ராஃப் எதிர்த்து குரலெழுப்பும் என்றும், மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறிய, அதற்குத் தீர்வுகாண அரசாங்கம் மறுத்துவருவதால் வெளிநாடுகளின் பார்வைக்கு இப்பிரச்சனைகளைக் கொண்டு செல்வோம் என அவர் தெரிவித்தார். மேலும் ஆலயங்கள் உடைப்படுவது தொடங்கி இண்ட்ராஃப் எடுத்துக் கொண்டுள்ள போராட்டத்தை அவர் அவையில் விளக்கி கூறினார்.

பிரிட்டனின் பிரபுக்களின் சபையில் மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டதால் நமக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது என்று பலரும் நினைக்கலாம். நன்மை எனப் பார்ப்பதைவிடுத்து அதன் தாக்கம் எவ்வாறு அமைந்திருக்கும் என நோக்கலாம்..

1. இண்ட்ராஃப் இயக்கம் தன் இருப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
2. வெளிநாடுகளின் பார்வையில் இண்ட்ராஃப் ஒரு சிறந்த மனித உரிமை இயக்கமாத் திகழவும் நன்மதிப்பைப் பெறவும் உதவும்.
3. வெளிநாடுகளின் அங்கீகாரம் பெற்ற ஓர் இயக்கத்தின் கோரிக்கைகள் மேலும் வலுவானதாக அமையும்.
4. மலேசிய இந்தியர்கள் அம்னோ அரசாங்கத்தினால் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவது உலகிற்கு வெட்ட வெளிச்சமாகும்.
5. வெளிநாடுகளிடமிருந்தும், மனித உரிமை இயக்கங்களிடமிருந்தும் மலேசிய அரசாங்கம் நெருக்குதல்களையும் எச்சரிக்கைகளையும் எதிர்நோக்கும்.
6. இனியும் மலேசியா ஓர் ஒற்றுமையான பல்லின நாடாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முடியாது.
7. மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட அரசாங்கக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர அழுத்தம் கொண்டுவரப்படும்.
8. அனைத்துலக அங்கீகாரமானது இண்ட்ராஃப்பின் குரலை ஒட்டுமொத்த மலேசியர்களின் குரலாக ஒலித்திட வழிவகுக்கும்.
9. தென்கிழக்காசிய நாடுகளிலேயே சிறந்ததொரு மதிப்பினைப் பெற்ற இயக்கமாகவும், அதனை வழிகாட்டியாகவும் கொள்ள பல இயக்கங்கள் முனையும்.
10. மலேசிய இந்தியர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் மீட்டெடுக்க புயலாய் புறப்பட்டெழ ஓர் உத்வேகம் பிறக்கும்.

மேற்கண்ட தாக்கங்கள் அனைத்தும் குறுகிய கால நோக்கில் வரையறுக்கப்பட வேண்டியவையல்ல. நெடியதொரு போராட்டத்திற்கு போடப்படும் அச்சாணியாகவே இவ்விளக்கக் கூட்டத்தை நாம் காண்பது நலம். தொடர்ந்து இண்ட்ராஃப் இயக்கம் மலேசிய இந்தியர்களின் உரிமைக் குரலாக விளங்கி, அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்று உரிமைகளை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியுள்ளது.

இயக்கத்திற்கு தடை விதிக்கலாம், உணர்வுகளுக்கல்ல என்பதனை மக்கள் சக்தி மீண்டுமொருமுறை நிரூபிக்கும் என்ற நம்பிக்கையை விதைப்போம்!

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Anonymous December 21, 2008 at 3:10 AM  

hindraft is not for only for indian only but for all malaysian who wants freedom from unjustis ruling political parties.our feelings cannot be stop

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP