திருவெம்பாவை - பாடல் 2

>> Saturday, December 27, 2008

முந்தையப் பதிவுகள் :

மறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு

திருவெம்பாவை - பாடல் 1



ஆமாம், பாவை நோன்புதான் என்ன? நல்ல மழை பெய்ய வேண்டும்; நாடு செழிக்க வேண்டும் - வீடும் வாசலும் விளங்க வேண்டும்; வாழ்க்கை மலரக் காதற்கணவரைப் பெறவேண்டும் என்ற உயர்நோக்குடன் நோக்கி நோன்பு இருப்பர். இந்த நோன்பின்போது, நெய்யும் பாலும் தவிர்த்து விரதம் இருப்பர். இந்த நோன்பு மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் நிறைவுறுவது. மதி நிறை நன்னாளை நாம் பொதுவாக திருவாதிரை என்கிறோம். இது பத்து நாள் கொண்டாடப்படும். இக்காலத்து நீராடல், மார்கழி நீராட்டமாகும். மார்கழி முழுவதும், விடிவெள்ளிக்கு முன்னே நீராடி, அம்மனை வணங்குவர்.

திருவாதிரைக்குப் பின், தைத்திங்கள். தை பிறந்ததும் விரதம் முடிந்து நீராடுவார்கள். அப்பொழுது ஆடும் ஆடல் - தை நீராடல். விரதத்தை வெற்றியோடு முடித்துவிட்டோம் என்ற உவகை உள்ளம் எல்லாம் பொங்கி வழிகின்றது. அந்த உள்ளக் கிடக்கையோடு தம்மை ஈன்ற அன்னையோடு சென்று நீராடுவர். துணையாய் இருப்பது ஈன்ற அன்னை. ஆனால் நெஞ்சில் நினைவால் இருப்பது உலகம்மை.

அடுத்து திருவெம்பாவை பாடல் இரண்டினை கவனிப்போம்.

திருவெம்பாவை - பாடல் 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளந்
தேசன் சிவலோகன் தில்லைசிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

ஒரு பெண்ணை எழுப்பியாகிவிட்டது. மற்றொரு பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறார்கள், பாவையர்கள்.

ஆபரணங்கள் அணிந்த ஆரணங்கு அவள். அவளிடத்து மங்கையர் தலைவி விளிக்கிறாள். “நேரிழையாய் - சிறந்த அணிகலன் அணிந்த பெண்ணே! நேர்மையின் உறைவிடமே

பாசம் பரஞ்சோதிக் கென்பாய், இராப் பகல் நாம்பேசும்
போது.”

நாம் எப்பொழுது உரையாடினாலும், உறங்குகின்ற நேரம் தவிர, இரவும் பகலும் என் அன்பு, பேரொளி மயமான அந்த அண்ணலுக்கு என்று தானே சொல்வாய்? ஆனால், இப்பொழுது என்ன நேர்ந்துவிட்டது, ஆசை திசை மாறிவிட்டதோ? இப்பொழுது மலர் பரப்பிய படுக்கையினிடத்து அன்பு கொண்டாயோஎன்று வந்த பெண்கள் கேட்கின்றார்கள்.

எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ?”

கடவுள்மீது கொண்ட காதல் கட்டிற்காதலாகியது எப்போது என்று கேட்டவுடன், அக்கன்னிக்குக் கோபம். “நேரிழை என்று நேர்த்தியாக அழைத்தீர்கள், நேர்மைக்கு மாறாக ஏன் சொல்கின்றீர்கள்? என்னைப் போன்றே நேரிழை அணிந்த தோழியர்காள் உங்கள் வாயில் இகழ்தலுக்கும் இடமுண்டோ?” ‘விளையாட்டாக நாங்கள் சொன்னோம்' என்றாலும் நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, இதுவா விளையாட்டு? விளையாடிப் பழிக்கின்ற காலமா இது?” எள்ளி நகையாடும் இடமா இது? என்று, எழுந்த பெண் கேட்கிறாள்.

”................... நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ

இந்தக் கேள்விக்கு, வந்த பெண்கள் பதிலுரைக்கிறார்கள்.

“................... விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம்

இறைவனுடைய திருப்பாதத்தில் உனக்குப் பற்று அதிகம் என்று சொன்னாயே. அந்த திருவடிகள் எப்படிப்பட்டன தெரியுமா? அந்த மலர்த் திருவடிகளைப் புகழ விண்ணோர்கள் நாணுகிறார்கள், பேரொளியைக் கண்டு கண்கள் கூசுவது போல்.

மாணிக்கத்து உள்ளொளிபோல் மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் பேசா பெருமையன்காண்

என்று பட்டினத்தார் அழகுற உரைக்கின்றார்.

இங்கே 'கூசும்' என்பதற்கு நாணும் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். ஏனென்றால், அப்பரடிகள் தேவாரத்தில் சொல்கிறார்கள் அல்லவா?

பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்க நிற்பன் அவர்தமை நாணியே

மலர்ப்பாதம் தந்தருள, வந்தருளஞ்
தேசன், சிவலோகன்

எளியவர்களாகிய நமக்கருள வந்த, ஞானாசிரியன் ஒளியுருவானவன் கயிலாயத்துள்ளவன்.

“..................... தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம், ஆரேலோர் எம்பாவாய்.”

அம்பலத்தே ஆடுகின்ற அரசன், தில்லைமாநகர்ச் சிற்றம்பலனாருக்குச் செய்யப்படும் அன்பு எப்படியுள்ளது, நாம் எந்நிலையினோம்?

புனித மார்கழி மாதத்தில் திருவெம்பாவைப் பாடல்கள் ஆலயங்களில் பாடப்படுவது மிகச் சிறப்பு!

மேற்கோள் நூல் : மாணிக்கத்தேன்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

5 கருத்து ஓலை(கள்):

மு.வேலன் December 27, 2008 at 10:39 AM  

அருமை. மகிழ்ச்சி!

இருபது பாடல்களும் அதன் விளக்கங்ளும் தடையின்றி பூர்த்தியடைய வாழ்த்துக்கள்!

A N A N T H E N December 27, 2008 at 12:26 PM  

நல்ல முயற்சி, தொடருங்க

Sathis Kumar December 27, 2008 at 1:22 PM  

நன்றி மு.வேலன், அனந்தன்!

மீனாட்சி சுந்தரம் December 27, 2008 at 6:17 PM  

everthin is great..keep in touch sathis....meenachisundram@gmail.com

Sathis Kumar December 27, 2008 at 6:59 PM  

//meenachisundram said...

everthin is great..keep in touch sathis....//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தங்களைப் பற்றி அறிய விழைகிறேன்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP