இண்ட்ராஃபிற்கு விருது!

>> Tuesday, December 9, 2008


சுவாராமின் இவ்வாண்டிற்கான மனித உரிமை விருது இண்ட்ராஃப் இயக்கத்திற்கும் சரவாக்கை மையமாகக் கொண்ட 'பெனான்சு' இயக்கத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த காலகட்டத்தில் பெருவாரியான மலேசிய இந்தியர்களை ஒன்றிணைத்து நாட்டை ஆட்டிப் படைக்கும் சக்திகளை எதிர்த்து நின்றும், நாட்டின் 13-வது பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கு நிர்ணய சக்தியாக விளங்கியும், மனித உரிமைகள் தொடர்பாக மலேசியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்ததாலும் இவ்வாண்டிற்கான சுவாரம் மனித உரிமை விருதை இண்ட்ராஃப்பிற்கு வழங்குவதாக நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளை உலகத்திற்கு படம்பிடித்து காட்டிய விதமும், காலனித்துவ ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள்வரை ஒடுக்கப்பட்டு இன்று வீதிக்கு வந்த நிலமையை இண்ட்ராஃப் தெளிவாக எடுத்துரைத்த விதமும் நீதிபதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மக்களுக்கு கிடைத்த விருது!

சரித்திரத்தில் மலேசிய அரசாங்கம் பயந்து நடுங்கிய ஓர் இயக்கம் உண்டென்றால் அது இண்ட்ராப் இயக்கமாகத்தான் இருக்க வேண்டும் என அவர்கள் கருதுகிறார்கள். இதன்வழி இண்ட்ராஃப் இயக்கம் சந்தித்த சவால்கள் ஒன்றிரண்டல்ல! இண்ட்ராஃப் தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இண்ட்ராஃப் தலைவரின் அனைத்துலக கடப்பிதழ் முடக்கப்பட்டது. இண்ட்ராஃப் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என அரசாங்கத்தால் முத்திரைக் குத்தப்பட்டது. இண்ட்ராஃப் இயக்கம் மலேசியாவில் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டது. இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் பலமுறை கைது செய்யப்பட்டு காவல் நிலையம், நீதிமன்றம் என அலைக்கழிக்கப்பட்டனர். இண்ட்ராஃப் இயக்கம் மலேசியர்கள் மத்தியில் இனத்துவேசம் வளர்ப்பதாக அரசு ஊடகங்களின்வழி குற்றஞ்சாஞ்சாட்டப்பட்டு கலங்கப்படுத்தப்பட்டன. இண்ட்ராஃப் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு சில அரசியல் கட்சிகள் லாபம் தேடின.

இத்தனைக்கும் இண்ட்ராஃப் ஒரு மனித உரிமை இயக்கம்தான் என்று நினைத்து பார்க்கும்பொழுது பெருமையாகவும், மேற்கண்ட சவால்கள் அனைத்தும் இண்ட்ராஃப்பிற்கு கிடைத்த உயர் விருதுகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

நியாயத்தை கேட்டால் நாம் அச்சுறுத்தப்படுவது அந்த காலம், நியாயம் கிடைக்காது போனால் தட்டிக் கேட்பது இந்த காலம்!

ஒற்றுமை எனும் விருதை தற்காப்போம், உள்ளத்தில் சோதியை அணையாது காப்போமாக!

வாழ்க மக்கள் சக்தி!

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP