திரு.உதயகுமாரின் வேண்டுகோள்..

>> Tuesday, December 16, 2008



13/12/2008

இண்ட்ராஃப் ஆதரவாளர்களே,

இண்ட்ராஃப் இயக்கம் தடைசெய்யப்பட்டுவிட்டாலும், நீங்களனைவரும் போராட்ட உணர்வை இழக்காமல் தொடர்ந்து போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை உரிமைப் பிரச்சனைகளை அரசாங்கம் கவனித்து, அதற்கொரு தீர்வுகாணும்வரை தொடர்ந்து அரசாங்கத்திற்கு நெருக்குதல் தரும் ஓர் இயக்கமாக நாம் திகழ வேண்டும்.

மலேசிய இந்தியர்களின் அடிப்படையான பிரச்சனைகள் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளில் தொகுக்கப்பட்டு கடந்தாண்டு ஆகசுட்டு மாதம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட அக்கோரிக்கைகளுக்காக நான் தொடர்ந்து போராடுவேன், இதற்காக பலகாலம் சிறையில் இருக்க நேர்ந்தால் அதற்கும் நான் தயார்! எனக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய 18 கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென்பதே!

அரசாங்கத்திடம் வழங்கப்பட்ட 18 அம்ச கோரிக்கைகளுக்கான முழுபொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். என் சகோதரர் திரு.வேதமூர்த்திக்கு உதவியாக நீதிமன்ற வழக்குகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பிற மூன்று வழக்கறிஞர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு நான் அரசாங்கத்தை இவ்வேளையில் வலியுறுத்துகிறேன். கடந்த ஓராண்டுகளாக சிறையில் வாடிவரும் அம்மூவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதில் எந்தவொரு நியாயமுமில்லை என்பதனால், அவர்கள் மூவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான் நிறையப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். இனிவருங்காலங்களிலும் மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளுக்கான போராட்டத்திற்காக தொடர்ந்து என் வாழ்வை அர்ப்பணிப்பேன். இந்த அம்னோ அரசாங்கம் கடந்த 51 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களை பலவகையில் ஏமாற்றி வந்துள்ளது.

அனைவரும் ஒருங்கிணைந்து ஒருமித்தக் குரலாக நம் உரிமைகளுக்காக குரலெழுப்புவோமாக. நம்மிடையே நிலவிவரும் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு வாருங்கள். என்றுமே இரு மனிதர்கள் ஒரேவிதமான சிந்தனைகளைக் கொண்டிருப்பதில்லைதான். ஆனால் அடிப்படை உரிமைகளை சமமாகக் கேட்கும் பொழுது அங்கு ஒருமித்தக் குரல்தான் நமக்குத் தேவைப்படுகிறது. இந்த ஒருமித்தக் குரலோடு தொடர்ந்து அரசாங்கத்தை சம உரிமை கேட்டு வலியுறுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், இதைவிட பெரியதொரு ஆக்ககரமான கடமையான சமுதாயப் பணிக்கு உங்களை அர்பணிப்பதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்வரும் 2009-ஆம் ஆண்டானது நாம் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் ஆண்டாக அமைய வேண்டும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து சமுதாயப் பணிக்கு தோல்கொடுக்க தயாராகுங்கள்!

இறைவன் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. அனைவரின் ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நம்மை எதிர்க்கொள்ளும் பெரிய சவால்களை ஒன்றிணைந்து சந்தித்து வெற்றிக் கொள்வோமாக!

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous December 16, 2008 at 9:17 PM  

உன்னத உத்தம புனிதனே...உங்களின் ஒவ்வொரு செய்தியும் நாங்கள் மிக கவனமாக செவிமடுக்கிறோம்..எங்கள் நாட்டு காந்தியாக ..எங்கள் வீட்டு குடும்ப நண்பராக நீங்கள் வலம் வருகிறீர்கள்.
நீங்கள் விதைத்த விதை இந்த ஒரு வருடத்தில் வேரூன்றி விட்டது.
சக்தி மிக்க சமுதாய சங்கிலியை கையில் கொண்டிருக்கும் நீங்கள்..பல காலம் நல்ல ஆரோக்கியத்துடனும் பொருளாதார வளத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்...
சதீஷ்....ரொம்ம நன்றி எங்களை அவருடன் இணைப்பதற்கு

Sathis Kumar December 17, 2008 at 4:04 PM  

வணக்கம் மூர்த்தி,

உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன் அன்பரே.

தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP