மிச்சம் இருந்த ஒரே இடம் எச்சம் இடும் பட்டியலில் சேர்ந்தது.
>> Sunday, November 4, 2007
தமிழனுக்கு மட்டும் எப்படிதான் இப்படியெல்லாம் புத்தி வேலை செய்கிறது பாருங்களேன். உலகத்திலேயே, தாம் வழிபடும் இடத்தை எச்சமிடும் ஒரு இடமாகக் கருதியவன் உலகின் மூத்தக் குடியில் தோன்றிய தமிழன் தான். எதையெல்லாம் செய்யக்கூடாதொ அதை செய்வதற்கென்றே ஒரு கூட்டம் அலைகிறது. அதில் சற்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நாதஸ்வர தவில் கோஷ்டியும் புதிதாக உறுப்பியம் பெற்றுவிட்டன. வாழ்த்துக்கள்..
கதைக்கு வருகிறேன்.
அண்மையில், நவராத்திரி விழாவின் உச்சக்கட்ட விழாவான விஜய தசமியன்று பினாங்கில் ஒரு ஆலயத்திற்குச் சென்றேன். விழாவில் அனைத்து பூஜைப் புனஸ்காரங்களும் வழக்கம்போல் இடம்பெற்றிருந்தாலும், அங்கு வந்திருந்தவரை அதிகம் திரும்பிப் பார்க்கச் செய்தது நாதஸ்வர தவில் கோஷ்டியின் அட்டகாசமான இசை மழைதான்.
இடையிடையே பக்தக் கோடிகளின் நாவில் "சும்மா அதிருதுல்லே" எனும் தாரக மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது. அனைவரின் பார்வையும் கவனமும் கோஷ்டியிடம் ஐக்கிய மாநாடு நடத்திக் கொண்டிருந்தன.
இதிலிருந்து உங்களுக்கு ஓரளவு யூகித்து அறிந்திருக்க முடியும், அங்கு ஒலித்த இசை வேறொன்றுமில்லை, "சிவாஜி" எனும் பக்தி படத்தின் இசைகள்தாம். அதனை இரண்டு ஏ.ஆர்.ரகுமான்கள் அருமையாக வாசித்து தங்கள் கலையின் தேர்ச்சியை பறைச்சாற்றிக் கொண்டிருந்தார்கள்.
குறிப்பு : இப்படங்களில் உள்ளவர்களுக்கும் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இதல்லவோ நம் ஆலயத்திற்குக் கிடைத்த வெற்றி...!! சகோதரர்களே,உங்கள் ஊர்களில் உள்ள கோயில்களில் எப்படி? இன்னும் ஆரம்பிக்கவில்லையா? இன்னும் கொஞ்சக் காலம் பொறுங்கள், பிறகு நீங்களே சொல்வீர்கள் இப்படி " ஆரம்பிச்சுட்டாய்ங்கையா...ஆரம்பிச்சுடாய்ங்கையா.....
இதல்லவோ உண்மையான இசையமுதம், நம் பாரம்பர்ய பாணி கலந்த இசை...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment