அம்னோ அரசாங்கத்தின் கல்வித் திட்டம் எனும் போர்வையில் சதித் திட்டம்

>> Sunday, November 18, 2007


எனக்கு ஏற்பட்ட சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதன்வழி அம்னோ அரசாங்கம் நம் தமிழ்ப் பள்ளிகளை எப்படி அழிக்க சதிவேலையில் இறங்கியுள்ளது என்பது தெரியும். அண்மையில் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் (2006-2010) அம்னோ அரசாங்கம் Pelan Induk Pembangunan Pendidikan (PIPP)16/ஜனவரி/2007 எனும் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முழுக்க முழுக்க தேசியப் பள்ளிகள் மட்டும் பயன்பெறும் வகையில் இதன் அமலாக்கத் திட்டங்கள் அதில் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதில் முக்கிய ஆறு அம்சங்கள் அடங்கியுள்ளன, இதொ அவை பின்வருமாறு :

1. Membina Negara Dan Bangsa
நாட்டையும் சமுதாயத்தையும் உருவாக்குதல் / சிறந்த வளர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லல்.

2. Membangunkan Modal Insan
சிறந்தக் கல்வி, நன்னடத்தை, தொலை நோக்குப் பார்வைக் கொண்ட இளைஞனை உருவாக்குதல்.

3. Memperkasakan Sekolah Kebangsaan
தேசியப் பள்ளிகளை தரமான நிலைக்கு இட்டுச் செல்லல் / வளப்படுத்துதல்.

4. Merapatkan Jurang Pendidikan
கல்வித் தரத்தில் அனைத்து பள்ளிகளையும் சமநிலைக் காணச் செய்தல்.

5. Memartabatkan Profesion Keguruan
ஆசிரியர் தொழிலை மேம்படுத்துதல்.

6. Melonjakkan Kecemerlangan Institusi Pendidikan
தரமான கல்வியை நோக்கி கல்வி நிலையங்களை பலவகையில் மேம்படுத்துதல்.

இந்த ஆறு அம்சங்களும் மலேசியாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பயன்படுத்தப்படுமா? இல்லை!! இதற்கு ஒரு நல்ல உதாரணம் அண்மையில் வெளியான மக்கள் வயிற்றெரிச்சலைக் கட்டிக் கொண்ட 2008-ஆம் ஆண்டு நாட்டின் வரவு செலவுக் கணக்கறிக்கையாகும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் நம்மை உறைய வைத்தச் செய்திகளில் ஒன்று, தமிழ் பள்ளிகள் வளர்ச்சிக்காக ஒரு சல்லிக் காசுக்கூட அம்னோ அரசாங்கம் ஒதுக்கவில்லை என்பதேயாகும். அப்படியென்றால் PIPP எதற்கு? யாருக்காக இந்தத் திட்டம்? கண்டிப்பாக அது நம் பள்ளிகளுக்கு இல்லை. முழுக்க முழுக்க தேசியப் பள்ளிகளுக்கு மட்டும்தான் இத்திட்டம் என்பது திண்ணமாகிவிட்டது.

இத்திட்டத்தில் மூன்றாவது அம்சம்தான் மிகவும் சுறுசுறுப்பாக அமல்படுத்தப்பட்ட அம்சமாகும். என்னடா, தமிழ் மொழியின் மீது திடீரென்று இவ்வளவு அக்கறை? அதிலும் மலாய்க்காரர்கள் தமிழ் மொழி, சீன மொழி பயில ஊக்குவிக்கப்படுவது ஆச்சர்யம் அல்லவா? அதெல்லாம் ஒன்றுமில்லை.. எதிர்காலத்தில் நாம் எந்த ஒரு இரகசியமும் பேச முடியாதல்லவா? அதற்குதான் இந்தத் திட்டம்.. அதோடு தமிழ்ப் பள்ளிகளையும் அடியோடு அழித்துவிடலாம் அல்லவா..அதுதானே அம்னோ அரசாங்கம் கண்டுக்கொண்டிருக்கும் பகல் கனவு.. இந்த வருடம் சுமார் 70 தேசியப் பள்ளிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் தமிழ்த் துறையில் பயின்றவர்களும், ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களும், அனுபவமுள்ள தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும், தமிழே தெரியாத ஆசிரியர்களும் "ரோஜாக்" கலவைப் போல் ஆங்காங்கே பணி நிமித்தம் அமர்த்தப்பட்டுள்ளோம். ஏற்கனவே தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைவேறு. அதிலும் இளங்கலை பட்டப்படிப்பு ஒரு தமிழாசிரியர் படித்துவிட்டால் அவரை "அல்லாக்காக" தூக்கி தேசியப் பள்ளிகளில் போடுவது என பல அராஜகங்களுக்கிடையில் இது வேறு. தமிழே தெரியாத ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளில் இருக்க, நல்லத் தமிழ் வளம் உடைய ஆசிரியர்கள் தேசியப் பள்ளிகளுக்கு அர்பணிப்பு என்கிற தொண்டு செய்ய அமர்த்தப்படுவதில் அம்னோ அரசாங்கம் தீட்டும் திட்டம் வெளிச்சத்திற்கு வருகின்றது.

அண்மையில் வெளிவந்த வரவு செலவுத் திட்டத்தில் தேசியப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு மணி நேர பாடவேளைக்கு ம.ரிங்கிட் 50 வெள்ளி வீதம் ஒரு வாரத்திற்கு ரி.ம 125, ஒரு மாதத்திற்கு ரி.ம 500 வெள்ளியை கொடுக்கவுள்ளதாம். இவை அனைத்தும் நம் இன ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளில் நிரந்தரப்படுத்துவதற்கும், புதிய ஆசிரியர்களை ஈர்ப்பதற்கும் அம்னோ அரசாங்கம் போடும் பிச்சைகள். அதோடு ஆசிரியர் பயிற்சி கழகங்களில் புதியதாக தேசியப்பள்ளிகளுக்கான தமிழ் எனும் கலைத்திட்டத்தையும் உருவாக்கி பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அடுத்த வருடம் நாடு தழுவிய நிலையில் தேசியப் பள்ளிகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள். வாரத்திற்கு 5 பாடவேளை மட்டும் கொண்டிருக்கும் தேசியப் பள்ளித் தமிழ் மொழிப் பாடத்திற்கு ரி.ம 500 வெள்ளியும், தமிழ்ப் பள்ளிகளில் வாரத்திற்கு 12 பாட வேளை தமிழைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு பழைய சம்பளம் என்பது எந்த விதத்தில் நியாயம். அதோடு தேசியப் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் சரியாக போதிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. அனைத்து இனத்தவரும் தமிழ் கற்கலாம் என்கிற சூழ்நிலை இருப்பதனால் கலைத்திட்ட மேம்பாட்டு வாரியம் அமைத்துக் கொடுத்த பாட புத்தகம் முற்றிலும் ஒவ்வாததாக உள்ளது. தரமும் குன்றிய நிலையில் அச்சிடப்பட்டுள்ளது. பாவம் யாருடைய கட்டளையின் பேரில் விரு விருவென அச்சடித்துக் கொடுத்தார்களோ.. எழுத்து அறிமுகம் அறவே இணைக்கப்படவில்லை. எடுத்த எடுப்பில் வாக்கியங்களை வாசிக்கச் சொல்வது தமிழ்க் குழந்தைகளுக்கே கஷ்டம். இதில் மலாய் இனப் பிள்ளைகள் தலையைச் சொறிந்துக் கொண்டு ஏதோ ஒப்பிற்கு நான்கு வார்த்தைகள் கற்றுக்கொண்டுச் செல்கிறார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் தமிழ்ப் பாடம் சில தேசியப் பள்ளிகளில் பள்ளி நேரத்தில் நடைபெறுவதில்லை. அதனால் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் எடுத்து பாடம் நடத்த வேண்டியுள்ளது. இதற்குக் காரணம் ஒரு சில தேசியப் பள்ளிகள் இன வெறியைக் கொண்டிருப்பதனால்தான். தேசியப் பள்ளிகளில் அராபிய மொழிப் பாடம் நடத்தும் அதே வெளையில்தான் தமிழ்ப் பாடமும் நடத்தப்பட வேண்டும் என்பது நியதி. இந்த முறையை சிலப் பள்ளிகள் பின்பற்றுவதில்லை. அராபிய மொழிப் பாடமும் தமிழ் மொழிப் பாடமும் தேசியப் பள்ளிகளில் தேர்வுப் பாடமாக இருப்பதனால் மாணவர்கள் தங்கள் விருப்பப்பாடங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சிலப் பள்ளிகள் அராபிய மொழிப் பாடத்தை கட்டாயப் பாடமாக ஆக்கிவிட்டன. இதில் அராஜகம் என்னவென்றால், நம் தமிழ்ப் பிள்ளைகளும் அராபிய மொழியைக் கட்டாயமாகப் படித்தாக வேண்டும். எனக்குத் தெரிந்து தேசியப் பள்ளிகளில் நம் தமிழ்ப் பிள்ளைகள் அராபிய மொழியைப் படித்து தேர்வில் குறைந்த புள்ளிகளைப் பெற்று தர வரிசையில் பின் தங்கி நிற்கிறார்கள். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது!! இதனைக் கவனிக்க வேண்டிய மாவட்ட கல்வி இலாகாவும் சும்மா இருந்துவிடுகிறது.

ஒரே ஒரு அம்சத்தை வைத்தே இவ்வளவு சதி வேலைகள் நடக்கிறது என்றால், மற்ற அம்சங்கள் கூறும் இரகசியக் கதைகள்தான் என்ன?

இவற்றையெல்லாம்விட இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இன்னும் ஆக்கப்படாததிற்கு என்னக் காரணம். அதற்குக் காரணம் அம்னோ!

தமிழா விழித்திரு!! உன் உரிமைக்காக போராடு!!

தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP