தமிழர்களை 'கில்லிங்', பரையர்கள் என்பதா?
>> Monday, August 4, 2008
உலு லங்காட் மாவட்டத்தில் தெலுக் பங்லிமா காரங் தேசிய இடைநிலைப்பள்ளியில் பணிப்புரியும் ருஸ்னித்தா அபு ஹாசான் எனும் ஆசிரியை, அங்கு பயிலும் ஐந்தாம் படிவ தமிழ் மாணவர்களை 'கில்லிங்', 'பரையா' என்று சாதிப் பெயரை மேற்கோள் காட்டி இழிவாகப் பேசியதுடன், அவர்களை வெறித்தனமாக தாக்கியும் உள்ளார். இச்சம்பவம் குறித்து நேற்று நண்பன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
தெலுக், ஆக.3-
சாதிப்பெயரைச் சொல்லி இந்திய மாணவர்களை ஆசிரியை கேவலமாகப் பேசி அவமானப் படுத்தியதாக இங்குள்ள ஓர் இடை நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் களில் சிலர் நேற்று முன்தினம் மாலை 7.00 மணியளவில் தெலுக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
கடந்த ஜூலை 22ஆம் தேதி வகுப்பறையில் வரலாறு பாடத்தை போதிக்க வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை நாற்காலியை விட்டு எழுந்து நிற்கச் சொன்னதுடன் இன்று உங்களின் பொறுமைகளை சோதித்துப் பார்க்கவிருக்கிறேன் எனக் கூறி அவர்களை தகாத வார்த்தைகளால் வெறித்தனமாக திட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாணவர்களை நோக்கி கையைக் காட்டிய அவர் கிள்ளிங் - பரையா என்று சொன்னதுடன் சாதிப்பெயரைச் சொல்லிக் கொண்டே மிகவும் கேவலமான வார்த்தைகளால் அவமானப்படுத்தியபோது ஏன் இப்படி எங்களை பேசுகிறாய் என அந்த வகுப்பில் உள்ள மாணவன் தனசேகரன் என்பவர் ஆசிரியையை நோக்கி கேட்டதாக கூறினார்.
வாயால் சொல்லக்கூடாது என்றால் கரும்பலகையில் எழுதுகிறேன் என கூறிய ஆசிரியை தாம் பேசிய வார்த்தைகளை எழுத முற்பட்டபோது நான் வகுப்பறையை விட்டு வெளியே சென்றவுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியை இன்று பாடம் நடத்த முடியாது என கூறிவிட்டு அவரும் வெளியேறியதாக தனசேகரன் நண்பனிடம் கூறினார்.
இதே போன்றதொரு சம்பவம் கடந்த மாதம் 17ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விவரித்த ஐந்தாம் படிவம் பயிலும் மாணவன் ரவின்குமார் (வயது 18), ஆசிரியர் தினத்தன்று சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு நாங்கள் வாழ்த்தோ அல்லது பரிசுகள் எதையும் வழங்கவில்லை என்பதனால் எங்கள் மீது அவருக்கு ஏற்கெனவே அளவிற்கு அதிகமான ஆத்திரம் மேலோங்கி இருந்தது என்றார்.
அன்று முதல் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி வந்த அவர் இனி உங்களுக்கு படித்துத் தரமாட்டேன் என்று வழக்கம்போல் காலையில் இடைவேளை நேரத்திற்குப் பின்னர் கோபத்துடன் வகுப்பறைக்கு வந்த சம்பந்தப்பட்ட அதே ஆசிரியை நீங்கள் அனைவரும் என்னவற்றை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் எனக் கேட்டார்.
நாங்கள் எதையும் சாப்பிடவில்லை எனக் கூறியபோது, புத்தகம் ஒன்றை கொண்டு எங்கள் வாயை திறந்து பார்த்ததுடன் அவற்றால் வாயில் அடித்தார். பின்னர் எங்களை மிகக் கேவலமாகத் திட்டினார் என்றார் ரவின்குமார்.
ஆசிரியையின் அராஜகமான இப்போக்கு குறித்து பள்ளியின் முதல்வரிடம் கடிதம் வழங்கியிருந்தோம் நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர் இன்றுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர் கூறினார்.
இதே போன்றதொரு மற்றொரு சம்பவம் ஒன்று கடந்த வாரத்தில் நிகழ்ந்ததாக இப்பள்ளியில் சம்பவத்தன்று காலையில் வகுப்புக்கு வந்த ஆசிரியை எங்களைப் பார்த்து வழக்கம்போல் கிள்ளிங் என கூறியதுடன் சாதிப்பெயரைச் சொல்லி கொச்சைப்படுத்தினார். பின்னர் கையில் வைத்திருந்த பாடப் புத்தகத்தைக் கொண்டு மாணவர்களை தாக்கியதோடு என்னை வாயில் என்னவற்றை வைத்திருக்கிறாய் என கேட்டு அடித்தார் என மாணவன் கணபதி தெரிவித்தார்.
இந்திய மாணவர்களைக் கண்டால் எள்ளாகப் பொறியும் முன்னாள் போலீஸ் அதிகாரி எனக் கூறப்படும் ஆசிரியை இப்பள்ளியில் ஐந்தாம் படிவம் பயிலும் மாணவன் வினோத் என்பவரின் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தியதுடன் அவரை தனது காலால் எட்டி உதைத்தும் இருக்கிறார்.
இதற்கிடையே இதுகுறித்து பள்ளி முதல்வருடன் தொடர்பு கொள்ள முயன்றபோது, எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
இவ்விடயம் குறித்து ஓலைச்சுவடி அந்த மதிகெட்ட இனவெறி ஆசிரியையை வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர்களின் மீது காழ்ப்புணர்ச்சியை அள்ளித் தெளித்து அவர்களிடையே தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தும் இது போன்ற மானங்கெட்ட சென்மங்களால் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய ஆசிரியர்த் தொழிலுக்கு ஒரு களங்கம் என்றுதான் கொள்ளவேண்டும்.
'கில்லிங்' என்ற பதம் எப்படி தோன்றிற்று, அதன் பின்னனி என்ன? மருத்துவர் செயபாரதி அதற்கான விளக்கத்தை தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கட்டுரையை வாசிக்க இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : http://mozhi.net/keling/Keling.htm
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment