கல்லை மட்டும் கண்டால்...
>> Saturday, August 30, 2008
ஊனக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு இவை வெறும் கற்குவியல்கள் தான். கலைக் கண்ணுடன் பார்ப்பவர்களுக்கு, வீழ்ந்து நொறுங்கிக் கிடக்கும் கற்கள் ஒவ்வொன்றும் தன் சோகக் கதையினைச் சொல்லும்.
ஒரு வீட்டைக் கஷ்டப்பட்டு, கடன்பட்டு கட்டி முடிக்கிறீர்கள். ஆனால் ஒரே நாளில் உங்கள் வீடு இயற்கை இடர்களால் இடிந்து போனால், இடிந்தது வீட்டின் சுவராக மட்டும் இருக்காது, உங்கள் மனமும்தான் இடிந்து போயிருக்கும். இடிந்து போன வீட்டுச் சுவரைப் பார்க்கும் உங்கள் கண்களுக்கு மட்டும் அவற்றின் உயிர்ப்புதன்மை தெரியும், காரணம் கஷ்டப்பட்டு உழைப்பைக் கொட்டி எழுப்பிய வீடு அது.
அதேப்போல்தான் ஆயிரம் வருடங்கள் காலம் திடமாக நின்ற, தமிழகத்தின் பழம்பெரும் கோயிலான தஞ்சை இராசராசீச்சுரம் திருக்கற்றளி, இன்று மெல்ல மெல்ல சில பொறுப்பற்ற தரப்பினரின் கையில் சிக்குண்டு சின்னாப்பின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அக்கோயிலின் உயிர்ப்பை உள்வாங்கிக் கொண்ட பல கலை ரசிகர்களின் நெஞ்சம் இப்பொழுது விம்மிக் கொண்டிருக்கும் என்றுக் கூறினால் அது மிகையாகாது. இக்கோயிலின் பாதுகாப்பிற்கு அரணாக விளங்க வேண்டிய இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையே 'வேலியே பயிரை மேய்ந்தது போல' அதன் அழிவிற்கு வித்திட்டு விட்டதை நினைத்தால் சங்கடமாக உள்ளது.
இக்கோயிலின் திருப்பணிக்கு தமிழக அரசு போதிய நிதியுதவிகள் வழங்கியுள்ள போதிலும், அதனை முறையாகப் பயன்படுத்தாது, முறையான ஆய்வுகள் நடத்தாது, பழங்கால கட்டிடங்களைக் கையாள்வதில் போதுமான நிபுணத்துவம் இல்லாத தரப்பினரைக் கொண்டு இக்கோயிலைப் பதம் பார்த்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இக்கோயிலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தினை எடுத்துக் காட்டும், மேலும் பல படங்கள் உங்கள் பார்வைக்காக..
படங்களைத் தரவிறக்கம் செய்ய நினைத்தால் இங்கே சுட்டவும் : தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆபத்து!
3 கருத்து ஓலை(கள்):
முறையான பயிற்சி இல்லாத சாதரண வேலையாட்களை கொண்டுதான் இவர்கள் இது போல பணியினை மேற்கொள்கிறார்கள்.கூலி வேலை செய்பவனுக்கு அது சாதரண கல் தான்.நூற்று கணக்கான வருடம் ஆனாலும் இது போல ஒரு கோயிலை நம்மால் கட்ட முடியுமா??.
நிச்சயம் முடியாது பாபு, அக்காலத்தவர்கள் கொண்டிருந்த பொறுமை நமக்கில்லாததனால்தான், இப்படி அவசர அவசரமாக கோயிலை புனரமைக்கப்போய், சேதங்கள் பல நிகழ்ந்துள்ளன..
'கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை'
பொறுப்பற்றவர்கள்!!!
இது போன்ற கலை காவியத்தை எழுப்ப நமக்கு பொறுமையிருந்தாலும் நிச்சயம் அது போன்ற அலை நுட்பமும் உறுதியும் இருக்காது! பாதுகாக்கவே முடியவில்லை, இதில் எங்கு கட்ட முடியும்!
நல்ல பகிர்வு...
Post a Comment