படத்தைப் பார்த்து கவிதை கூறுங்கள் பார்ப்போம்..
>> Tuesday, August 5, 2008
மேலே நீங்கள் காணும் படமானது, உபயோகத்தில் இல்லாத அல்லது கைவிடப்பட்ட நிலையில் தனித்து நிற்கும் ஒரு நிழற்குடையாகும். இதேப்போன்று நாட்டில் பல நிழற்குடைகள் பேருந்து ஓட்டமில்லாத நிலையில் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. ஆனால் கைவிடப்பட்ட இந்நிழற்குடைகள் பலரின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் நினைவகங்களாக இருப்பதுதான் அதன் சிறப்பம்சம்.
உங்கள் வாழ்க்கையில் நிழற்குடை ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா?
* நீங்கள் காதலன்/காதலியைச் சந்திக்கும் இடமா?
* நண்பர்களுடன் ஒன்றுகூடி அரட்டை அடிக்கும் இடமா?
* தனிமையை நாடிச் செல்லும் இடமா?
* அல்லது பேருந்திற்கு காத்திருக்கும் வேளையில் ஏதேனும் சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?
உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்களேன். கவிதை எழுதும் திறமைக் கொண்டவர்கள், படத்தில் காணும் நிழற்குடையை வைத்து கவிதை எழுதுங்கள். ஹைக்கூ, மரபுக் கவிதை, உரைவிச்சு ஏதுவாயினும் (தமிழிலோ / ஆங்கிலத்திலோ) தட்டச்சு செய்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் : olaichuvadi@gmail.com
உங்கள் கவிதைகள் பிரசுரிக்கப்படும்.
உங்கள் வாழ்க்கையில் நிழற்குடை ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா?
* நீங்கள் காதலன்/காதலியைச் சந்திக்கும் இடமா?
* நண்பர்களுடன் ஒன்றுகூடி அரட்டை அடிக்கும் இடமா?
* தனிமையை நாடிச் செல்லும் இடமா?
* அல்லது பேருந்திற்கு காத்திருக்கும் வேளையில் ஏதேனும் சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?
உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்களேன். கவிதை எழுதும் திறமைக் கொண்டவர்கள், படத்தில் காணும் நிழற்குடையை வைத்து கவிதை எழுதுங்கள். ஹைக்கூ, மரபுக் கவிதை, உரைவிச்சு ஏதுவாயினும் (தமிழிலோ / ஆங்கிலத்திலோ) தட்டச்சு செய்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் : olaichuvadi@gmail.com
உங்கள் கவிதைகள் பிரசுரிக்கப்படும்.
16 கருத்து ஓலை(கள்):
பயன் பட்டேன் - இன்று
பாழ் பட்டேன்!
பாவிகளை வேண்டேன் - உதவிக்கு(ப்)
பசுமையைத் துணைகொண்டேன்!
கவிதை அருமை, நன்றி ஐயா..
பாசி படிந்த - உன்
மேனி
நீ எனக்கு
பாசம் காட்டிய ஞானி.
வெயில் வெளுத்தாலும்
மழை அடித்தாலும்
தாயின் கருவென
எனை உள்
அனைத்துக் கொண்டாய்
உன் உடல்
கொடுத்து காத்தாய்
உடல் வெந்தாலும்
மழையில் நனைந்தாலும்
நிலையென இருப்பாய்
என என் காதில் சொன்னாய்.
சொல் தவறாமல்
நீ நின்றாய்- அதில் வென்றாய்.
இதோ!
சரித்திரத்தை சுமந்தவளாய்- நீ
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாய்.
செப்பனிடுவார்களா எனும்
எதிர்பார்ப்பில் உன்
சேயின் வரவை.
நண்பரே, நிழற்குடைக்கு பெண் வடிவம் கொடுத்து தாய்மைக்கு நிகராக போற்றியிருக்கிறீர்கள். உங்கள் கவிதைக்கு நன்றி.
பயன்பாட்டில் இல்லாத நிழற்குடையே
உனக்கு ஏன் இத்தனை வருத்தம் ?
என்றென்றும் கூட்டம் குழுமித் திரிந்த உன்னில்
இன்று காணும் வெறுமை உன்னை வெறுப்பேத்தியதோ?
நீ மட்டும்தான் இப்படி தனிமையில் தவிப்பதாய்
உனக்குள் ஒரு நினைவோ?
சம்பாதிக்கும் வரை சகல மரியாதைகளுடன் இருந்து
ஓய்வு பெற்றவுடன் அத்தனையையும் இழந்துவிட்டு
உன் போல் ஆயிரம் வயோதிக பெற்றோர்
ஒவ்வொரு வீட்டிலும் உண்டு என்பதை நீயும் புரிந்துகொள்.
உன்னை பார்க்கும் போது எனக்கு
வாழ்ந்து கெட்ட குடும்பங்களும் நினைவில் வந்தாலும்,
ஓய்வு பெற்ற வயோதிக பெற்றோர் தான் அதிகம் என்பதால்
அவர்களை நினைத்து நீ உன் கவலை விடு.
ஓய்வுப் பெற்ற பெற்றோர்களின் நிலைமையை நன்கு இடித்துரைத்திருக்கிறீர்கள் திரு.ஜோசப்.. எதற்கும் பயன்படாதவர்கள் என வீட்டை விட்டு விரட்டப்பட்ட பெற்றோர்கள், நிழற்குடையில் தஞ்சம் புகுந்த கதை எத்தனை எத்தனையோ...?
நிழற்குடையை வைத்து சமுதாயக் கருத்தை முன்னிறுத்தியமைக்கு மிக்க நன்றி திரு.ஜோசப்.
//சதீசு குமார் said...
கவிதைக் காதலி புனிதா அவர்களே, ஓலைச்சுவடியில் உங்கள் கவிதையை பரிசளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.//
தாரளமாய்.... :-)
" நேத்து ஏன் வரல? காத்துக்கொண்டிருந்தேன். ஒன்னு சொல்லணும். நான் என் மாமா வீட்டுக்குப் போய் தங்கி தொழில் கத்துக்கப் போறேன். வருமானம், வசதி எல்லாம் தேட போறேன். போய்ட்டு வரேன். ஆனா உன்ன என்னால மறக்க முடியாது. இத்ஹு சத்தியம்."
அன்று,
நீ என்னுடையவன்,
நானோ உன் இதய தேவி,
இன்று,
நீ உன் மாமன் மகளின் கணவன்,
நானோ வேறொருவன் மனைவி,
ஆனால்,
இன்றும்,
மனத்திரையில் நிழலாடுகிறது
அந்த சொற்கள்...
உன் உருவம்...
இந்த நிழற்குடை...
என் கண்ணீர்...
"வாங்க போகலாம்" என் பேத்தி அழைக்கிறாள்...
நினைவோ முள்ளாய் குத்துகிறது...
(எதோ என் நினைவுக்கு வந்தது -மலர்விழி)
தோல்வி கண்ட இரு காதலர்களின் நினைவுகள் - வயோதிகம் அடைந்தும் பசுமையாய்த் தாங்கி நிற்கும் நிழற்குடை. அருமை..
மழைக்கும் வெயிலுக்கும்
தனிமைக்கும் இனிமைக்கும்
மனிதன் அண்டிய நாலுகால்
மண்டபமே
இனி மறந்தும் கனவிலும்
நினைவிலும் நிஜத்திலும்
உனை நெருங்காரே- மனிதப்
பிண்டங்களே
திடத்திற்கும் உறுதிக்கும்
உழைப்புக்கும் பொறுமைக்கும்
பொருள் வடிவம் கண்டோய் - நல்
ஆசிரியனே
காலமும் கோலமும் - உன்
மேனியை பாசிகொண்டு
பதம் பார்த்திடினும் - நீ கலங்கிடாத கலங்கரைவிளக்கமே
உன் சேவை
மனித குலத்திற்குத்
தேவை...
கவிதையில் சொல்லாடல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. கருத்துகள் மிகுந்த கவிதை. கவிதைக்கு நன்றி நளினி.
எதற்கென என்னை
படைத்தீரோ மனிதரே
அதற்கெனப் பயன்படாது
பாழடைந்து நிற்கிறேன்
ஏனெனிலிந்த நிழற்குடை
கையில் ஏதும் இல்லை!
எதற்கென உம்மை
இறைவன் படைத்தானோ
அதற்கெனவே வாழ்ந்து
தேடுவீரா அர்த்தம்
நீவிராவது வாழ்விலே?
நிச்சயம் முடியும்
ஏனெனிலது உம் கையிலே!
மனிதர்கள் அவரவரின் பிறப்பின் நோக்கத்தினை எய்திடக் கூறும் கருத்து அருமை. நிழற்குடையே அறிவுரைக் கூறுவதுபோல் சொல்லியிருக்கும் பாங்கு பாராட்டிற்குரியது. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே..
2002 இல் நாம் வன்னிக்குச் சென்ற போது கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருந்த வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனத்தில்தான் தங்கினோம்.
வெண்புறா நிறுவனத்துக்கு அப்போது பொறுப்பாக இருந்தவர் வீரன். வெண்புறாவில் பணி புரிந்த, சிகிச்சை பெற்ற, தங்கியிருந்த அனைத்து உறவுகளையும் போலவே வீரனும் எங்களுடன் அன்போடு பழகினார். அந்த நிறுவனத்தில் இருந்த பல பேரையும் போல வீரனுக்கும் ஒரு கால் செயற்கைக்காலாகவே இருந்தது. ஆனாலும் செயற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.
அந்த சமயத்தில்தான் வற்றாப்பளைப் பொங்கல். வெண்புறா உறவுகள் அத்தனை பேரும் அங்கு போவதாகத் தீர்மானித்தார்கள். ஒரு வான் பிடித்து எல்லோருமாகப் புறப்பட்டோம். கரடு முரடான ஏ9 பாதையில் ஆரம்பித்த அந்தப் பயணம் ஒரு இனிமையான பயணம். அந்தப் பயண அனுபவத்தைத் தனியாக எழுதலாம்.
முல்லைக் கடற்கரையில் (வைகாசி 2002)
போகும் போது முல்லைக் கடற்கரைக்குச் சென்று அங்கிருந்து வீரனின் வீட்டுக்குச் சென்று அவரின் மனைவியையும், குழந்தையையும் பார்த்து விட்டுப் போவதாகத்தான் தீர்மானித்திருந்தோம். அது வீரனின் விருப்பமும் கூட. முல்லைக் கடற்கரையில் சில மணி நேரங்களைக் கழித்து விட்டு வீரனின் வீட்டுக்குச் சென்ற போது அங்கு வீரனின் மனைவி எங்களைப் புன்னகையுடன் வரவேற்றார். அவரது இரு சகோதரர்கள் மாவீரர்கள்.
வற்றாப்பளை அம்மன் கோவிலில் ஹொல்கர், வீரனின் மனைவி, வீரன்
மதியஉணவு மரக்கறிகளுடன், பப்படமும் சேர்ந்து சுவைத்தது. வீரனின் மனைவி, குழந்தைகளுடனான பொழுதுகள் இனித்தன. வெண்புறா உறவுகள் எல்லோரும் ஆள் மாறி ஆள் மாறி வீரனின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரிந்தார்கள். கதை, சிரிப்பு,... என்று சில மணி நேங்களைக் கழித்து விட்டு மாலையில் வற்றாப்பளைக்குப் புறப்பட்டோம்.
ஹொல்கருடன் வீரனின் குழந்தை
வீரனின் மனைவி எப்போதுமே புன்னகை மாறாத முகத்துடன் இனிமையாகக் கதைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்.
ஜேர்மனிக்குத் திரும்பிய பின்னும் வீரனின் அந்த வீடும், பப்படம் மொருமொருக்க வீரனின் மனைவி மகிழ்வோடு பரிமாறிய அந்த விருந்தும், புன்னகை தவழ்ந்த முகத்தோடு எம்மோடு உறவாடிய வீரனின் மனைவியும் அவ்வப்போது என் நினைவுகளில் மிதந்து கொண்டே இருந்தார்கள்.
சில வருடங்கள் கழித்து வீரன் ஜேர்மனிக்கு வந்திருப்பதாக அறிவித்தல் வந்து, எம்மைக் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சொல்லி எமது வீட்டுக்கும் வந்தார்.
மனைவி, குழந்தைகளைப் பற்றி விசாரித்த போது 2004இல் ´கடலே எழுந்து வீழ்ந்த போது சுனாமி அலையோடு போய் விட்டார்கள்´ என்றார் வேதனையோடு.
மனைவியின் நினைவாக நிழற்குடை ஒன்றைக் கட்டியுள்ளதாகவும் சொன்னார். இப்போதெல்லாம் நிழற்குடைகளைக் காணும் போது பல நூறு நினைவுகளின் மத்தியில் வீரனின் மனைவியின் புன்னகையும், அந்தக் குழந்தையும முகம் காட்ட மறப்பதில்லை.
சந்திரவதனா
8.8.2008
http://manaosai.blogspot.com/
வெயில் மழையில்
அரவணைத்த எனக்கு
இப்போது கட்டாய ஓய்வு.
தடங்கள் மாறிப்போய்
வாகனங்களும் காணோம்
தூரத்தில் இருந்த பசுமையில்
சில துக்கம் விசாரிக்க
காலடியில் வந்துவிட்டன
நான் பார்த்த
காதல்கதைகள் கேட்டறிய
பேருந்துகள் வரிசையாய்
நின்று போகும் ஒருகாலத்தில்;
இப்போதெல்லாம் பேருந்துகள்
மட்டுமில்லாமல் காதலர்களும்
தடத்தை மாற்றிவிட்டார்களாம்.
பின்னால் முளைத்திருக்கும்
அலைப்பேசி கோபுரம்
அலட்டிக்கொல்கிறது தன்னிடம்
ஆயிரம் காதலர்கள் பேசுவதாக
இதெல்லாம் பரவாயில்லை.
ஒரு மழை நாளில்
பேருந்து வந்த பரபரப்பில்
அம்மா இழுத்த இழுப்பில்
விளையாடிக்கொண்டிருந்த
சக்கரத்தை என்மேல்
சாய்த்துவிட்டுப் போன சிறுவன்
இன்றுவரை வரவில்லை
காத்திருக்கிறோம் இன்னும்
காலங்களும் சக்கரமும்
மேலும் சுழல்வதற்கு.
அனுஜன்யா
(ஜோசப் சொல்லித்தான் தெரிந்தது உங்கள் வலைப்பூ. தாமதத்திற்கு மன்னிக்கவும்)
//மனைவியின் நினைவாக நிழற்குடை ஒன்றைக் கட்டியுள்ளதாகவும் சொன்னார். இப்போதெல்லாம் நிழற்குடைகளைக் காணும் போது பல நூறு நினைவுகளின் மத்தியில் வீரனின் மனைவியின் புன்னகையும், அந்தக் குழந்தையும முகம் காட்ட மறப்பதில்லை.//
இது மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம். அன்பு மனைவிக்காக, காதலின் சின்னமாக நிழற்குடை உருப்பெற்றதில் பொதுநலமும் கலந்திருக்கின்றது.
கட்டுரைக்கு நன்றி திருமதி.சந்திரவதனா அவர்களே..
//(ஜோசப் சொல்லித்தான் தெரிந்தது உங்கள் வலைப்பூ. தாமதத்திற்கு மன்னிக்கவும்)//
பரவாயில்லை அனுஜன்யா.. உங்களுடைய கவிதையையும் பிரசுரித்து விட்டேன், நன்றி.. :)
Post a Comment