சுவாமி சிதானந்தா நேற்றிரவு மகா சமாதி..
>> Friday, August 29, 2008
'தனித்திரு, பசித்திரு, விழித்திரு' என்ற வாசகங்களின் வழி ஆன்மீத்திற்கு அடிப்படையான ஒழுக்கங்களை எளிமையாகவும், அதே வேளையில் தெளிவாகவும் உலக மக்களுக்கு எடுத்தியம்பும் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் தலைவர் சுவாமி சிதானந்த சரசுவதி, நேற்றிரவு மலேசிய நேரப்படி இரவு 11 மணியளவில் ரிஷிகேசில் மகா சமாதியை எய்தினார்.
தனது இனிமையான புன்னகையிலும், அன்பான பேச்சிலும் லட்சக்கணக்கான மனங்களின் ஆன்மீகத் தேடல்களுக்கு 'உள்ளங்கை நெல்லிக்கனி'தான் ஆன்மீகம் என எடுத்துக் காட்டியவர் சுவாமி சிதானந்த சரசுவதி.
1943ல் சிறீ சுவாமி சிவானந்தர் ஆசிரமத்தில், தன் ஆன்மீகத் தேடல்களைத் தொடங்கிய சிறீதர் ராவ் (சுவாமி சிதானந்தாவின் இயற்பெயர்) 1948ல் தொடங்கப்பட்ட யோக வேதாந்த பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகவும், ராஜ யோக பேராசிரியராகவும் சுவாமி சிவானந்தா அவர்களால் நியமிக்கப்பட்டார். பதஞ்சலி யோக சூத்திரத்தை கரைத்துக் குடித்த சுவாமி அவர்களின் போதனைகள் பலரையும் அன்று வியக்க வைத்தது. துணை வேந்தர் பொறுப்பேற்ற அதே ஆண்டின் இறுதியில் 'தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின்' பொதுச் செயலாளராக சுவாமி சிதானந்தா நியமிக்கப்பட்டார்.
10ஆம் திகதி சூலை மாதம் 1949ஆம் ஆண்டில் சிறீதர் ராவ், சிறீ சுவாமி சிவானந்தா அவர்களால் சன்னியாச தீட்சைப் பெற்று 'சுவாமி சிதானந்தா' என்ற ஆன்மீகப் பெயரைப் பெற்றார்.
'சிதானந்தா' என்றால் தெளிவும் அருளும் பெற்று விளங்குபவன் என்றுப் பொருள்படுகிறது.
1959ஆம் ஆண்டில் சுவாமி சிதானந்தாவை அவர் குரு, தனது பிரதிநியாக அமெரிக்காவிற்கு அனுப்பி ' தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய வைத்தார். மூன்று ஆண்டுகள் அங்கு சேவையாற்றியப் பின், 1962ல் தாயகம் திரும்பினார்.
1963ஆம் ஆண்டில் சிறீ சுவாமி சிவானந்தா அவர்களின் மகா சமாதியை அடுத்து, தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் தலைவர் பதவியை சுவாமி சிதானந்தா ஏற்றார். அன்று தொடங்கி சுவாமி சிதானந்தா உலகின் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ஆன்மீகக் கருத்துகளை பரப்பலானார். பல நாடுகளில் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் கிளைகளையும் ஏற்படுத்தினார். மலேசியாவில் பத்துமலை ஆலயம் அருகே 'மலேசிய தெய்வீக வாழ்க்கைச் சங்கம்' அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
வாழ்நாளில் பல மனங்களுக்கு ஒளிவிளக்காய் அமைந்த அந்த ஆன்மீகச் சுடர், நேற்று சுத்த சைதன்யத்தில் நிலைப்பெற்று பிரம்ம ஐக்கியம் எய்தியது. நிலைப்பெற்றுவிட்ட அவரின் ஆன்மீக போதனைகள், கரைச்சேர துடிக்கும் மனங்களுக்கு கலங்கரை விளக்கமாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
சுவாமி சிதானந்தா சரசுவதி திருவடி போற்றி..
1 கருத்து ஓலை(கள்):
அட, அப்படியா??? இனி சுவாமிஜி அவர்களின் ஆன்மா நமக்கெல்லாம் வழிகாட்டப் பிரார்த்திக்கிறேன்.
Post a Comment