இந்துராப்பு கட்டமைப்பில் புல்லுருவிகள்!
>> Sunday, August 24, 2008
HINDRAF
135-3 JALAN TOMAN 7
KEMAYAN SQUARE
70200 SEREMBAN
விரிவான ஊடக அறிக்கை 23 ஆகசுட்டு 2008
கரு : உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதான திரு.வசந்தகுமார் காவல்த் துறையின் சிறப்புப் படை பிரிவினரால், இந்துராப்பின் செயல்பாடுகளைக் கண்டறிய நியமிக்கப்பட்டவர். திரு.இராமசந்திரன் மெய்யப்பன் (ராமாஜி) மற்றும் திரு.ரெகு இந்துராப்பின் கட்டமைப்பை உடைத்தெறிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கைக்கூலிகள்.
உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியிருக்கும் திரு.வசந்தகுமார் தன்னார்வ அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 2007-ஆம் ஆண்டில் இந்துராப்பு இயக்கத்தில் இணைந்தார். அப்போதைய சூழ்நிலையில் "இந்தியர்களின் நலனுக்காக அதிரடியான செயல்களில் இறங்குபவர்களை" அவர் எதிர்ப்பார்த்ததாகவும், நான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின்மீது தொடுத்த வழக்கு அவரை வெகுவாக ஈர்த்ததாகவும் கூறி இந்துராப்பு இயக்கத்தில் இணைந்தார். அன்றிலிருந்து அவர் தன்னார்வ ஊழியராக இந்துராப்பில் சேவையாற்றி வந்தார், நானும் அவரை பொருளாளராக நியமித்தேன்.
கடந்த சனவரி மாதம் 2008-ஆம் ஆண்டில், திரு.வசந்தகுமார் இந்துராப்பின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக,காவல்த்துறையின் சிறப்புப் படைப் பிரிவினரால் நியமிக்கப்பட்டவர் எனும் விடயம் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மேற்கொண்டு அவரின் செயல்பாடுகளைக் கண்காணிக்கையில், அவ்விடயம் உண்மை என வெளிப்படையாகவேத் தெரிந்தது.
கடந்த மார்ச்சு மாதம் 2008-ஆம் ஆண்டில், இருவேறு நிகழ்வுகளில் நான் சந்தித்த அரசாங்கத்தின் இரு உயர் அதிகாரிகள் என்னிடம், திரு.வசந்தகுமார் இ.சாவில் கைதாகியுள்ள இந்துராப்பு வழக்கறிஞர்களிடையே பிளவு ஏற்படுத்த முனைவதாகவும், இந்துராப்பு கட்டமைப்பை தகர்த்தெறிவதற்கு தடுப்புக் காவலில் இருந்து கொண்டே செயல்பட்டுவருவதாகவும் கூறினர்.
இந்துராப்பு இயக்கத்தின் செயலாளராக இருந்து வந்த திரு.வி.கே ரெகு, இந்துராப்பின் நலனைப் பாதிக்கும் காரியங்களை முன்நின்று செய்ததால் அவரை கடந்த அக்டோபர் மாதம் 2007-ஆம் ஆண்டில் நான் பணி நீக்கம் செய்தேன்.
இந்துராப்பு ஐவரும் கைதான பிறகு, பத்து பேர்கள் கொண்ட தலைமைத்துவ செயற்குழு ஒன்றினை ஏற்படுத்தி திரு.தனேந்திரனை இந்துராப்பு தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், திரு.இராமாஜியை இந்துராப்பின் ஆன்மீக ஆலோசகராகவும் நியமித்தேன்.
திரு.ராமாஜியும் திரு.ரெகுவும் அடிக்கடி கமுந்திங்கு தடுப்புக் காவலில் உள்ள திரு.வசந்தகுமாரை மறைமுகமாகச் சந்தித்து, இந்துராப்பு இயக்கத்தினை பிளவுப்படுத்துவதற்கு திட்டம் தீட்டிவருவதுடன், இந்துராப்பை பதிவு பெற்ற ஓர் அமைப்பாக மாற்றி அவர்கள் கைவசம் கொண்டு வர முயன்றுவருவது அவர்களுடைய அண்மைய செயல்பாடுகளின்வழி புலப்படுகின்றது.
கடந்த ஐந்து மாதங்களில், திரு.ராமாஜியும், திரு.ரெகுவும் பிரதமர் இலாகாவுடன், பிரதமரின் அந்தரங்க செயலாருடன் மற்றும் ம.இ.காவின் சில தலைவர்களுடன் ரகசிய,அதிகாரபூர்வமற்ற சந்திப்புக் கூட்டத்தை பலமுறை நடத்தியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உண்டு. இவர்களின் அனைத்து செயல்பாடுகளும் இந்துராப்பு அமைப்பை பிளவுபடுத்தி, திரு.வசந்தகுமார் விடுதலை பெற்று வந்ததும் தலைமைத்துவ அதிகாரத்தை அவரோடு பகிர்ந்துக் கொள்வதற்காகத்தான் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
இந்துராப்பு இயக்கத்தினை ஒரு சட்டப்பூர்வமான இயக்கமாக அரசாங்கம் அங்கீகரித்தால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆனால் அந்த அங்கீகாரம் திரு.ரெகு,திரு.இராமாஜி,திரு.வசந்தகுமார் மற்றும் ம.இ.கா பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும். அப்பொழுதுதான் இந்துராப்பு இதுவரையில் மக்கள் சக்தியின் வழி பேணி காத்த ஒற்றுமையும் பலமும் நிரந்தரமாக அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படும்.
இத்தனைக் காலங்களாக இந்த முக்கியமான விடயங்களை மறைத்து வைத்திருந்ததற்காக இந்துராப்பு மக்கள் சக்தி ஆதரவாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்துராப்பு ஆதரவாளர்களிடையே இருந்த ஒற்றுமையும் இணக்கமும் பாழ்பட்டு போகக் கூடாது என்பதற்காகவும், இந்துராப்பு இயக்கம் உடைந்து சிதறிவிடக் கூடாது என்பதற்காகவும் நான் இவ்விடயங்களை வெளிப்படுத்தாது மறைத்து வைத்திருந்தேன். இந்துராப்பின் உண்மையான போராட்டங்களுக்காக, திரு.வசந்தகுமார் உட்பட 'இசா'வில் கைதான மற்ற நால்வரையும் வெளிகொண்டு வருவதே நம் அனைவருடைய முக்கியக் குறிக்கோளாக இருக்கும் என்று நான் மனமார நம்புகிறேன்.
இன்று பட்டவெர்த்தில் நடந்தவையாவும் இந்துராப்பு ஆதரவாளர்களின் விவேகத்தினைக் கேள்விக்குறியாக்கிய பெருத்த அவமானமாகும். அண்மைய சில நாட்களாக திரு.இராமாஜியும், திரு.ரெகுவும் இருபதாயிரம் ஆதரவாளர்களை ஒன்று திரட்டி ஐந்து இந்துராப்பு தலைவர்களின் விடுதலைக்காகவும், இந்துராப்பின் 18 அம்ச கோரிக்கைகள் நிறைவேறவும் யாகம் நிகழ்த்த போவதாக தமிழ் நாளேடுகளில் விளம்பரங்கள் செய்து வந்தனர். இந்த யாகத்தை இந்து சேவை சங்கமும் மக்கள் சக்தி என்றப் பெயரில் அவர்களால் பதிப்புரிமை பெறப்பட்ட ஒரு இயக்கமும் இணைந்து செய்தனர். இந்த யாகம் நிகழ்ந்த இடம் பெர்மாத்தாங் பாவ் தொகுதியாகும். இங்குதான் மலேசியாவின் முன்னால் துணைப் பிரதமர் வருகின்ற இடைத்தேர்தலில் களமிறங்குகின்றார். மக்கள் சக்தி என்ற பெயரைப் பயன்படுத்தி திரு.இராமாஜியும், திரு.ரெகுவும் திரளான மக்கள் கூட்டத்தை எதிர்ப்பார்த்து, பிரதமர் படாவியையும் அழைத்து சீனர் ஆலயத்தில் யாகம் நடத்தி (இதுவே முதல் முறை) சில உள்ளூர் பாப் இசைக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சியினையும் நடத்தியிருக்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து இந்துராப்பு ஆதரவாளர்களையும் நான் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்வதோடு, உண்மைத் தகவல்களையும், தற்போதைய நிலவரங்களையும் அறிந்துக் கொள்ள http://www.hindraf.org/ அல்லது http://www.hindraf.co.uk/ எனும் அகப்பக்கங்களை நாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்துராப்பு இயக்கத்தின் தலைவன் என்கிற முறையில், இயக்கத்திற்காக நடத்திய போராட்டங்களில் ஏற்பட்ட பல இழப்புகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, அனைத்து இந்துராப்பு ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கடந்த 51 ஆண்டுகளாக நம் சமுதாயத்தில் காணப்படாத மிகப் பெரிய ஒர்றுமையைக் கண்டு அதனை கலைக்க முயல்பவர்களையும், தன் சுயநலத்திற்காக செயல்படும் புல்லுறுவிகளையும் இனங்கண்டு, நாம் அனைவரும் ஒன்றினைந்து அவர்களை விரட்டியடிப்போம். இந்த இக்கட்டான நிலைமையில் எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணையாக இருக்கவேண்டும் என விழைகிறேன், அதோடு என்னை நல்ல வழியிலேயே நடத்திச் செல்ல அவன் அருளையும் வேண்டுகிறேன்.
பொ.வேதமூர்த்தி
இந்துராப்பு தலைவர்
இலண்டன்
waytha@hotmail.com
செபராங் ஜெயாவில் நடைப்பெற்ற மறியலில் கைதான திரு.தனேந்திரன், பெர்மாத்தாங் பாவ் தொகுதி இடைத்தேர்தல் முடியும்வரையில் விடுவிக்கப்பட மாட்டார் எனும் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அவரை தேர்தல் பிரச்சாரம் செய்வதிலிருந்து முன்னனி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. வருகின்ற 26 ஆக்சுட்டு நடைப்பெறும் இடைத்தேர்தலில் தேசிய முன்னனிக்கு இந்தியர்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment