இனவாத ஆசிரியை கௌரவிப்பு..!
>> Friday, August 15, 2008
அண்மையில் குவாலா லாங்காட் மாவட்டத்திலுள்ள, தெலுக் பங்லிமா காராங் இடைநிலைப்பள்ளியில், ருசுனித்தா என்ற வரலாற்றுப் பாட ஆசிரியை, நான்காம் மற்றும் ஐந்தாம் படிவம் பயிலும் தமிழ் மாணவர்களை 'கில்லிங்', பரையர்,‘கருங்குரங்குகள்’, ‘நீக்ரோக்கள்’, தமிழர்கள் நாய்க்குப் பிறந்தவர்கள், வேசிமக்கள், தமிழ் இளைஞர்கள் விறையற்றவர்கள், பெண்களுக்கு எப்போதும் மாத விலக்கு இருந்து கொண்டே இருக்கும் என மிகவும் மரியாதையான முறையில் புகழ்ந்து பேசியிருக்கின்றார்.
அவரை கௌரவிக்கும் வகையில் கல்வி அமைச்சினால், அதே மாவட்டத்தில் அவர் வசிப்பிடத்திற்கு மிக அருகாமையில், (முன்பிருந்த பள்ளியைவிட) இன்னும் பல வசதிகளோடு கூடிய விவேகப் பள்ளி ஒன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.
நீதி கேட்கச் சென்ற பெற்றோர்களையும், தன்னார்வ இயக்கங்களையும் கொலைக்காரர்கள் எனச் சித்தரிக்கும் வகையில், ருசுனித்தாவிற்கு பாதுகாப்பும் கொடுக்க அரசாங்கம் முனைந்துள்ளது பாராட்டிற்குரியது. முடிந்தால் அவர் பணிபுரியும் இடத்திலும், அவர் வீட்டைச் சுற்றியும் கலகத் தடுப்புப் படையினரை 24 மணிநேரமும் காவலுக்கு வைத்து 'தோக்கோ குரு' எனும் பட்டத்திற்குகந்த ருசுனித்தாவிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு முன்மொழிகிறேன்.
முடிந்தால் அவர் தினமும் தன் பணியிடத்திற்குச் செல்லும்வேளையில், முகமூடி அணிந்த காவல்த் துறையின் சிறப்புப் படையினரும் துணைக்குச் சென்று கல்வியுகத்தின் கடைந்தெடுத்த மாணிக்கத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது எனது தனிக் கோரிக்கை.
அப்படியென்றால், பலப்பேர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்ட மாணவர்கள் செய்த புகார்? பெற்றோர்கள், தன்னார்வ இயக்கங்கள், அரசியல் கட்சிகள் விடுத்த வேண்டுகோள், கொடுத்த மனு எல்லாமே?
விழலுக்கு இரைத்த நீர்தான்.....
இனி எத்தனை காலம் பொறுத்திருப்பது? நாமெல்லாம் இந்த நாட்டில் மதமாற்றம் குறித்து கருத்தரங்கு நடத்தக் கூடாது, யூ.ஐ.டி.எம் பல்கலைக்கழகத்தில் பூமிபுத்ராக்களைத் தவிர பிற இனத்தார் கல்விப் பயில இடம் கேட்கக் கூடாது, சம உரிமை, கருத்துச் சுதந்திரம், சமய சுதந்திரம், பொருளாதாரச் சமப் பங்கீடு இவற்றைப் பற்றி வாய்திறக்கக் கூடாது, இன்னும் எதைக் கேட்க நினைத்தாலும், கூடாது..கூடாது..கூடாது...!!!
இதுதான் பல இனங்கள் ஒற்றுமையாக வாழும் மலேசியா... இன்னும் 15 நாட்களே எஞ்சியுள்ளன மலேசியாவின் 51-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு...
மலேசியத் தமிழர்களுக்கு எப்பொழுது சுதந்திரம்......?
இவ்விவகாரம் குறித்த முந்தைய பதிவு : தமிழர்களை 'கில்லிங்', பரையர்கள் என்பதா?
வேறு பள்ளிக்கு மாற்றம் : 3%
வேலையை விட்டு நிரந்தர நீக்கம் : 75%
மறுவாழ்வுப் பயிற்சி : 0%
மன்னித்து விடலாம் : 6%
1 கருத்து ஓலை(கள்):
நன்னெறி பாடத்துக்கு அவரை முன்மொழியலாம்..சார்...
Post a Comment