ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்!
>> Sunday, August 24, 2008
நேற்று பினாங்குத் தீவில் இந்து உரிமைப் பணிப்படையின் கொடி அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உரையாற்ற திரு.நரகன், கோலாலம்பூரிலிருந்து திரு.சம்புலிங்கம் போன்றோர் வருகை புரிந்திருந்தனர். லண்டனிலிருந்து திரு.வேதமூர்த்தியுடன் தொலையுரையாடல் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வு காவல்த் துறையின் பலத்த காவலுடன் இரவு எட்டு மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்வில் கொடி அறிமுகம் செய்வதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை மேடைக்கு அழைத்தனர். தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதும் நான் மலேசியக் கொடியை திறந்து வைத்தேன். அதன்பிறகு திரு.சம்புலிங்கம் இந்து உரிமைப் பணிப்படையின் கொடியினை திறந்து வைத்தார். நிகழ்வு மிக உணர்ச்சிகரமாக சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு திரு.சம்புலிங்கம், திரு.நரகன் போன்றோரின் உணர்ச்சிகரமான உரை பலரையும் ஆட்படுத்தியிருந்தது. இந்து உரிமைப் பணிப்படையின் குறிக்கோள் என்ன என்பதனை 'நீர்மப் படிம உருகாட்டி'யின் வழி அரங்கின் பெரிய திரையில் திரு.நரகன் விளக்கிக் காட்டியது அனைவருக்கும் பயனுள்ளதாய் அமைந்தது.
நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தாலும், வருகையாளர்களில் பலரின் முகங்களில் கவலை தோய்ந்துக் கிடந்ததைக் காண முடிந்தது. அதற்குக் காரணம் அன்று மாலையில் செபராங்க் ஜெயாவில் ஏற்பட்ட கலவரமும், மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கைது நடவடிக்கைதான். அதனாலேயே, அன்று மண்டபத்தின் வெளியே பல காவல்த் துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் நின்றுக் கொண்டிருந்தனர். ஏது நடந்தாலும் கொடி அறிமுக விழாவை வெற்றிகரமாக நடத்திவிட வேண்டும் என பினாங்கு மாநில மக்கள் சக்தி ஆதரவாளர்கள் காட்டிய மும்முரம் பாராட்டிற்குரியது. இவ்வேளையில் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினருக்கும், காவல்த் துறையின் பலத்த கண்காணிப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, நிகழ்வைச் சிறப்பித்த வருகையாளர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இருப்பினும் நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் இரவு 10 மணியளவில் நிறுத்தப்பட்டது. செபராங் ஜேயாவில் கைதான எட்டு மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க உடனடியாக அனைவரும் செல்ல வேண்டும் என திரு.சம்புலிங்கம் அனைவரையும் பணித்து நிகழ்வை முடித்து வைத்தார். பினாங்குத் தீவிலிருந்து ஒரு பெரியப் படையே செபராங் ஜெயாவை நோக்கிப் புறப்பட்டது.
நேற்று மாலை நடந்தது என்ன?
இராமசந்திரன் என்கிற திரு.இராமாஜியும், இந்து உரிமைப் பணிப்படையின் முன்னால் செயலாளர் திரு.ரெகுவும் பினாங்கு செபராங் ஜெயாவில் யாகம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். நேற்றைய நாளிதழில் செபராங் ஜெயா சிறீ கருமாரியம்மன் ஆலயத்தில் யாகம் நடைப்பெறவிருப்பதாக திரு.ரெகு அறிவிப்புச் செய்திருந்தார். ஆனால் நேற்று அக்கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டு, கோயில் கதவும் இழுத்து மூடப்பட்டுள்ளது. எனவே, அருகில் உள்ள ஒரு சீனர் ஆலயத்தில் யாகத்தை தொடங்கியிருக்கின்றனர். இந்த யாகம் நடத்தப்பெறுவதன் காரணம், 5 இந்துராப்பு தலைவர்களும் விரைவில் விடுதலைப்பெற வேண்டும் என்பதற்காகவும், பாரிசான் மற்றும் மக்கள் கூட்டணி இந்துராப்பின் 18 கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவுமே என்று திரு ரெகு நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். (மலேசியா கினி படச்சுருளைக் காண்க)
அண்மைய காலமாகவே இந்துராப்பு இயக்கத்தில் பிரிவினைவாத கொள்கைகளைப் பரப்பி வருவதாக திரு.இராமாஜி மீதும் திரு.ரெகு மீதும் பலரின் குற்றச்சாட்டுகள் பாய்ந்துள்ளன. இவர்கள் தங்களின் பரப்புரைகளின் வழி பலரை இந்துராப்பிலிருந்து திசை திருப்புவதாகவும், தற்போதைய இந்துராப்பு கட்டமைப்பின் தலைவர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும் புறக்கணிக்கக் கோருவதாகவும் பல குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது வந்த வண்ணம் இருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று திரு.இராமாஜியும்,திரு.ரெகுவும் 'மக்கள் சக்தி' என்றப் பெயரில் இந்து சேவை சங்கத்தோடு இணைந்து நடத்திய யாகம் ஏதோ அரசியல் நோக்கம் உடையதாய் இருக்க வேண்டும் எனப் பல இந்துராப்பு ஆதரவாளர்கள் கருதியதின் பேரில் பிரச்சனை மூண்டது. மதியம் இரண்டு மணியளவில் சுமார் 200 மக்கள் சக்தி ஆதரவாளர்கள் சீனர் ஆலயத்தின் வெளியே அமைதி மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
மாலை 4 மணியளவில் திரு.ரெகுவும், திரு.இராமாஜியும் நிருபர் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்து யாகம் நடைப்பெற்றக் காரணத்தை விளக்கிக் கொண்டிருந்தார். அவ்வேளையில் பினாங்கு இந்துராப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.அன்பழகன் அச்சந்திப்புக் கூட்டத்திற்கு வந்து 'ரெகு இந்துராப்பின் செயலாளர் அல்ல! அவர் இந்துராப்பு அமைப்பைப் பற்றி பேசக் கூடாது!" எனக் கண்டிக்க அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. நேரம் ஆக ஆக பலர் வாக்குவாதங்களில் ஈடுபட கைகலப்பு நடைப்பெறும் சாத்தியம் இருந்ததால், மக்கள் நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. கலைவாணர் கூட்டத்தினரிடையே சமரசம் செய்ய முற்பட, அவரை மறித்து இன்னொருவர் 'அரசியல் பேச வேண்டாம்!" என்று கூக்குரலிட மீண்டும் பெரிய கலகம் ஏற்பட்டது. (மலேசியா கினி படச்சுருளைக் காண்க)
இதற்கிடையில் மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான திரு.தனேந்திரன் மக்கள் சக்தி ஆதரவாளர்களோடு செபராங் ஜெயா சிறீ கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பு ஒன்றுகூடி திரு.ரெகு மற்றும் திரு.இராமாஜியின் செயலை வன்மையாகக் கண்டித்தார். "எப்படி இந்து சமய வழிப்பாட்டினை சீனர் ஆலயத்தில் நடத்த முடியும்! இது இந்து சமயத்திற்கு ஓர் இழிவு! பன்றிகளை வெட்டும் இடத்தில் யாகம் நடத்துவதா! இது போன்றச் செயல்களை நாம் அனுமதிக்கக்கூடாது" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் சில மக்கள் சக்தி ஆதரவாளர்கள் செபராங் ஜெயா காவல் நிலையத்தில் யாகத்தினை நிறுத்துவதற்காகப் புகார் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில், யாகம் நடைப்பெற்ற சீனர் ஆலயத்திற்கு, மாலை 5.30 மணியளவில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் திடீர் பிரவேசம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த படாவி, திடீரென்று காவல்த்துறையின் பலத்த பாதுகாப்போடு யாகம் நடைப்பெற்ற இடத்திற்கு வந்திருக்கிறார். அங்கே திரு.ரெகுவிடம் இந்துராப்பின் 18 கோரிக்கைகள் தொடர்பான மகஜரைப் பெற்றுக் கொண்டு, திரு.ரெகுவின் வின்ணப்பத்தின் பேரில் அங்கு ஓர் உரையையும் நிகழ்த்திவிட்டுச் சென்றுள்ளார். "மலேசிய இந்தியர்களின் 18 கோரிக்கைகளை தாம் கவனிக்கவிருப்பதாகவும் ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டும் சென்றுள்ளார். இத்தனைக் காலங்களாக முறையாக கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மகஜர்களை தொட்டுப் பார்க்காத இவர், திடீரென்று அழையா விருந்தாளியாக வந்து மகஜரைப் பெற்றுக் கொள்வதென்பது, இந்தியர்களை 'மடையர்கள்' என்று எண்ணுவதற்குச் சமமாகும். நிகழ்வின் ஏற்பாட்டாளர் அழையாமல் பிரதமர் வந்திருக்க முடியுமா?
ஒரு சிறு குழந்தைக்குக் கூட தெரியும் படாவியின் குள்ளநரித்தனம். படாவியே..! வேண்டாம் இந்த வேண்டாத நடிப்பு..!
படாவி, யாகத்தில் கலந்துக் கொண்டவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி " டத்தோ சிறீ, ஏன் எங்கள் 5 தலைவர்களைக் கைது செய்தீர்கள், அவர்கள் பாவம்!" என்று படாவியைப் பார்த்து கேட்டிருக்கிறார். மற்றொருவர் "டத்தோ சிறீ, ஏன் அவர்களை இ.சா சட்டத்தில் கைது செய்துள்ளீர்கள், ம.இ.கா எங்களுக்கு ஒன்றும் செய்யாத பட்சத்தில் அந்த ஐந்து தலைவர்கள்தான் எங்களின் உண்மையான நிலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்!" என்று கேட்க, படாவி " அவர்களின் நிலைமை எனக்குத் தெரியும், சட்டப்படி அவர்களுக்கு நீதி கிடைத்திட ஆவண செய்வோம், என்னை வந்து சந்தியுங்கள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவி இருக்கிறார். படாவி அங்கிருந்து செல்லும் வேலையில், சாலையோரமாக நின்றிருந்த மக்கள் சக்தி ஆதரவாளர்கள் "இந்துராப்பு வாழ்க! ரீபோர்மாசி! ஈடுப் அன்வார்!" என்று முழங்கினர்.
சீனர் ஆலயத்தில் ஏற்பட்ட அமளி துமளியைக் கண்ட ஆலய நிர்வாகத்தினர், அங்கிருந்தவர்களை உடனடியாக வெளியேறும்படி உரக்கக் கத்தியதும் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். இதுதான் சமயம் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த காவல்த் துறையினர் மாலை 6.30 மணியளவில் மக்கள் சக்தி ஆதரவாளர்களைக் கைது செய்யும் படலத்தில் இறங்கினர்.திரு.தனேந்திரன் உட்பட மேலும் எண்மரைக் கைது செய்தனர். அவர்களில் இருவர் பெண்மணிகள் ஆவர். இவர்களை பண்டார் பெட்ரா, புக்கிட்டு மெருத்தாசாம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.
அண்மையில் 'மத மாற்றம்' குறித்த கருத்தரங்கை வழக்கறிஞர் மன்றம் ஏற்பாடு செய்தபோது, 300 ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்தரங்கை நடைப்பெறவிடாது ஊறு விளைவித்தனர். அவர்களைக் கைது செய்யாத காவல்த்துறை, நேற்று தமிழர்களைக் கைது செய்து ஒருதலைபட்சமாக நடந்துக் கொண்டது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த விவகாரம் குறித்து இந்துராப்பு தலைவர் திரு.வேதமூர்த்தியைக் கேட்ட பொழுது, அவர் பினாங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்திற்கும் இந்துராப்பின் அமைப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது, அவ்வாறு செய்வதற்கு இந்துராப்பு அனுமதி வழங்கவில்லை என கூறியுள்ளார். அவர் வெளியிட்ட மற்றுமொரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், இ.சா வில் கைதான திரு.வசந்தகுமார், திரு.ரெகு மற்றும் திரு.இராமாஜி போன்றோர் பாரிசான் அரசாங்கத்தால் அமர்த்தப்பட்டவர்கள் என்றும், அவர்களின் நடவடிக்கையை தாம் பல மாதங்களாக அறிந்து வைத்திருப்பினும், மக்களின் ஒற்றுமைக் கருதி அவ்விடயத்தை தாம் வெளியே சொல்லவில்லை எனக் கூறியுள்ளார். அதற்காக அவர் அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்துராப்பு எனும் கட்டமைப்பில் பல சோதனைகள், வேதனைகள், தடங்கல்கள் இருந்துவந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்து வந்துகொண்டிருக்கும் நம்மை, சில புல்லுருவிகள், அரசாங்கத்தின் கையாட்கள் பிரிக்க சதி செய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களின் வண்டவாளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது நம்முடைய தலையாயக் கடமையாகும். மக்கள் என்றும் உண்மைக்கு மட்டுமே உழைப்பவர்களாகவும், தன் போராட்டத்தின் குறிக்கோளில் தெளிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றால், இந்துராப்பு கட்டமைப்பின் பல மர்ம முடிச்சுகள் அவிழ்த்து விடப் படவேண்டும். யார் உண்மையான போராட்டவாதி, யார் சுயநலவாதி, யார் தன் சுயஆதாயத்திற்காக இந்துராப்பை கைப்பிள்ளையாக பயன்படுத்துகிறார்கள் என்பதை படம்பிடித்துக் காட்ட வேண்டும்.
உண்மையான போராட்டவாதி யாரையும் சார்ந்தவன் அல்ல.
சுயசிந்தனை கொண்ட ஓர் அமைப்பின் போராட்டவாதி என்றுமே அவ்வமைப்பின் கொள்கைக்காக மட்டுமே போராடுபவனாக இருப்பான்.
நேற்று நடந்த நிகழ்வுகளைச் சுருங்கச் சொன்னால்...
பாரிசான் = ஆதாயம்
இந்துராப்பு = நஷ்டம்
நம்மை ஏதோ ஒருவகையில் பிரித்துவிட்ட வெற்றிக் களிப்பில் அவர்கள் வெற்றியைக் கொண்டாட, நம் பாடு திண்டாட...
எங்கே நம் சுயநிந்தனை?! எங்கே நம் விழிப்புணர்வு?!
மலேசியா கினி படச்சுருள்
போராட்டம் தொடரும்...
1 கருத்து ஓலை(கள்):
சார், இந்த எட்டப்பர்கள் இருக்கும் மட்டில் நமக்கு ஆபத்துதான்.நம் இனத்துக்கு இவ்வளவு நடந்தும் இன்னும் உணர்வே இல்லாமல் நடத்துக்கொள்ளும் இவர்களை நினைத்தால் வேதனைத்தான் வருது.
Post a Comment