தமிழின் தலையெழுத்து...!

>> Sunday, August 17, 2008

அண்மையில் தமிழர்களுக்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் உள்ளத் தொடர்பை மொழி ஆய்வியல் ரீதியாக நிரூபணமாக்கும் சில திடுக்கிடும் தகவல்களைக் கொண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இக்கட்டுரையை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ம.இராசேந்திரன் படைத்திருந்தார். இதோ வாசகர்களுக்காக அக்கட்டுரை...

தமிழின் தலையெழுத்து, பெருமையும் வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல தலையெழுத்தைத் தொடக்க கால எழுத்து என்றும் பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து மொழியாகும். எழுத்து என்றால் ஒலிஎழுத்து என்றும் வரி எழுத்து என்றும் இரண்டையும் குறிக்கும். எழுப்பப்படுதலாலும் எழுதப்படுதலாலும் இரண்டு வகைக்கும் பொதுச் சொல்லாக இருந்த எழுத்து பிறகு வரி வடிவ எழுத்திற்கு மட்டுமே உரியதாக வழக்கத்திற்கு வந்துவிட்டது.

நெடுங்காலத்திற்கு முன்பே தமிழுக்கு எழுத்து இருந்திருக்கிறது. இப்போதும்கூட எழுத்தில்லா மொழிகள் பல உள்ளன. பாரசீக மன்னன் டரையசு என்பவனுக்கு சிந்தியர்கள் ஒரு தூது அனுப்பியதாக கிரேக்க வரலாற்றாசிரியர் அராடோட்டசு குறிப்பிடுகிறார். அஞ்சி ஓடாவிட்டால் இறந்துவிடுவாய் என்பதே தூதின் செய்தி. தவளை தண்ணீருக்குள் அஞ்சி மறைவதுபோலவும், எலி வளைக்குள் ஒளிவது போலவும் ஓடாவிட்டால் அம்புகளால் நீ கொல்லப்படுவாய் என்பதைச் சொல்வதற்காக, ஒருவரிடம் தவளை, எலி, அம்பு ஆகியவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். அது எழுத்தில்லாத காலம்.

தொல்காப்பியர் மெய்யெழுத்துகளும் எ,ஒ குறில்களும் புள்ளிபெறும் என்று வரிவடிவ எழுத்துகளைப் பற்றி நூற்பா தந்துள்ளார். சித்திரக் கோடுகள், குறியீடுகள், எழுத்துகள் என்று உலக மொழிகளின் எழுத்து வளர்ச்சியும் வரலாறும் அறியப்பட்டு வருகின்றன.

ஒரு பொருளைக் குறிக்க வரையப்பட்ட சித்திர எழுத்து உரு எழுத்து என்றும்; எண்ணத்தை வெளிப்படுத்துவது கரு எழுத்து என்றும்; ஓசையைக் காட்டுவது ஒலி எழுத்து என்றும்; உணர்வை வெளிப்படுத்துவது உணர்வெழுத்தென்றும் தமிழில் பல்வேறு எழுத்துகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.



சிந்துவெளி எழுத்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்ட தொன்மையான எழுத்துகளாகும். எல்லோரும் ஏற்கத் தக்க வகையில் இதுவரை யாரும் இவற்றைப் படித்தறிய முடியவில்லை. சிந்துவெளிக்குப் பின் கிடைப்பவை குறியீடுகள். குறியீடுகளையும் படித்தறிய முடியவில்லை. ஆனால் சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகள், கல்வெட்டுகள் நாணயங்கள் என்று மக்கள் வாழ்க்கையோடு கலந்து இடம்பெற்றுள்ளன.

சிந்துவெளி எழுத்துகள், குறியீடுகளுக்குப் பிறகு வந்தவை பிராமி எழுத்துகள். தமிழுக்கும், சமற்கிருதத்திற்கும், பிராகிருதத்திற்கும், பாலிக்கும் பொதுவாகவும் தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு வர்க்க எழுத்துகளைக் கூடுதலாகவும் கொண்டு பிராமி எழுத்துகள் உள்ளன.

அப்படியென்றால் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட்ட நாடுகள் அடங்கிய நிலப்பகுதி முழுவதும் மொழிகள் வேறுவேறாக வழங்கப்பட்டு வந்திருப்பினும் பொதுவாக ஒரே எழுத்து முறை (சிற்சில கூடுதல் எழுத்துகளுடன்) இருந்து வந்துள்ளது.

அசோகன் கல்வெட்டுகளால் அறியப்பட்ட பிராமி எழுத்து, அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழ் நாட்டில் தமிழுக்கு உரியதாக இருந்திருக்கிறது. அசோகன் கல்வெட்டுகளில் குசராத்து மாநிலம் கிர்நார் 16ஆம் பாறைக் கல்வெட்டில் சேர சோழ பாண்டியர்களும் சத்தியபுத்திரராகிய அதியமான் மரபினரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் கிடைத்த எழுத்தாதாரங்கள் அசோகன் காலத்துக்கும் முற்பட்டவை என்று தொல்லியல் அறிஞர்கள் பேராசிரியர் முனைவர் கா.ராசனும் முனைவர் தூ.இராசவேலும் கருதுகின்றனர்.

'அத்திபடாவிலும்' அயோத்தியாவிலும் கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அசோகன் கல்வெட்டுகளில் பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தின் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் ஒரே எழுத்து (பிராமி) முறையில் (வர்க்க எழுத்துகள் தவிர) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தமத நூலான லலித விசுத்தாரத்திலும் சமண நூலான பன்னவனசுதாவிலும் 'பிராமி' குறிப்பிடப்படுகிறது. பிராமி எழுத்தை உருவாக்கியவர் புத்தர் என்றும் சமண சமய தீர்த்தங்கரர் ரிசபதேவர் மகள் பிராதமி பெயரில் உருவாக்கப்பட்டதென்றும் பிராமி பற்றிய சமயக் கதைகள் பல உள்ளன.

அசோகன் கல்வெட்டில் இடம் பெற்றதால் பிராமி என்று அழைக்கப்படுகிறது. மொழியின் பெயரில் எழுத்து அமைக்கப்படுவதே மரபு. அசோகன் என்பதோ பிராமி என்பதோ மொழிகளின் பெயர்களாக இல்லை.

எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும் பிராமியை உடைமையாக்கிவிடக் கூடாது என்பதால் பயன்படுத்தியவர் பெயரில் அசோகன் பிராமி என்று அழைக்கப்படிருக்கலாம். அதிலும் தமிழ் மொழிக்கான பிராமியைத் தென்பிராமி என்றும் தமிழ் பிராமி என்றும் தமிழில் அழைக்கிறோம். தொல்காப்பியரும் சங்க இலக்கியப் பாடல்களும் 'தமிழியில் தாம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.

இந்தியாவின் தொன்மையான வரிவடிவமாம் சிந்து வெளிக் குறியீடுகள் பூம்புகார், மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் முதுமக்கள் தாழிகளிலும், சூலூர் மண்வட்டிலிலும் இடம் பெற்றுள்ளமையைத் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சிந்துவெளி எழுத்துகளின் காலம் குறைந்தது கி.மு1500 என்று கருதப்படுகிறது.

சிந்துவெளி எழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் இடைப்பட்ட குறியீடுகள் இந்தியாவின் தமிழகத்தில்தான் குறிப்பாக சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களில்தான் அதிக அளவில் கிடைத்துள்ளன. பிராமி இந்திய மொழிகளுக்கான எழுத்துகளின் தாய் என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

புதிய கற்காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (விந்தியமலைப் பகுதி நீங்கலாக) திராவிட இன மொழிகளே பேசப்பட்டன என்று பேராசிரியர் பி.டிசீனிவாச ஐயங்காரும் (Stone Age in India) பேராசிரியர் டி.ஆர்.சேச ஐயங்காரும் (Dravidian India) திராவிட மொழி தென்னிந்திய மொழி மட்டுமன்று, காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி என்று அறிஞர் அம்பேத்காரும் (The unTouchables) கூறியுள்ளார்.

தமிழ் பிராமி எழுத்துகளோடு கிடைத்துள்ள குறியீடுகளை அதற்கும் முற்பட்ட சிந்துவெளி எழுத்துகளோடு இணைத்துக் கொள்ளத் தேவைப்படும் இணைப்புக் கண்ணிகள் கிடைக்குமாயின் தமிழின் தலையெழுத்து தீர்மானமாகிவிடும்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

7 கருத்து ஓலை(கள்):

Anonymous August 17, 2008 at 8:54 PM  

அரிய செய்திகளை கொண்ட நல்லதொரு பதிவு. முடிந்துவிட்டதே என ஏமாற்றம்தான்! இன்னும் விரிவாக எழுதி எங்கள் அறிவுப் பசியை தீர்ப்பீர்கள் என நம்புகிறேன்.
மிக்க நன்றி.

Sathis Kumar August 17, 2008 at 9:15 PM  

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க தமிழர் பயன்படுத்திய குறியீடுகள், பிராமி எழுத்துகள் தொடர்பாக மற்றுமொரு கட்டுரையை நிச்சயம் படைக்கிறேன். வருகைக்கு நன்றி மாசிலா.

Muruganandan M.K. August 18, 2008 at 12:43 AM  

மிகவும் அரிய தகவல்களைக் கொண்ட பயனுள்ள பதிவு. புரியும்படி எழுதியமை பாராட்டுக்குரியது.

Sathis Kumar August 18, 2008 at 12:57 AM  

தங்களின் வருகைக்கு நன்றி திரு.முருகானந்தம் அவர்களே, மீண்டும் வருக..

சுப.நற்குணன்,மலேசியா. August 19, 2008 at 4:49 PM  

சிந்துவெளிக் கல்வெட்டுகளில் காணப்பட்ட பிராமி எழுத்துகளை ஆய்வு செய்த பேராசிரியர் இரா.மதிவாணர் என்பார், அவை பழந்தமிழ் எழுத்துகளே என்பதைச் சான்றுபட நிறுவியுள்ளார். பிராமி எழுத்துகள் என்பன தனி எழுத்துகள் அல்ல; அவை பழந்தமிழ் எழுத்துகளே என்பதெல்லாம் ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுவிட்ட உண்மைகள். 'பிராமி' என்கிற சொல்லும் தமிழ்ச் சொல்லாகிய பரம்> பரமம்> பிரமம்> பிராமி என மறுவிய சொல்லேயாகும் என்பது அறுதிபட நிறுவப்பட்டுள்ளது.

இதையெல்லாம் வைத்துதான் தேவநேயப் பாவாணர் முதற்கொண்டு பேராசிரியர் மதிவாணர், அருளியார், கு.அரசேந்திரனார் போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் தமிழே உலகின் முதல் தாய்மொழி என முழங்கியும் எழுதியும் வருகின்றனர்.

மேற்கத்திய மொழியியல் அறிஞர்கள் பேராசிரியர் சோர்சு எல்.ஆர்டு, நோவாம் சோவாம்சுகி முதலானோர் தமிழே முதல்மொழியாக இருக்கும் என்ற கருத்தை உறுதியாக வழிமொழிந்து வருகின்றனர்.

தமிழின் உண்மையான நிலைமையும் அதுவே உலகின் முதல் தாய்மொழி என்ற உண்மையும் விரவில் உலகுக்கு அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுபெற்று வருகின்றது.

நம்புங்கள் தமிழர்களே!
தமிழ் வெல்லும்!

மிக அருமையான இடுகை சதிசு ஐயா! பாராட்டுகள்.

Sathis Kumar August 19, 2008 at 5:06 PM  

சிந்துவெளி குறியீடுகளுக்கும் தமிழ் பிராமி எழுத்துகளுக்கும் உள்ள உறவைப் பற்றிய கூடுதல் தகவல்கள் அளித்த ஐயா சுப.நற்குணன் அவர்களுக்கு நன்றி.

Anonymous August 20, 2008 at 1:16 AM  

தமிழருக்கு தேவையான, பிரயோசனமான அறிய தளம். இன்னும் இன்னும் எழுதுங்கள், படிக்கக் காத்திருக்கிறோம். இது போன்ற தமிழ் இணையத்தளங்கள் பல்கிப் பெருக வேண்டும். வாழ்த்துக்கள்.

-கலையகம்
http://kalaiy.blogspot.com

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP