10 இண்ட்ராஃப் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில்...
>> Friday, October 24, 2008
இன்று காலையில் காசாங் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்ட 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் வழக்கு தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. மதிய உணவுக்குப்பின் 2.30 மணிக்கு மீண்டும் வழக்கு தொடர்கிறது.
இரண்டு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள காவல்த்துறையினர் அனுமதி கோரியுள்ள இவ்வழக்கு தற்போது சூடு பிடித்துள்ளது எனலாம். ஒருவேளை இவ்வழக்கு காவல்த்துறையினருக்கு சாதகமாக அமைந்துவிட்டால் அப்பத்து இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் தீபாவளியன்று தடுப்புக் காவலில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
ஆறு பேர் கொண்ட குழுவைத் தலைமை வகித்த மனித உரிமை நிர்வாகத்தின் வழக்கறிஞர் அமீர் அம்சா அர்சாட்டு, கைதான 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக காலையிலிருந்து கடுமையாக வாதாடி வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும், மற்றும் நிருபர்களும் நீதிபதியின் உத்தரவின்பேரில் உள்ளேச் செல்லத் தடை விதிக்கப்பட்டதால் பலர் ஏமாற்றமடைந்தனர். ஆறு கலகத் தடுப்புப் படையினரின் லாரிகளும் ரசாயன நீரைப் பீச்சியடிக்கும் லாரிகளும் நீதிமன்றத்தின் வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கறிஞர் திரு.சுரேந்திரன் கருத்துரைக்கையில், கைதான 10 இண்ட்ராஃப் ஆதாரவாளர்கள் சங்கங்கள் சட்டம் 1966, பிரிவு 48-ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றும், இவர்கள் பிரதமரிடம் மனு கொடுக்கச் சென்றதற்கும் சங்கங்கள் சட்டத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனவும், தேவையில்லாது சங்கங்கள் சட்டத்தை எதற்கு இழுக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.
ஒருவேளை வழக்கு காவல்த்துறையினருக்குச் சாதகமாக அமைந்தால், நிச்சயமாக இவர்களை தீபாவளியன்று தடுப்புக் காவலில் வைத்து தண்டிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே கருதப்படும் என அவர் மேலும் கூறினார்.
நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்றுக் கொண்டிருக்கையில் கைதானவர்களில் லூர்து மேரி எனும் பெண்மணியொருவர் காவல் நிலைய தடுப்புக் காவல் குறித்து விளக்கமளித்துக் கொண்டிருக்கையில் மயக்கமடைந்ததாக திரு.சுரேந்திரன் கூறினார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் தடுப்புக் காவலின்போது முறையான ஔடதங்களை அவர் உட்கொள்ள வாய்ப்பில்லாது போனதால் அவருடைய இரு கால்களும் வீங்கிய நிலையில் காணப்பட்டார் எனவும் அவர் கூறினார். அவர் மயக்கமடைந்து வீழ்ந்ததும் அவரை உடனடியாக புத்ரா செயா மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ரனர். இதற்கிடையில் திரு.செயதாசும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாம் இதுவரையில் நீதிமன்றத்தில் இதுப்போன்றதொரு சம்பவத்தைக் கண்டதில்லை என திரு.சுரேந்திரன் மிகவும் வருத்தத்தோடு கூறினார்.
வழக்கறிஞர் எம்.மனோகரன் கருத்துரைக்கையில், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை பெயர் பதிவு செய்துக்கொண்டு உள்ளேச் செல்ல வற்புறுத்தியதும், நிருபர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்த காவல்த்துறையினரின் செயல் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அவர் கூறினார்.
இதுகுறித்து தாம் வழக்கறிஞர் மன்றத்திடம் முறையீடு செய்யவிருப்பதாக வழக்கறிஞரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.மனோகரன் தெரிவித்தார்.
வழக்கு பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது....
****
பரபரப்பாக நடைப்பெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் முடிவில் கைதான 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் மூன்று நாட்கள் காவல்த்துறையின் காவலில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பத்து இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் தீபாவளியன்று வீட்டிற்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வழக்கில் ஆதரவாளர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்ற வளாகத்தில் திரண்ட ஆதரவாளர்களுக்கும், இக்கைது நடவடிக்கையைக் கண்டித்து குரலெழுப்பிய பல நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வோமாக..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment