எழும் நேரம்..
>> Monday, October 6, 2008
இது
எழும் நேரம்!
வீழ்ந்த
உரிமைகளைப் பிடித்துயர்த்தி
சனநாயக முரசு
ஒலிக்கும் நேரம்!
இது
சமூக விடுதலைக்கான நேரம்!
காத்திருந்தால்
கண்போல் காத்த
கொள்கைகள்
பறிபோகும் நேரம்!
அக்கினி நாவுகள்
விச வார்த்தைகளைக்
கக்குகின்றன..
இனவாதப் பாம்புகள்
சுய சட்டைகள்
உரித்தாடும் தந்திர நேரம்!
இதுவரை
அழகுக்காய் அணிந்த
அச்ச சட்டைகளைக் கிழித்தெறிந்து
வீர ஆடைகளை
உடுத்தும் நேரம்!
பிறப்பது
ஒருமுறைதான் என்றாலும்
இறப்பதும் ஒருமுறைதான் - என
வேள்வித் தீயில்
உயிர் துறக்கும் நேரம்!
நமது
சன்மார்க்க நீதிக்கு
சாவுமணியடித்த ஆட்சிக்கு
நம் சாதனை மரணம்... வீரம்!
தருக்கர் நெஞ்சை
சண்டமாருதம் செய்யும் தூய நேரம்!
வீசிப்போகும் புயலைக்
கையில் பிடித்து
ஊசிப்போன ஆட்சியை
மரண ஊஞ்சலில்
தாலாட்டும் நேரம்!
பறிபோன உரிமைகளைப்
பாதகர் கைகளிலிருந்து
பறித்தெடுக்கும் வினாடியில்
நம் உயிர்
பறி போகும் நேரம்!
கொதி எரிமலையின்
உச்சியில் நின்று
எரி குழம்பைக் கையில் ஏந்தி
ஊழல் அரசியலைச்
சாம்பலாக்கும் அக்கினி நேரம்!
வீணர் ஆட்சியில்
சிறைப்பட்டச் சுதந்திர உணர்வை
மீட்டெடுக்கும் சத்தியப் போரில்
வீரக் காவியமாகும் நேரம்!
இருட்டு அரசியல் பூதத்தின்
தலையறுத்து
மெழுகுவர்த்திகள் ஏந்தி
வெற்றி ஊர்வலம் வரும் நேரம்...
இது
நமக்கான நேரம்!
நெருப்பு நதியில்
நீந்தி வர
காலம் தள்ளி விட்ட
கார்கால நேரம்!
கவிஞர் பிரான்சிசு
மால்மோ, சுவீடன்
khileefrancis@yahoo.com
3 கருத்து ஓலை(கள்):
கவிஞரின்....
எழுச்சியும்...
புரட்சியும்...
வெகுண்டு எழுகிறது.
மொழிபெயர்ப்பு....வலைப்பூவுக்கோர் வார்ப்பு!
திரு.பிரான்சிசு அவர்கள் தமிழ்க் கவிஞர் ஐயா.. அவர் மலேசியரே, தற்போது சுவீடனுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்...
இப்படி பொங்கி எழுந்தவர்களை முடக்கி விட்டார்களே?
Post a Comment