இலங்கைப் படை அதிர்ந்தது!
>> Thursday, October 9, 2008
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்துக் காட்டுவோம் என்று சூளுரைத்துக் கொண்டு முன்னேறிய இலங்கைப் படைக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய திறமையான முறியடிப்புப் தாக்குதலில், 65 இலங்கைப் படையினர் உயிரிழந்துள்ளதோடு 72 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் சாமர்த்திய வியூகங்களில் சிக்கிக் கொண்ட இலங்கைப் படை திணறிப் போனதுடன், தற்போது தமிழர் பகுதிகளில் குண்டு வீசுவதை அது நிறுத்திக் கொண்டுள்ளது.
இம்முறியடிப்புத் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கைப் படையினருக்குச் சொந்தமான பல படை ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கின்றனர். இதற்கிடையில் 'த பொட்டம்லைன்' என்ற ஏட்டில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கு குழிகளில் இருந்து தமது படைகளுக்கு கட்டளைப் பிறப்பித்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி கிளிநொச்சியிலிருந்து தமிழர்கள் வேற்றிடங்களுக்கு படிப்படியாக இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில் நேற்று இலங்கைப் படையினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் போர் மூண்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து தங்களது படைநிலைகளை ஏற்கனவே விடுதலைப் புலிகள் வெளியேற்றி விட்டாலும்கூட, இலங்கைப் படைக்கு வெள்ளித் தாம்பளத்தில் வைத்து கிளிநொச்சியை புலிகள் ஒப்படைக்கப்போவதில்லையெனவும், முல்லைத் தீவின் மேற்குப் பகுதியில் முன்னேறிவரும் இலங்கைப் படைகளுக்கு புலிகளின் செறிவான மோர்ட்டார் மற்றும் ஆர்டிலறி தாக்குதல்களும், ஜொனி மிதிவெடிகளும் பெரும் சவாலாக அமையும் என்று அவ்வேடு கூறுகிறது.
மற்றுமொரு நிலவரத்தில், பிரபாகரன் பதுங்குக் குழிகளில் இருப்பதாகக் காரணம் கூறி இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து அப்பாவித் தமிழர்களைக் கொன்ற விடயம் குறித்து இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழர் பகுதிகளிலும் கிளிநொச்சியிலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அக்கராயன் குளமாவிலும் நடத்தப்படும் இராணுவத் தாக்குதலை உடனே நிறுத்தும்படி தமிழக அரசியல் கட்சிகள் போர்கொடி தூக்கியுள்ள வேளையில், கலைஞர் கருணாநிதி தமிழக மக்களை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்ப வேண்டுகோள் விடுத்திருந்தார். கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தந்தி அனுப்பி இலங்கை இராணுவத்தின் அராஜகத்தை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இலங்கை பிரச்சனை குறித்து கலைஞருடன் ஆலோசனை நடத்திய மன்மோகன் சிங், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால், இந்தியா இலங்கை படையினருக்கு இராணுவப் பயிற்சியும், இராணுவத் தளவாடங்களையும் கொடுத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தற்போது இந்தியாவிடமிருந்து தொடர்நெருக்கடி வருவதால், இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சே இராணுவத் தாக்குதலை நிறுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இருப்பினும் விடுதலைப் புலிகள் எந்நேரமும் விழிப்புடனேயே கிளிநொச்சியைக் காவல் காத்து வருகின்றனர்..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment