தீபாவளி விளம்பரப் படக்காட்சி
>> Sunday, October 26, 2008
(இரு தினங்களுக்கு முன்பு திரு.வேலுமணி வெங்கடாசலம் என்ற வாசகரொருவர் ஓலைச்சுவடிக்கு மின்னஞ்சல் விடுத்திருந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பதிவு இங்கு இடம்பெறுகிறது)
ஈப்போவில் வானூர்தி பயிற்சிக் கூடத்தில் பணிப்புரியும் ஓர் ஏழைத் தொழிலாளியின் கதையிது. அத்தொழிலாளி பணிப்புரியும் இடத்தில் கூடவே சுற்றிவரும் அவனுடைய சின்னஞ்சிறு மகன் அங்கு காணும் சிறுரக வானூர்திகளைக் கண்டு அதனைத் தானும் இயக்க வேண்டும் என்று ஆசைகளை வளர்த்துக் கொள்கிறான். மகனின் ஆசையைப் பூர்த்தி செய்து அவனை எதிர்காலத்தில் ஒரு விமானியாக்கிப் பார்க்க வேண்டுமென்று கடுமையாக உழைக்கிறான் அத்தொழிலாளி.
அத்தொழிலாளி தன் மகனுக்காக ஒரு போலி வானூர்தியை வாங்கிக் கொடுப்பதற்கு கடுமையாக உழைப்பதைக் கண்டு வியக்கும் மேலதிகாரி "நீ காலம் முழுவதும் வேலைச் செய்தாலும் உன்னால் இந்த விமான இறக்கைகளை மட்டும்தான் வாங்க முடியும்" என்று அறிவுரைகள் கூறுகிறார். "என்னால் வானூர்தியை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டாலும் என் மகனுக்கு வானூர்த்தி நுட்பங்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பேன்" என்று நம்பிக்கையோடு கூறுகிறான்.
அத்தொழிலாளியின் கம்பத்து வீட்டிலோ, அவனின் அன்பான மனைவி தன் மகனின் எதிர்காலக் கனவு விதைகளுக்கு நீரூற்றி பாதுகாக்கும் ஓர் அன்புத் தாயாக விளங்குகிறாள். போலி வானூர்தியை செய்வது குறித்த ஒரு புத்தகத்தை கொடுத்து மறுநாளே தன் மகன் ஒரு விமானத்தைச் செய்து பறக்க விட்டதைக் கண்டு பெற்றோர்கள் பூரித்து அவனோடு சேர்ந்து விளையாடியக் காலங்கள் ஒரு கனாக்காலமாகின்றது.
வருடங்கள் பல உருண்டோடுகின்றன..
சிறுவன் இளங்காளையாகிறான், தன் லட்சியக் கனவை நிறைவேற்றப் படிப்பில் தீவிரமாகிறான். அப்பொழுதும் அவனின் தந்தையானவர் கடுமையாக உழைப்பதை நிறுத்தவில்லை.
அந்த ஏழைத் தொழிலாளியின் உழைப்பும், தாயின் பராமரிப்பும், அவ்விளைஞனின் தன்னம்பிக்கையும் ஒன்றுசேர்ந்து அவனை ஓர் விமானியாக்குகின்றன. முதன் முதலாக வானூர்த்தியை இயக்கச் செல்வதற்குமுன் தன் தாயிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். ஆனால், அச்சமயம் அத்தாயின் அருகில் நின்று அவனை ஆசீர்வதிக்க அந்த ஏழைத் தொழிலாளி இல்லை. காலத்திற்கு என்றோ அவன் பதில் கூறிவிட்டான்.
தாயின் ஆசிகளோடும் மனதில் உவகையோடும் தன் கனவை நிறைவேற்ற வானூர்த்தி பயிற்சிக் கூடத்திற்குச் செல்கிறான். அங்கு அவனைக் கண்ட மேலதிகாரியின் உதடுகள் அவன் தந்தையின் சேவையை முணுமுணுக்கின்றன.
"நீ சொன்னதுபோல் உன் மகனுக்கு இறக்கைகளைக் கொடுத்துவிட்டாய்.."
இவ்வருட தீபாவளி திருநாளையொட்டி எடுக்கப்பட்ட 'பெட்ரோனாசின்' காணொளி விளம்பரம்தான் மேற்கூறியக் கதை. வருடா வருடம் சமயப் பெருநாட்களுக்கான விளம்பரங்களைச் சிறப்பாகப் படைத்து வரும் இந்நிறுவனம், இவ்வருடமும் புதியதொரு கதையம்சத்துடன், மிகுந்த பொருட்செலவில் உறவுகளை மையப்படுத்தி தீபாவளியின் மகத்துவத்தை மூன்று நிமிடங்களில் எடுத்துக்கூற முயற்சித்திருக்கிறது.
இவ்விளம்பரத்தை பலர் பார்த்திருக்கலாம், சிலர் பார்க்காமல் இருக்கலாம்..
இதோ உங்களுக்காக அவ்விளம்பரப் படக்காட்சி..
இவ்விளம்பரம் குறித்து பலரின் கருத்துகள் திரட்டப்பட்டன. பலர் இவ்விளம்பரத்தைக் கண்டு நெகிழ்ந்திருப்பதாகக் கூறினர். கதைக்கரு அமைந்த விதம் பலரின் மனங்களை நெகிழ வைத்திருப்பதில் சந்தேகமில்லை. ஆனால் நெகிழவைத்தது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் பெட்ரோனாசின் விளம்பரங்கள் ஒரு சமுதாயதித்தின் உண்மை நிலைமையினை உள்ளதுபோல் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதால் சில கருத்துகளை முன்வைக்கிறேன்.
1.மொழி
தீபாவளித் திருநாளைக் கருப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவ்விளம்பரப் படக்காட்சியில் ஒரு தமிழர் குடும்பத்தை முன்னிலைப்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தமிழிலேயே உரையாடி இருக்கலாமே, மொழி புரியாதவர்களுக்காக வேண்டுமானால் ஆங்கிலம்/மலாய் மொழிகளில் வரிகளைக் கீழே ஓடவிட்டிருக்கலாம். 'அம்மா', 'அப்பா', 'மச்சான்' என்ற இம்மூன்று தமிழ் வார்த்தைகள் மட்டும்தான் அவ்விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தன. தன் இளையச் சகோதரியை மணந்துக் கொண்டவனை அழைக்க வேண்டிய உறவுப் பெயர் 'மச்சான்' என்பது. தேவையில்லாமல் மேலதிகாரியொருவர் தனக்குக்கீழ் பணிப்புரியும் ஒரு தொழிலாளியைப் பார்த்து 'மச்சான்' என்று அழைக்கிறார். நடைமுறையில் பலர் தன் நண்பர்களை 'மச்சான்' போட்டுக் கூப்பிடுவது வழக்கமாக இருந்தாலும், பிற இனத்தவர் அல்லது தமிழர்கள் தமிழர்களை சகட்டுமேனிக்கு 'மச்சான்' என்று அழைக்கும் கலாச்சாரத்தை இங்கு வலியுறுத்தக்கூடாது என்பது என் கருத்து. இனிமேல் தமிழர்கள் தொடர்பான விளம்பரப்படங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இவ்விளம்பரப்படத்தில் கதாபாத்திரங்களை தமிழில் உரையாட வைத்திருந்தால் காட்சிகள் இயல்பு நிலையை எட்டியிருக்கும் என்பது என் கருத்து.
2.கதாபாத்திரங்கள்
இவ்விளம்பரத்தில் சொல்லவரும் கருத்துகளுக்கும், சூழ்நிலைகளுக்கேற்றாற்போலும் கதாபாத்திரங்கள் ஒன்றியிருத்தல் அவசியமாகிறது. ஏழ்மையின் விளிம்பில் வாழ்க்கை நடத்தும் ஒரு குடும்பம் எப்படி திரையில் காட்டப்பட்டிருக்க வேண்டும்? விளம்பரத்தில் பெண் வேடம் பூண்டிருக்கும் பெண்மணி ஏதோ ஒரு பொருளின் விளம்பரத் தாரகையாகத்தான் தென்படுகிறார். தந்தை, அரும்பு மீசைக் கொண்ட இளைஞன், விமானியாக வலம் வரும் இளைஞன் போன்ற கதாபாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப ஒன்றவில்லை. விளம்பரத்தின் இறுதிக்கட்டத்தில் யாரோ ஒரு ஆணழகன் சைக்கிளில் உலா செல்வதுபோல் உள்ளது. விமானியாகத் தேர்வாகிவிட்டாராம், ஆனால் சைக்கிளில் செல்கிறாராம்.
3.தனித்தன்மை
விளம்பரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழர்கள் கதாபாத்திரம் முற்றிலும் பொருந்தாது போவதற்கு முக்கியக் காரணம் அக்கதாபாத்திரங்கள் வெளிக்கொணராதத் தனித்தன்மைதான். தமிழன் என்றால் எப்படி இருப்பான்? அதிலும் ஏழைத் தமிழன் எப்படி இருப்பான்? என்று சற்று சிந்தித்து நிச காட்சிகளைத் திரையில் கொண்டுவர அதற்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மலேசிய விளம்பரங்களில் பெரும்பாலானவை சிவப்புத் தோல் கொண்டவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கி வருவது நாம் நிதர்சனத்தில் கண்டுவரும் ஓர் உண்மையாகும். கருப்புத் தோல் என்றாலே கேவலம் என்று தமிழர்களே நினைக்கும் அளவுக்கு காலனித்துவமும் மேற்கத்திய நவநாகரீகமும் நம்மை மாற்றி விட்டிருக்கிறது. இவ்விளம்பரத்தை பொறுத்தமட்டில் கருப்பு தோல் கொண்ட தமிழனை திரைமுன் காட்டியிருந்தால் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெற்றிருக்கும். முக்கால்வாசி மலேசியத் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய கறுப்புத் தோலைத்தான் கொண்டிருக்கின்றனர். அடுத்தமுறை தமிழர்களைப் பிரதிபலிக்கும் எந்தவொரு விளம்பரமானாலும் சரி, கறுப்புத்தோலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். காரணம் அது தமிழனோடு பிறந்த ஒரு சொத்து.
4.பல்லினக் கலவை
மலேசியச் சூழலில் பெருநாளையொட்டி வெளிவரும் விளம்பரப் படக்காட்சிகளில் பல்லின மக்களின் கலவை இருப்பது அவசியமாகிறது. இவ்விளம்பரப்படக்காட்சியில் மூவினமும் பிரதிபலிக்கப்படுகின்றனவா என்பது தெளிவாக இல்லை. சீனர்களும் தமிழர்களும் இருப்பதுபோல் தென்படுகிறது. மேலதிகாரியை மலாய்க்காரர் என்று ஏற்றுக் கொள்வதா அல்லது சீனர் என்று ஏற்றுக் கொள்வதா என்றே தெரியவில்லை.
மேற்கூறிய சில விடயங்களில் விளம்பர நிறுவனம் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இது மறக்க முடியாத ஒரு விளம்பரமாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
"வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும், தன்னம்பிக்கையும்,பகுத்தறிவும், அளவுகடந்த பாசமும் இருப்பின் நாம் இறக்கை விரித்துப் பறக்க அது வழிக்கோலும்" எனும் கருப்பொருளில் நல்லதொரு கதையமைப்புடனும் ஒளிப்பதிவுடனும் உருப்பெற்றிருக்கும் இவ்விளம்பரம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.
இனிவரும் காலங்களில் விளம்பர நிறுவனங்கள் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துவோமாக.
இவ்விடயம் குறித்து பதிவிடக் கோரிய திரு. வேலுமணி வெங்கடாசலம் அவர்களுக்கு நன்றிகள்.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment