சந்திரயான் - 1 விண்ணைத் தொட்டது!
>> Wednesday, October 22, 2008
இந்தியா தனது முதலாவது நிலவுக்கான விண்கலத்தை இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) 6.22 மணியளவில் வெற்றிகரமாக பாய்ச்சி புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. இவ்விண்கலம் சென்னையிலிருந்து வடக்கில் 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறீ அரிகோட்டா சத்தீசு தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்ச்சப்பட்டது.
சந்திரயான் 1 எனும் விண்கலத்தை சுமந்திருந்த பி.எசு.எல்.வி சி-11 என அழைக்கப்படும் விண்ணோடம் விண்ணில் செலுத்தப்பட்டு திட்டமிட்டபடி 4 கட்டங்களாகப் பிரிந்தது. இதில் நான்காவது மற்றும் இறுதிக் கட்டத்தில் விண்ணோடம் பிரிந்ததும் சந்திரயான்-1 விண்கலம் தனது புவிப் பாதையை வெற்றிகரமாக அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
விண்ணோடம் ஏவப்பட்ட 1,100 வினாடிகளில் சந்திரயான்-1 திட்டமிட்ட புவிப் பாதையை அடைந்ததாக 'இசுரோ' தலைவர் மாதவன் நாயர் உறுதிப்படுத்தினார்.
தற்போது சந்திரயான் -1 புவிவட்டப் பாதையில் இணைந்து புவியை வலம் வரத் தொடங்கியுள்ளதாகவும், சந்திரயான் -1 வலம் வரும் சுற்றுவட்டப்பாதை புவியிலிருந்து 250 கி.மீ உயரமாகவும் 23000 கி.மீட்டர் உயரமாகவும் மாற்றப்படும் என சிறீ அரிகோட்டா ஏவுதளத்தின் பேச்சாளர் திரு.எசு.சதீசு கூறினார்.
சந்திரயான் - 1 புவியை வலம் வந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்படுவதற்கு பெங்களூரிலுள்ள பைலாலு கட்டுப்பாட்டு மையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. சந்திரயான் -1 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைய 15 நாட்கள் எடுக்கும் என இசுரோ கட்டுப்பாட்டு மையத்திலுள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சந்திரயான்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியதன் மூலம், நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்குமுன் அமெரிக்கா, ருசியா, ஐரோப்பா, சப்பான், சீனா ஆகிய வல்லரசுகள் நிலவிற்கு விண்கலம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவிற்குப் போட்டியாக இருக்கும் சீனாவைவிட அதிக தொழில்நுட்பமும் மதிநுட்பமும் இந்தியா பெற்றிருப்பதாக திரு.சதீசு கூறினார்.
"விண்வெளி ஆய்வுக்காக இந்திய அரசு கோடிக் கணக்கில் செலவு செய்வதை விரும்பாததாலும், இத்திட்டத்திற்கு அரசியல்வாதிகளின் எதிர்ப்பு இருப்பதாலும் சீனாவைவிட சற்று மந்தமாகச் செயல்பட வேண்டியுள்ளது. எங்களுக்கு போதிய நிதி கிடைத்தால் நிலவிற்கு முதல் இந்தியரைக் கால்பதிக்க வைக்க எங்களால் முடியும்." என்று 'இசுரோ'வின் தலைவர் திரு.மாதவன் நாயர் தெரிவித்தார்.
2011-இல் இந்தியா நிலவிற்கு விண்கலம் ஒன்றினை அனுப்பி தரையிறங்கச் செய்து பல ஆராய்ச்சிகளை அங்கு மேற்கொள்ளவிருக்கிறது. அதனையடுத்து முதல் இந்தியனை அங்கு கொண்டுச் செல்லும் திட்டமும் வழிவகுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு முன்னோடியாக சந்திரயான் - 1 விண்கலம் அமையும் என்றால் அது மிகையாகாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல ஆய்வுகளுக்கிடையில் உருவான சந்திரயான் - 1 இரண்டாண்டுகளுக்கு நிலவின் சுற்று வட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வுகள் மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பை துல்லியமாகப் படம் பிடித்து அவ்வப்போது பூமிக்குத் தகவல் அளிப்பதோடு மட்டுமல்லாது, புவியில் கிடைக்கும் கனிமங்களின் சத்திக்கு பதிலாக மாற்று சத்தியைப் பெற்றுத் தரும் கனிமங்களையும் ஆய்வும் செய்யும்.
விண்வெளி என்பது மனிதனின் எதிர்காலக் கனவுகளை நிசமாக்கும் இருப்பிடம்! நிலவிற்கும் அப்பாற்பட்ட ரகசியங்களை உணர வேண்டுமென்றால், முதலில் நாம் நிலவிற்கு சென்றாக வேண்டும்! நிலாதான் விண்வெளியை எட்டிப் பார்க்கும் முதற்படி!" என்று திரு.சதீசு கூறினார்.
இந்தியாவின் எதிர்காலக் கனவுகள் நிசமாக அனைவரும் வாழ்த்துவோம். இக்கனவு திட்டங்களைச் செயல்படுத்துவதன் வழி முதற் தமிழன் நிலவைத் தொட்டால் அது நமக்குப் பெருமையே...
1 கருத்து ஓலை(கள்):
Nice blog..
thanks for sharing.
CAD digitization
Post a Comment