உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் ஒருவர் கைது!
>> Saturday, October 18, 2008
00:01am
தற்சமயம் கிடைத்த ஒரு செய்தியில், சுவாராம் மனித உரிமைக் கழகத்தின் தன்னார்வச் சேவகரும் போராட்டவாதியுமான செங் லீ வீ என்பவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர் சொகூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கதாகும். முந்தைய நாள் கம்போங் பாரு பிளெந்தோங் தெங்காவில் உள்ள மலாய் இனத்தவரின் குடியிருப்புப் பகுதியை இடித்துதள்ளும் போது ஏற்பட்ட கலகலப்பில் மொத்தம் 27 பேர் கைதாகினர்.
கம்போங் பாரு பிளெந்தோங் தெங்கா எனும் குடியிருப்புப் பகுதியானது கோலாலம்பூர் கம்போங் பாருவைப் போன்ற ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இப்பகுதியை வாங்கிக் கொண்ட புக்கிட்டு லெனாங்கு செண்டிரியான் பெர்காட்டு எனும் மேம்பாட்டு நிறுவனம் அங்குள்ள குடியிருப்புகளை உடைப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுவிட்ட நிலையில், கடந்த 16-ஆம் திகதி அத்தோபர் மாதம் வீடுகளை உடைக்க மேம்பாட்டாளர்கள் 100 கலகத் தடுப்புப் படை அதிகாரிகளுடனும் 200 காவல்த்துறை அதிகாரிகளுடனும் அங்கு வந்தனர்.
கம்போங் பாருவிற்குள் நுழையவிடாது அங்கு வசிக்கும் பொதுமக்கள் சுமார் 2400 பேர் கைகளை ஒருவருக்கொருவர் பிண்ணிக் கொண்டு தடுப்பு கொடுத்து நின்றிருந்தனர். எனவே அங்கு கலகம் மூண்ட வேளையில் பலர் கைதாகினர். காவல்த்துறையினரின் மூர்க்கத்தனமான, அதே வேளையில் சட்டத்தை மீறிய கைது நடவடிக்கை குறித்து திருப்திக்கொள்ளாத 26 வயதுடைய செங் லீ வீ நேற்று பிற்பகல் மணி மூன்று அளவில் பெர்மாசு செயா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அதன்பின் இரவு 8 மணியளவில் இன்சுபெக்டர் அசுமான் முசுதாப்பா செங் லீ வீயின் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு அவரை சிறீ அலாம் காவல் நிலையத்திற்கு வருமாறு பணித்துள்ளார். செங் லீ வீக்கு துணையாக சொகூர் பாரு சுவாராம் ஒருங்கிணைப்பாளர் ஞாம் கீ ஆன், மலேசிய சோசியலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் சூ சின் செய், சுவாராம் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டூழியர் சீ சியு மீன் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர்.
செங் லீயின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின், சுமார் இரவு 10.45 மணியளவில் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் டி.எசு.பி முகமது நோர் ரசீட்டு செங் லீயை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 28-இன் கீழ் கைது செய்வதாகக் கூறியுள்ளார்.
தவறான அறிக்கையை வெளியிட்டால் பிரிவு 28 சட்டம் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 28-இன் படி, “யாரொருவர் வாய்மொழியாகவோ, பத்திரிக்கை, கையேடு அல்லது எவ்விதமான அச்சு பிரசுரங்களையும் பயன்படுத்தி பிழையான அறிக்கையை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டு செய்தால், அவர்கள் சட்டத்தை மீறியக் குற்றவாளிகள் எனக் கருதப்படுவார்கள்”. என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் செங் லீயின் வழக்கறிஞர்கள், சட்டப்பிரிவு 28-ல் காவல்த்துறையினருக்கு யாரொருவரையும் நீதிமன்ற விசாரணையின்றி தடுத்து வைக்க இடமளிக்கவில்லை என்பதால் அவரை 24 மணிநேரத்திற்குள்ளாக நீதிமன்றத்தில் கொண்டு விசாரணைச் செய்து, அவர்மீது குற்றஞ்சுமத்த வேண்டுமா அல்லது மேலும் விசாரணைக்கு தடுத்து வைக்க வேண்டுமா என்று முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதன்பின்னர் செங் லீ பாசீர் கூடாங் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மேல்விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த இருமாதங்களில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மூன்று சீனர்கள் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விவகாரம் தொடர்பான மேலும் பலச் செய்திகள் காலையில் பதிவிடப்படும்..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment