மறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு

>> Saturday, November 22, 2008

சமயம் என்றாலே, தான் கண்டு வாழ்ந்த இயற்கையின்பால் மனிதனுக்கு எழுந்த உணர்வுகளின் அக,புற வெளிப்பாடு என்று கூறலாம். இந்த உணர்வுகள் பண்பட்ட நெறியாக வெளிக்கொணரப்பட்டது நாகரீகங்கள் எழுச்சி பெற்ற காலத்தில்தான். உலக சரித்திரத்தில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டே மனித நாகரீகங்கள் தோற்றம் கண்டன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சுமேரியா, எகிப்து, சிந்து சமவெளி, மாயா, சீனா போன்ற ஆதிகால நாகரீகங்களில் வாழ்ந்த மக்கள், ஏதோ ஒருவகையில் இந்த இயற்கையோடு தங்களுக்குள்ள தொடர்பை வெளிப்படுத்த முனைந்த தடையங்கள் பல பரந்து காணக் கிடக்கின்றன. ஆனால் இந்நாகரீகங்களோடு தமிழர்களின் நாகரீகத்தை ஒரு ஒப்பீடு செய்து பார்த்தால், ஆதிகாலந்தொட்டே தமிழர்களின் சமய நம்பிக்கையானது புற வழிபாடுகளைவிட அக வழிப்பாட்டு தத்துவத்திற்கே அதிகம் மதிப்பு கொடுத்து வந்துள்ளது புலனாகிறது.

பாரத கண்டத்தில், அதிலும் முக்கியமாக தமிழகத்தில் சமய இலக்கியத்தின் வளர்ச்சியைப்போல் வேறெந்த நாகரீகமும் பெற்றிருக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறலாம். சங்ககாலம் தொட்டே தமிழர்கள் மொழியின் வளர்ச்சிக்காக சமயத்தையும், சமயத்தின் வளர்ச்சிக்காக மொழியையும் போற்றி பேணி வந்துள்ளார்கள். தமிழர்களின் சம இலக்கியங்களில் காணக் கிடக்கும் பலவகையான வழிப்பாடுகளை, தத்துவ அடிப்படையில் ஆய்வு செய்து அதற்கான விளக்கங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய பல சமயப் பெரியார்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.


அந்தச் சமயப் பெரியார்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர், ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய மாணிக்கவாசகர் ஆவார். படித்தாலும், பக்கம் நின்று கேட்டாலும், கருங்கல் மனத்தையும் கனிந்துருகச் செய்யும் திருவாசகம் என்னும் தேனை உலகிற்கு வழங்கிய பெருமை அவரையேச் சாரும். தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கும் இணையற்ற பாடல்கள் பலவற்றைக் கொண்டது, திருவாசகமாகும். அத்திருவாசகத்திலுள்ள இரு தேன்துளிகளே 'திருவெம்பாவை' , 'திருப்பள்ளியெழுச்சி' ஆகியனவாகும்.

திருவெம்பாவை என்றால் என்ன?

இருள் விலகுமுன்னே இளம்பெண்கள் சிலர் எழுந்து, தம் தோழியரின் இல்லந்தோறும் செல்வர்; துயின்றுகொண்டிருக்கும் அவர்களை எழுப்பி அழைத்துச் சென்று நீர் நிலையில் நீராடுவர்; பின்பு, மணலால் 'பாவை' போன்ற ஓர் உருவம் அமைத்து, நாடு செழிக்க வேண்டும், நல்ல கணவர் தமக்கு வாய்க்க வேண்டும் என வேண்டி அதனை வணங்குவர். இதுவே திருவெம்பாவை எனப்படும்.இதற்குத் தத்துவ அடிப்படையில் வேறு பொருளும் கூறுவர்.

அஃதாவது, பக்குவம் முதிர்ந்த ஆன்மா, மல இருளில் அழுந்திக் கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவை எழுப்பி, இறைவன் அருள்நீரில் திளைப்பதற்கு அழைத்துச் செல்வதாய்க் கூறுவர்.

திருவெம்பாவை என்னும் பகுதியில் அமைந்துள்ள பாடல்கள், ஒருவருடன் ஒருவர் உரையாடும் நாடகக் காட்சிகள் போல் அமைந்துள்ளன. ஓரளவு தமிழ் கற்றவரும் விரும்பிப் படிக்கும்வண்ணம் அழகிய சந்த நடையில் அப்பாக்கள் ஆக்கப்பட்டுள்ளன.

திருவாசகத் தேனடையில் உள்ள மற்றொரு துளி, 'திருப்பள்ளியெழுச்சி' ஆகும்.

'திருப்பள்ளியெழுச்சி' என்பதற்குப் பொருள் யாது?

இறைவனைத் துயில் எழுப்புதல் என்பதாகும்.

அப்படியென்றால், இறைவன் உறங்கிக் கொண்டிருக்கின்றானா?

அன்று.

இந்த ஊன் உடம்பாகிய ஆலயத்தில், உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவன் வீற்றிருக்கிறான். ஆனால், ஆன்மா அந்த இறைவனைப் பற்றாது, ஐம்புலன் வழிப்பட்டு உலகாசையில் அழுந்தியுள்ளது. அவ்வாறு இறைவனை மறந்த நிலையே - மறைத்துள்ள நிலையே - இறைவன் துயில்வதாய்க் குறிப்பிடப்படுகிறது. மறைத்துள்ள திரையை விலக்கி, ஆன்மாவை இறைவனோடு ஒன்றச் செய்வதற்காக - இறைவனை நெஞ்சகத்தில் நிலை நிறுத்துவதற்காக - பாடப்படும் பாடல்களே திருப்பள்ளியெழுச்சியாகும்.

இன்று திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. அப்படியென்றால் என்னவென்று கேட்கிறார்கள் இளையோர்கள்! காலத்தால் மறக்கடிக்கப்பட்டு வரும் விரத வழிபாடுகளில் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் அடங்கும். மார்கழி மாதத்தில் இவ்விரு வழிபாடுகளும் பலங்காலந்தொட்டே தமிழ்ப் பெண்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இன்று தமிழகத்தில் ஆங்காங்கே ஆலயங்களில் மார்கழி மாத விரதம் இருந்து இவ்விரு பாடல்களும் பாடப்பட்டு வந்தாலும், எண்ணிக்கையளவில் குறைவாகவே மக்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் தாய்லாந்தில் 'த்ரியம்பா' என்றப் பெயரில் சிவனுக்கு விழா எடுக்கிறார்கள் அங்குள்ள மக்கள். நாம் இறைவனை பொன்னூஞ்சலில் வைத்து பாடுவது போலவே, அங்குள்ளவர்களும் சிவன் சிலையை பொன்னூஞ்சலில் வைத்து பாசுரங்கள் பாடுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மலேசியத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக மலேசியத் தமிழ் இளைஞிகள் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியை ஆலயங்களில் பாடுவது என்பது அரிதாகவே இருக்கிறது. ஓரிரு தேவாரக் குழுக்கள் மட்டும் ஆலயங்களில் இப்பாடல்களைப் பாட கேட்டிருக்கிறேன்.

விரதமேதும் மேற்கொள்ளாவிடினும் குறைந்த பட்சம் இவ்விருப் பாடல்களையும் பொருளுணர்ந்து அனைவரும் பாடி அதன் இன்பத்தை பெற வேண்டும் எனும் நோக்கில் 'திருவெம்பாவையையும்' திருப்பள்ளியெழுச்சியையும்' தொடர் பதிவாக இனிவரும் பதிவுகளில் இடவுள்ளேன். இதற்காக சில நூல்களை மேற்கோள்களாகக் கொள்ளவுள்ளேன்.

இப்பாடல்களனைத்தும் பொருளுணர்ந்து வாசிக்கப்படின் / பாடப்படின் உள்ளத்துக்கு நல்லதோர் அரிய விருந்தாக அமைவது திண்ணம் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

4 கருத்து ஓலை(கள்):

VIKNESHWARAN November 22, 2008 at 11:19 AM  

//சங்ககாலம் தொட்டே தமிழர்கள் மொழியின் வளர்ச்சிக்காக சமயத்தையும், சமயத்தின் வளர்ச்சிக்காக மொழியையும் போற்றி பேணி வந்துள்ளார்கள். //

இந்த காலத்தில் இந்நிலை எப்படி அமைந்துள்ளது...

சதீசு குமார் November 22, 2008 at 7:34 PM  

உங்கல் கேள்விக்கான பதில் தலைப்பிலேயெ இருக்கிறது..

சுப.நற்குணன் - மலேசியா November 23, 2008 at 4:32 PM  

தமிழர்கள் கண்ட பத்தி இலக்கியங்களான திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பற்றி மிகச் செறிவாக எழுதியுள்ளீர்கள்.

//சங்ககாலம் தொட்டே தமிழர்கள் மொழியின் வளர்ச்சிக்காக சமயத்தையும், சமயத்தின் வளர்ச்சிக்காக மொழியையும் போற்றி பேணி வந்துள்ளார்கள்.//

முற்றிலும் மெய்யான செய்தி. இறைமை உணர்வைக்கூட தமிழோடு பொருத்திப் பார்த்தவர்கள் தமிழர்.

அதனால்தான், சமணம் - புத்தம் முதலிய சமயங்கள் தலையெடுத்த காலத்தில் அவற்றை எதிர்த்து தமிழிய உணர்வோடு போர்க்கொடி தூக்கியவர்கள் நம்முடை 'நால்வர்' என்ற வரலாறு சொல்லப்படாமலே கிடக்கிறது.

தேவாரமும், திருவாசகமும், சிவபுராணமும், ஆழ்வார் புராணமும் தமிழர்களின் ஆதி சமயமாகிய சைவத்தையும் வைணவத்தையும் காப்பதற்காகவே பாடப்பட்டவை. அதுமட்டுமல்லாது பத்தி இலக்கியம் முழுவதும் தமிழையும் தமிழர் சமயத்தையும் முன்னெடுப்பவையே.

இந்த உண்மைகள் எல்லாம் இன்று வேரொரு சமயத்தின் பெயரால் மறைக்கப்படுகின்றன - மறுக்கப்படுகின்றன.

வரலாற்றில் தமிழனும் தமிழும் தாழ்ந்து போனதற்கு பல கரணியங்களில் தமிழர்ச் சமயம் கலவாடப்பட்டு கலவையாக்கப்பட்டது மிகமிக முகாமையானது.

தமிழர் இன்றுவரை அடிமை இனமாக வாழ்ந்து வருவதற்கான அடிப்படைக் கோளாறும் இதுவேதான்.

தமிழர் மீட்சிபெற வேண்டுமானால் மொழி, இனம், சமயம் ஆகிய மூன்றிலிருந்தும் விடுதலைப் பெற்று தனி அடையாளத்தோடும் - தனித்த விழுமியத்தோடும் எழுந்துநிற்க வேண்டும்.

குறிப்பாக, தமிழர் கண்ட ஆதி சமயங்களாகிய சைவம் - வைணவம் ஆகிய தூய தமிழ்ச் சமயத்திற்குத் திரும்ப வேண்டும்.

இப்படி ஒன்று நடப்பது குதிரைக் கொம்பான செயல்தான். இருந்தாலும்,

தமிழனைப் பற்றிய உண்மைகளைத் தொடர்ந்து சொல்லுவதை நிறுத்தவே கூடாது. இன்று ஏற்படுகின்ற ஒரு சிறிய சிந்தனைப்பொறி நாளை தமிழ்க் குமுகாயத்தை விடுதலைப்பெறச் செய்யலாம்.

மு.வேலன் November 24, 2008 at 11:47 AM  

//அஃதாவது, பக்குவம் முதிர்ந்த ஆன்மா, மல இருளில் அழுந்திக் கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவை எழுப்பி, இறைவன் அருள்நீரில் திளைப்பதற்கு அழைத்துச் செல்வதாய்க் கூறுவர்.//

இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு மன முதிர்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் தேவை. இக்காலகட்டத்தில் பல்கலைகழக பட்டதாரிகளுக்கே இந்த முதிர்ச்சி இல்லை. ஏட்டு படிப்பால் ஆன அறிவு வளர்ச்சியில் மட்டும் அறிவு முதிர்ந்து விடாது. அறிவு தெளிவில்தான் அறிவும் மனமும் முதிர்ச்சியடையும். அறிவு தெளிவடைய, சமய அறிவு பெரிதும் கைக்கொடுக்கும். அதற்கு மேற்கண்ட கூற்றே சான்று.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP