திருவெம்பாவை - பாடல் 1

>> Sunday, November 30, 2008

அருள் வடிவானது இறை, அன்பின் திருஉருவம் இறை, சிந்திக்குந்தோறும் தெவிட்டாத அமுது இறை. இந்த இறையை ஏத்தி வழிபடுவதுதான் மானிடப் பிறவியின் உயர்வு ஏற்றம் எல்லாம். அதுவும், மகளிர் வழிபாடே தனி. இறையை சக்தியாகப் பார்க்கின்ற பொழுது தமக்கும் அதற்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதை மகளிர் உணர்கின்றார்கள். இந்த உணர்ச்சியின் அடிப்படையில் எழுந்த ஒளிக்கதிர்தான் திருவெம்பாவை.


திருவெம்பாவை : திரு, தெய்வத் தன்மையைக் குறிக்கின்றது. எம்- என்பது உயிர்த் தன்மையை உணர்த்துகின்றது. பாவை - வழிபாட்டிற்கு உகந்த உருவம். ஆகவே திருவெம்பாவையின் திரண்ட பொருள், தெய்வத்தன்மை வாய்ந்த திருவருள் எங்களோடு இணைந்து இயங்குகின்றது; எங்களுக்குத் துணையாய் நிற்கின்றது; நாங்கள் செய்யும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்கின்றது. - ஏற்றுப் பயனளிக்கிறது என்பதாகும். இப்பாடல்களில் பாவை சிறப்பிடம் பெற்றதால், ஒவ்வொரு பாடலின் முடிவிலும்எம் பாவாய்' என்று அமைந்துள்ளது. ஏனென்றால், இந்தத் திருத்தொடரை இடைவிடாது நினைவுகூர்தல் வேண்டும். ‘ஏலோரெம்பாவாய்' என்பதில் ஏலும் ஓரும் அசைகள்; பாவாய் - விளித்தல். பாவை நோன்பு நோற்கும் பெண்கள்பாவாய்' என அழைக்கப்படுகின்றனர்.

திருவெம்பாவை

பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வனசெவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

காட்சி விளக்கம் :

பொழுது புலர இன்னும் வெகுநேரம் உள்ளது. சில கன்னிப் பெண்கள் பக்தி மேலீட்டால் கிழக்கு வெளுக்கும் முன்னே எழுந்துவிட்டார்கள். தோழி ஒருத்தி துயில் நீங்காது உறங்குகின்றாள். அவளை எழுப்பி எம்பெருமானின் பெருமையை ஏத்தச் செய்ய வேண்டும். அதற்காகப் பாடுகிறார்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ

முதலும், முடிவும் இல்லாத சோதி வடிவானவன் இறைவன். ஒண்சுடர் ஒப்பற்ற நாதன் அவன். தேசுடை விளக்கு அவன். செழுஞ்சுடர் மூர்த்தி அவன். அவனைப் புகழ்ந்து நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்டுங்கூட நீ உறங்குகின்றனையே, இது என்ன வேடிக்கை? யாம் மட்டும் பாடுகிறோம், நீயும் வந்து பாடுவதுதானே நியாயம்.

நீ வாள்தடங்கண்ணி. வாள் போன்று கூர்மையான கண்களையுடைய நங்கை. ஒளி பொருந்திய, அகல விழிகளையும் கொண்ட மங்கை. ஆம், பார்க்க வாளை ஒத்த கூர்மை கொண்டது உன் கண்கள். பிறர் பார்த்து மகிழ அகலமான விழிகள்.


வளருதியோ.” ஒளி பொருந்திய உன் கண்கள் ஒளியைக் காணாது உறங்குகின்றனவோ என்று பாங்காகக் கேட்கின்றார்கள் பாவைகள்.

மீண்டும் தொடர்கிறது பாட்டு :

வன்செவியோ நின் செவிதான் : ”நின் செவிகள்தாம் செவிடோ? காதுகள் திறந்துதானே இருக்கின்றன. அப்படி இருந்தும் ஏன் கேட்கவில்லை? இறைவன் திருவடிகளை வாழ்த்திய வாழ்த்தொலி நெடுந்தூரம் கேட்கும். வீதி முழுவதும் ஒலிக்கின்றது. கேட்ட மாத்திரத்தில் வீட்டுடைப் பெண்டிர், விளக்கேற்றி மாடத்தில் வைக்கின்றார்கள். என்னதான் உன் செவியோ?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி,விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள், கிடந்தாள், என்னே என்னே.”

உன்னைப்பற்றிச் சொன்னார்கள், மலர் பரப்பிய படுக்கையினின்றும் புரண்டு எழுந்து விம்மி வெடிப்பாள் ; தேம்பி தேம்பி அழுது தன்னை மறந்திருப்பாள் என்று, ஆனால் ஒன்றுக்கும் முடியாமல் இப்படிக் கிடக்கிறாயே. எங்கள் தோழியே இதுவோ உன் தன்மை! வியப்பு, வியப்பு.

ஈதேஎந் தோழி, பரிசேலோர் எம்பாவாய்

ஏலோர் எம்பாவாய் ஏலோர் : ஓர் ஆசை. “நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாயோ, எங்கள் தோழி!”


***

இறைவன் பெயர் ஒலிக்கக் கேட்டதும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்டிர்களும் எழுந்து விடுகின்றனர். இச்சூழ்நிலையில் தங்களுடைய தோழியொருத்தி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவளை துயிலெழச் செய்ய பாடுகிறார்கள். கதிரவன் உதிப்பதற்கு முன் பெண்டிர்கள் துயிலினின்று உதித்திட வேண்டும் என்பது தமிழர்களுடைய மரபாக இருந்து வந்துள்ளது. கதிரவன் தன் செங்கிரணங்களால் உலகை அலங்கரிப்பதற்குள், மரபுவழிப் பெண்டிர்கள் அதிகாலையிலேயே தன் மனையை மெழுகி சுத்தம் செய்து, காலைக்கடன் முடித்து, மாக்கோலமிட்டு வீட்டை அலங்கரித்துவிடுவது மரபாக இருந்து வந்துள்ளது.

குளித்தப் பின்பே மனையில் விளக்கேற்றி, சமையல் அடுப்பில் தீயை மூட்ட வேண்டும் என்ற வழக்கத்தையும் நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

இன்று என்ன நடக்கிறது?

இக்கால நவநாகரீகப் பெண்கள் எழும் நேரம் அவர்களுக்கே தெரியாது! கதிரவன் உதித்தப்பின்பே பலர் எழுகின்றனர். தாமதமாக எழுந்தது மட்டுமல்லாமல் தலைவிரிக் கோலமாக, பல் விலக்காது சமையலறையில் நுழைந்து அடுப்பைப் பற்ற வைப்பார்கள். இது பல குடும்பங்களில் நடக்கிறது. நெகிழியால் ஆன செயற்கை கோலங்கள் வீட்டின் வாசலை அலங்கரிப்பதால் மாக்கோலமாவது மண்ணாங்கட்டியாவது! செயற்கைக் கோலங்களை வீட்டு வாசலில் ஒட்டுவதன் மூலம் கோலமிடுவதின் உண்மை நோக்கமே அங்கு அடிப்பட்டு விடுகிறது. ஏதோ அத்திப்பூத்தாற்போல் பொங்கலுக்கோ, தீபாவளிக்கோ கோலமிடுகிறேன் பேர்வழியென்று ரசாயனக் கலவையிலான மாவைக் கொண்டு கோலமிடுவர். பாவம், அதைத் தின்ன வந்த சிறு உயிர்களான எறும்புகள் கூண்டோடு காலி! சிலர் வீட்டினுள் பூச்சிகள் நுழையாதவாறு ஆங்காங்கே பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்திருப்பார்கள்.

ஆனால் இவர்கள் போடும் இந்தவகை கோலமே அங்குள்ள சிறு உயிர்களை கூண்டோடு அழித்துவிடும்! பூச்சிக் கொல்லி மருந்துக்கு வேலையில்லை!

குளிக்காமலேயே அடுப்படியில் சமையல் நடப்பது ஒரு புறமிருக்க, காலையில் இறைவணக்கம் வானொலி பாடிக் கொண்டிருக்கும். வாயில் ஒரு தேவாரம் திருவாசகம் என முணுமுணுப்பதுக் கூடக் கிடையாது! தெரிந்தால்தானே பாடுவதற்கு! அதற்குதான் இருக்கிறதே வானொலி, ஒலிநாடாவையோ குறுந்தட்டையோ நுழைத்து விட்டால், அது ஒருபுறம் கத்திக் கொண்டிருக்கும். இவர்களின் வேலை ஊதுவத்தி கொளுத்துவது, சாம்பிராணி போடுவது, மணியடிப்பது! இதைவிட்டால் நம் மகளிருக்கு வேறென்னத் தெரியப் போகிறது. இதுதான் இறைமைக்கு கொடுக்கும் மதிப்பா..? இதைத்தானே பலகாலங்களாக பரம்பரைப் பரம்பரையாக நாம் செய்துக் கொண்டிருக்கிறோம்.

இப்பொழுதே இப்படியென்றால் அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்குமோ...?!

எதையாவது உறுப்படியாகச் செய்ய வேண்டுமென்று ஒரு சிலருக்கே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் பெரும்பான்மையினருக்கு ‘பழையக் குருடி, கதைவத் திறடி' கதைதான். அடுத்த தலைமுறையினரையும் இதேப்போன்று அச்சுவார்த்து எடுப்பதற்கு தயாராக இருங்கள். மேற்கூறிய விடயங்கள் ஆண்களுக்கும் பொருந்தும்!

அடுத்தப் பதிவில் 'திருவெம்பாவை பாடல் 2-இன் விளக்கத்தினையும்பாவை நோன்பு' என்றால் என்னவென்றும் பார்ப்போம்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP