16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஒன்று)
>> Monday, February 18, 2008
என்னடா ஆளையே காணோமே என்று நிச்சயம் எண்ணியிருப்பீர்கள், முதலில் வாசகர்களிடத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சில நாட்களாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினாலும் வேலைபழுவின் தாக்கத்தினாலும் களைப்பின் உச்சக்கட்டத்துக்கே போய்விட்டேன். புத்துணர்வுப் பெற சற்று ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று.
நிச்சயம் 16-ஆம் திகதி என்னதான் நடந்தது என எதிர்ப்பார்த்திருப்பீர்கள். உங்கள் எதிர்ப்பார்ப்பை சற்று தாமதமாக நிறைவேற்ற வேண்டியதாயிற்று. பல ஊடகங்களிலிருந்து 16-ஆம் திகதி பேரணி தொடர்பாக பல விஷயங்களை அறிந்திருப்பீர்கள், அதன் தொடர்பாக என் பங்கிற்கு நான் கண்டவற்றை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
என் அனுபவம் இப்படி ஆரம்பமாகிறது...
15-ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் குளுகோர் பூமரத்தம்மன் ஆலயத்தை நோக்கி என் மோட்டார் வேகமாகப் பறந்துக் கொண்டிருந்தது. பேருந்து நமக்காக காத்திருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மோட்டாரின் வேகக் கட்டுப்பாட்டை மீறினேன். எனக்கு தெரிவிக்கப்பட்டது, பூமரத்தம்மன் ஆலயத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு பேருந்து புறப்படுகிறது என்று. இரவு 10.30 மணிக்கு என் மோட்டார் பூமரத்தம்மன் ஆலயத்தை அடைந்தது. ஆனால், பேருந்து நிற்க வேண்டிய இடத்தில் கரிய இருள் மட்டும் சூழ்ந்து நின்றது. என்னைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. சரி, முதலில் மோட்டாரை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என எண்ணிய போது பூமரத்தமன் ஆலயம் மட்டுமே பாதுகாப்பான இடமாக எனக்கு கண்ணில் பட்டது. உடனே, ஆலயத்திலிருந்து வெகு நேரமாக என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆசாமியை அணுகினேன். பார்ப்பதற்கு மர்மமான ஆசாமியைப்ப்போல் தோன்றினார். அவருக்குப் பக்கத்தில் ஒரு ஆசாமி, சம்பந்தமே இல்லாமல் அங்கும் இங்கும் நடைப் பழகிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக சுதாகரித்துக் கொண்டு மோட்டாரை ஓரிரவிற்கு ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்க அனுமதிக் கேட்டேன். அவரும் கையை நீட்டி ஓரிடத்தை காட்டினார், அதன் பின் ஆந்தை விழிப்பதுபோல் என்னை உர்ர்ர்...ரென்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். மறுபுறம் இன்னொரு ஆசாமி தன்னுடைய நடைப்பழக்கத்தை நிறுத்தவில்லை. இவர்களை நம்பி எப்படி மோட்டாரை வைப்பது என சந்தேகித்தேன். இருப்பினும் வேறிடம் இல்லாததனால் அங்கேயெ வைக்க முடிவு செய்தேன்.
மோட்டாரை பாதுகாப்பாக ஓரிடத்தில் நிறுட்திவிட்டு ஆலயத்தின் முன்புறம் உள்ள நிழற்குடையின் கீழ் அமர்ந்தேன். மணி அப்போது இரவு 10.45ஐ எட்டியிருந்தது, எதிர்ப்புறம் ஒரு எண்ணெய் நிலையம் கண்ணில்பட அங்குச் சென்று கனிம நீரை வாங்கிக் கொண்டு மீண்டும் நிழற்குடையின் கீழ் அமர்ந்தேன். வெகு விரைவில் அந்த மர்ம ஆசாமியின் பழக்கம் எனக்கும் தொத்திக் கொண்டு விட்டது, நானும் சாலையோரம் அங்கும் இங்கும் நடைப்பழக தொடங்கி விட்டேன், சாலையில் செல்லும் வாகனங்களை ஆந்தையைப் போல் உர்ர்ர்..ரென்று வெறித்துப் பார்த்தேன். நின்றேன், நடந்தேன், அமர்ந்தேன்..நல்லவேளை நிழற்குடையைப் பிடித்துக் கொண்டு தொங்கவில்லை.. இடையிடையில் என் அன்பிற்குரியவள் கைப்பேசியின் மூலம் தொடர்புக் கொண்டு " பாத்துப் போடா, அடிக்கடி கால் பண்ணு" என்று செல்லமாக தன்னுடைய பயத்தை வெளிப்படுத்திக் கொண்டாள். அதோடு, மலாக்காவிலிருந்து ஓலைச்சுவடியின் நிருபர் நண்பர் கலையரசு அடிக்கடி கைப்பேசியின் மூலம் தொடர்புக் கொண்டு அவருக்குத் தெரிந்த நிலவரங்களையும் பகிர்ந்துக் கொண்டிருந்தார். இத்தனையும் நடந்துக் கொண்டிருக்க இரவு மணி 11.30ஐ நெருங்கியிருந்தது. பேருந்து வந்தப்பாடில்லை. உடனே, கோபம் கோபமாக வந்தது.பேருந்தை ஏற்பாடு செய்தவர்க்கு குறுந்தகவல் அனுப்பினேன், உடனே மறு அழைப்பு வந்தது. பேருந்து இப்பொழுதுதான் பினாங்கு பாலத்தைக் கடந்துக் கொண்டிருக்கிறது, நீங்கள் அறிவியல் பல்கலைக்கழக நுழைவாயிலில் காத்திருக்க முடியுமா என்று ஏற்பாட்டாளர் கேட்க எனக்கு கோபம் மீண்டும் தலைக்கேறியது.
"முடியாது, என்னுடைய மோட்டாரை நிறுத்தி வைப்பதற்கு அங்கு இடமில்லை, எனவே ஆரம்பத்தில் என்னை நீங்கள் கேட்டுக் கொண்டபடி பூமரத்தம்மன் ஆலயத்திலேயே வந்து ஏற்றிக் கொள்ளுங்கள்" என்றேன் நான்.
" சரி, உங்களைப் பார்க்க ஒரு நண்பரை அனுப்பி வைக்கிறேன்" என்றார் அவர்.
நள்ளிரவு 12 மணி, ஒரு மோட்டார் வண்டியில் ஒரு நடுத்தர வயதுக் கொண்ட ஆணும் பெண்ணும் என்னை நெருங்கினார்கள். " சார், பஸ்ஸுக்கு வேட் பண்ரீங்க்ளா?"
"ஆமாம் சார்"
"உங்க பஸ் டிரைவர் எனக்கு கால் பண்ணாரு, ராஜ காளியம்மன் கோயிலுக்கு முன்னாடிதான் பஸ் வேட் பண்ணுது.."
அவர் பேருந்து ஏற்பாட்டாளருக்கு கைப்பெசியில் தொடர்புக் கொண்டு " சார், உங்க ஃபிரண்டே கண்டுபுடிசிட்டேன்" என்றார்.
பிறகு அவர் கூறியதிலிருந்து பேருந்து ஓட்டுநருக்குப் பினாங்குத் தீவின் பாதைகள் அவ்வளவாகத் தெரியாது, எனத் தெரிந்துக் கொண்டேன்.
பூமரத்தம்மன் ஆலயத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் இராஜ காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அதிக தொலைவு இல்லாததனால், நடக்க ஆரம்பித்தேன், அவர்களும் என்னுடன் வந்தார்கள்.
என்னுடன் கூடவே மோட்டார் வண்டியில் மெதுவாகப் பயணித்துக் கொண்டே, அந்தப் பெரியவர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.
"நான் பஸ்ல வரலையா, கொஞ்சம் வேலை இருக்கு, அத முடிச்சிட்டு அப்புறமா காடிலே வந்துருவேன். சிரம்பான் போய்ட்டு, அங்கேர்ந்து ஆல ஏத்திகிட்டு திரும்ப கே.எல் க்கு வரணும். எல்லாம் எதுக்கு? எதிர்காலத்துல நம்ப பிள்ளைங்க நல்ல இருக்கணுன்னுதானே... போராடுவோம்யா..!"
அவர் சொல்வதிலும் நியாயம் உண்டு என்பதற்கு அடியாளமாக அவரைப் பார்த்துப் புன்னகைத்து தலையை அசைத்துக் கொண்டேன்.
இராஜ காளியம்மன் ஆலயத்தை நெருங்கியதும், அங்கு ஒரு தொழிற்சாலைப் பேருந்தும், பள்ளிப் பேருந்தும் நின்றுக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. பெருந்துகளுக்கு வெளியே நிறையப் பேர்கள் நின்றுக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது.
அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒருவர் என்னை வரவேற்று,
" சோர்ரி ப்ரோ, பாதை தெரியல அதான் லேட்டா ஆச்சி, வாங்க பஸ்ல ஏறுங்க" என்றுக் கூறினார்.
என்னுடையப் பெயரை அட்டவணையில் சரிப்பார்த்துவிட்டு என்னை தொழிற்சாலை பேருந்துக்குள் ஏற சொன்னார் ஒருவர். நான் அப்பேருந்தினுள் ஏற முயன்றபோது, மீண்டும் அதே நபர்,
" ப்ரோ, நீங்க அந்த பஸ் இல்ல, இந்த பஸ்ல ஏறுங்க" என்று பள்ளிப் பேருந்தைக் கைக்காட்டினார்.
இங்குதான் என்னுடைய அனுபவம் மாற்றியமைக்கப்படப் போகிறது என்று அப்பொழுது எனக்குத் தெரியாது. தொழிற்சாலைப் பேருந்தில் ஏறி இருந்திருந்தால் என் அனுபவம் வேறுபட்டிருக்கும்.
அனுபவம் தொடரும்...
அத்தியாயம் ஒன்று முற்றும்...
2 கருத்து ஓலை(கள்):
Enna, aiyaa ippadi paathiyile niruthi thalaiyai pichikka vachitinggale....seekiram continue pannugga aiyaa....
தோழரே,என்னுடைய அனுபவமும் வித்தியாசமானதுதான்.அந்த "ப்ரோ" யார்??நண்பர் வேலன்தானே??
உங்களுக்கு சம்பவ கலைப்பு எனக்கு சிறை கலைப்பு.
உரிமைப்போரில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்,நேரம் இருந்தால் கொஞ்சம் அதையும் பாருங்க!!
Post a Comment