விடியல் தாங்கி வரும் வைஷ்ணவி..
>> Sunday, February 10, 2008
புது மலர்கள் ஏந்தி
இளம் தளிர் ஒன்று
இங்கு நடந்து வருது
புது விடியல் தாங்கி
இளம் தென்றல் ஒன்று
இங்கு தவழ்ந்து வருது
புத்தகம் சுமந்து
பாலர் பள்ளி
செல்லும் வயதில்..
இலட்சியம் சுமந்து
பாராளுமன்றம் நோக்கி
பாய்ந்து வருது
நேசக்கரம் நீட்டி
நெஞ்சம் நெகிழ
நெருங்கி வருது
தேசத்தலைவர்
அப்துல்லாவின் அரவணைப்பை
அன்போடு கேட்டு வருது
ஆசிய ஜோதி நேருஜியின்
புன்னகையில் பூத்த
இந்திராவாய்..
தூக்கு சுமந்த பூட்டோ
தூக்கி சுமந்த
பெனாசிராய்...
புது வேதம் தாங்கி
விரைந்து வருது
வேதமூர்த்தியின் வைஷ்ணவி
அன்பு கேட்டு வரும்
ஐந்து வயது பிஞ்சு மீது
நஞ்சு நீர் அடிப்பீரோ..?
கண்ணீரோடு வரும்
கண்மணி மீது
கண்ணீர் புகை தெளிப்பீரோ..?
பிப்ரவரி 16ல்
படாவியின் பார்வை
பார்த்து கிடக்குது பார்.
நன்றி :
மோகனன் பெருமாள்
லண்டன்
மழலையின் குரல் பிரதமரின் பெரிய காதுகளுக்கு கேட்குமா..? கேட்க வேண்டும் என நம்புவோம்...
1 கருத்து ஓலை(கள்):
மீண்டு வாருங்கள்.... தமிழர் வாழ்வை மீட்டுத் தாருங்கள்..!
நீங்கள் எங்கே பிறந்தீர்கள்..!
எங்கே வளர்ந்தீர்கள்..!
என்னவாய் இருந்தீர்கள்..!
எதுவுமே தெரியாது எங்களுக்கு
ஆனால்.... இன்று...
மானமிக்க ஒவ்வொரு தமிழச்சியும்
உங்களைத் தன் கருவில் சுமந்ததாகவே நினைக்கிறாள்.
வீரமிக்க ஒவ்வொரு தமிழனும்
உங்களைத் தன் உதிரமாகவே காண்கிறான்.
நீங்கள் என்ன....
உரசினால் பற்றிக்கொள்ளும் தீக்குச்சிகளா?
உங்கள் பெயர் சொல்லும் ஒவ்வொரு உதடும்
அக்கினி மழை பொழிகிறதே..?
உண்மையைச் சொன்னால்..
இப்போதெல்லாம்..
கடைத்தெருவிலும்
ரோட்டோரங்களிலும்
வீட்டோரங்களிலும்
கல்யாணங்களிலும்
காது குத்துகளிலும்
ஏன்.....
கருமதிகளிலுங்கூட
உங்களைத் தவிர
வேறெதுவும் பேசப்படுவதில்லை.
எதிர்காலத்தில்
எங்கள் வயிற்றுக் குழந்தைகள்
பஞ்சு மெத்தையில் படுத்துறங்க
இப்போது நீங்கள்
கட்டாந்தரையில் கிடக்கிறீர்களா?
எதிர்காலத்தில்
எங்கள் வாரிசுகள் வயிறாற சாப்பிட
இப்போது நீங்கள் பட்டினி கிடக்கிறீர்களா?
எதிர்காலத்தில்
தமிழனின் அடிமை விலங்கு உடைபட
இன்று உங்களுக்கு கைவிலங்கா?
ஒவ்வொரு நாளும்
உணவுக் கவளம்
வாயருகே செல்லும்போதெல்லாம்
உப்பு போட்டு உண்ணும்
ஒவ்வொரு தமிழனின் மனசும்..
நீங்கள் பசித்திருப்பீர்களா....! படுத்திருப்பீர்களா....!
என்றுதான் நினைத்து துடிக்கிறது.
எங்கள் ஊரில் நீங்கள் நிகழ்த்திய உரையை
எங்கள் ஊரைச் சேர்ந்தவனே
பதிவு செய்து கொடுத்தானாம்
அதனால்தான்
உங்களுக்கு இன்று சிறைவாசமாம்....
கேள்விப்படுகிறோம்..!
பற்றி எரிகிறது அடி வயிறு....
இன்னுமா எட்டப்பப் பரம்பரை இருக்கிறது
மானமிக்க மனிதர்கள் இருக்கும் எங்கள் ஊரில்..?
இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமோ..
இந்தப் பாவத்தைக் கழுவித் தீர்க்க..
எங்கள் உயிர் நாடியில் எல்லாம்
உரிமைக்குரலாய் ஒலிக்கும்
எங்கள் வீர வேங்கைகளே......!
மீண்டு வாருங்கள்
தமிழர் வாழ்வை
மீட்டுத் தாருங்கள்
அதுவரை..
உங்களுக்காக..
ஊர்கள் தோறும் அமைதிப் பிரார்த்தனை நடத்துவோம்..
வீடுகள் தோறும் வேண்டுதல் விளக்கு ஏற்றுவோம்..
சந்திக்கும் தமிழரிடம் எல்லாம் உங்களைப் பற்றி பேசுவோம்..
எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் உங்கள் பெயர் சொல்லி வைப்போம்
அதற்கும் மேலாய்..
எங்கள் நெஞ்சக்கருவரையில்
உங்கள் நினைவுகளை
கருவாய் சுமந்திருப்போம்.
இப்படிக்கு
- மனசு முழுசும் பாசம் சுமந்து,
உங்கள் வரவுக்காக காத்திருக்கும் -
பத்தாங் பெர்சுந்தை தமிழர்கள்
Post a Comment