தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் - கா.ஆறுமுகம்

>> Wednesday, February 27, 2008

அரசாங்கம் ஆரம்பக்கல்வி மீது கொண்டுள்ள புதிய அணுகுமுறை ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளை வெகுவாகப் பாதிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது.

நமது தமிழ்ப்பள்ளிகளின் தேவையை உறுதிப்படுத்த வேண்டுமானால், நாம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டின் தேவை என்பதற்கு நம்மிடையே பலத்த ஆதரவு உள்ளது. ஆனால், அதைப் பற்றிய சமூக, அரசியல், பொருளாதார விவாதங்கள் நடைபெறுவதில்லை.

தமிழ்க்கல்வி என்பதற்கு ஒரு உணர்ச்சிவடிவான தோற்றமே உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுகளைக் கிரகித்து அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டதாகக் கருதுகிறோம்.


2006ஆம் ஆண்டுமுதல் அரசாங்கம் முன்னிறுத்திய அமுலாக்கக் கொள்கைகளைப் பார்ப்போம்:

1. கணிதம், அறிவியல் ஆங்கில மொழியில் போதிக்கப்படுகிறது.

2. தேசியப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும்).

3. ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் புதிய தமிழ்ப் பள்ளிகள் கிடையாது.

4. தேசிய ஆரம்பப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கும்.

5. தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவை என்ற வகையில் ஆசிரியர் பயிற்சிகள் இல்லை.

6. தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஆறு கொள்கைகளும் தமிழ்ப்பள்ளிகளை வெகுவாக பாதிக்கும். எவ்வகையான பாதிப்புகள் என்பதைக் காண்போம்.

1. கணிதம், அறிவியல் ஆங்கில மொழியில் உள்ளதால், வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் ஆங்கிலப் புலமையற்ற நிலையில் இந்தப் பாடங்களை முறையாக கற்க இயலாது. அதனால் கணிதம், அறிவியல் அறிவு அவர்களுக்கு ஆரம்ப நிலையில் முழுமையாகக் கிடைக்காது.

2. கணிதம், அறிவியல் பாடங்களைப் போதிக்க தமிழ்மொழி தெரியாத மற்றமொழி ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.

3. தமிழ் மொழிக்காகப் பயிற்சிபெறும் ஆசிரியர்கள் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர். அதே நிலையில், தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டாகும். இதைத் தவிர்க்க பிற இன ஆசிரியர்கள் அனுப்பப்படுவர். ஒட்டு மொத்தத்தில் தமிழ்க்கல்வியை அடிப்படையாக வைத்து ஆசிரியராக உருவாக்குபவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறையும்.

4. தேசியப்பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக இருப்பினும், அதனால் பலன்களை எதிர்பார்க்க இயலாது. மொழியின் தேவை, கட்டாயம் என்ற கோட்பாட்டை பொறுத்தது. தேசியப்பள்ளிகளின் கொள்கையில் தமிழ்மொழி கட்டாய மொழியாக ஆக்கப்படும் நிலை இல்லை. மேலும், ‘தேவை’ மொழியாக பிற மொழிகள் இருப்பதால், தமிழ்மொழி வளர இவ்வழி சிறந்தது கிடையாது.

5. தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை ஈடுகட்ட புதிய வகுப்பறைகளும், புதிய பள்ளிகளும் தேவைப்படுகின்றன. அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை கட்டுப்படுத்துவதால், இடப்பற்றாக்குறை உண்டாகிறது. பல பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கைக் கொண்ட மாணவர்கள் சேர்ந்த பிறகு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தேசியப்பள்ளியில் பதியும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். தமிழ்க்கல்வி பயிலும் வாய்ப்பை பல மாணவர்கள் இழந்து விடுகின்றார்கள்.

6. இடப்பற்றாக்கு¨யைக் கொண்டுள்ள சில பள்ளிகள், தாங்களாகவே நிதி திரட்டி பள்ளியை சீரமைக்கவும் முற்படுகின்றனர். இது சுயதேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு நடவடிக்கை போல தோன்றினாலும், இது ஓர் உகந்த நடவடிக்கையாகக் கொள்ள முடியாது. காரணம், பள்ளிக்கூடம் கட்டுவது அரசாங்கத்தின் கடமை. பல ஆயிரம் கோடிகள் இதற்காக ஒதுக்கப்படுகின்றன. இப்படி ஒதுக்கப்படும் அரசாங்க நிதி தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைக்கும் வகையில் வழி செய்வதை விடுத்து, நம்மை நாமே சுரண்டிக்கொள்வது அறிவு சார்ந்த செயலன்று. மேலும், அப்படியே கல்விக்காக நாம் பணத்தை செலவிட வேண்டுமானால், அதை நேரிடையாக குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் வகைகளில் செய்வதுதான் சிறந்தது.

7. அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டு முறைகளிலும் முரண்பாடு உள்ளதாகத் தோன்றுகிறது. நாடாளுமன்ற விவாதங்களின்படி பார்க்கையில், ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம 56.1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிகிறது (Parlimentary Hansard 12.09.2006, பக்கம் 107). 2006 முதல் 2010 வரை இதைப் பிரித்தால், ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் ரிம 11.2 மில்லியன் (ரிம 112 லட்சம்) கிடைக்க வேண்டும். 2006இல் இந்தத் தொகையை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கல்வி அமைச்சின் ஒதுக்கீடு ரிம 5 லட்சத்திற்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது 34 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிம 489,000 கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்திருப்பதாக, டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கூற்றை பத்திரிகைகள் வெளியிட்டன (NST, 15.12.2006, பக்கம் 21). ஒதுக்கப்பட்ட இந்தத் தொகையில் 5 விழுக்காடு கூட இல்லை. அரசாங்கம் எதனால் இப்படிச் செய்கிறது என்பதும் புரியவில்லை.

8. ஆரம்பக்காலத்தில் தோட்டப்பள்ளிகளாக இருந்தவை தற்போது நாடு காணும் வளர்ச்சியால் மாற்றங்கள் ஏற்பட்டு நகர்ப்புற பள்ளிகளாகவும் கூட்டுப்பள்ளிகளாகவும் உருவாகி வருகின்றன. பல தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன. இதுபோன்ற பள்ளிகளை இடமாற்றம் செய்வதை நாம் வரவேற்கலாம். ஆனால், அவை ஒரு முழுமைபெற்ற அரசாங்க பள்ளியாக உருவாக்கம் காண வேண்டும். அதை விடுத்து, நிலத்தையும், போதுமான வசதிகளற்ற வகையில் பள்ளிகளைக் கட்டி அதை மக்களின் தலையில் கட்டுவதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

9. தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளிகள் என்பவை தற்போது புதிய கோணத்தில் காட்டப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக உண்டான தமிழ்ப்பள்ளிகளின் மீதான மறுமலர்ச்சி மிகவும் பாராட்டுக்குரியது. நிலைமை இப்படி இருக்கையில், நடைமுறை அரசாங்கத்தின் போக்கு நமது நம்பிக்கையில் உலை வைப்பது போல் உள்ளது. தமிழ்க்கல்விகளில் பயின்ற சமூகம்தான் இதுநாள் வரை தேசிய முன்னணி ஆட்சியை 70 விழுக்காடு சுத்தமான வாக்குகளை எல்லா தேர்தல்களிலும் அளித்து ஆதரவு காட்டி வருகிறது. நமது நாட்டுப்பற்றையும் விசுவாசத்தையும் இதைவிட வேறுவகையில் எப்படிக் காட்டுவது. ஆனால், பிரதிபலனாக நாம் நமது அடிப்படை உரிமையான ஆரம்பக்கல்வியைக் கூட காக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

10. தமிழ்க்கல்வி என்பதே நமக்கு ஒரு பண்பாட்டு அரணாக இந்நாட்டில் நிலவும். அப்படிப்பட்ட சூழலில் நமது சமூகம் தன்னிச்சையான வகையில் சமூக, பொருளாதார, பண்பாட்டை உலக அளவில் ஓர் உயர்ந்த இடத்திற்கு இட்டுச்செல்ல முடியும். இதைச் செய்யத்தவறினால், இந்நாட்டில் வாழும் தமிழர்கள், மோசமான பண்பாட்டுச்சீரழிவிற்குத் தள்ளப்பட்டு, மேலைநாடுகளில் வாழும் கறுப்பின மக்களின் கலாச்சாரத்திற்கு ஒப்பாக உருவாக்கப்பட்டு விடுவார்கள்.

11.தற்போது உண்டாகியிருக்கும் ஆபத்தை நாம் உணர வேண்டும். நமது உடனடி நடவடிக்கை மேற்சொன்னவற்றைப் பற்றிய விவாதமும் அவை சார்புடைய உண்மைகளையும் உணர்வதாகும்.

இந்தப் பதிவையும் காண்க : ஏன் என் பிள்ளையை தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும்?

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP