சிங்கமொன்று புறப்பட்டதே...
>> Tuesday, February 12, 2008
நாடாளும் மன்றச் சாலை
வெறிச்சோடி கிடக்கும் வேளை
பாய்ந்து வரும் பார் ஓரலை
அச்சாலை பெற்றிடும் புதுக்கலை..
ஆம், மக்கள் சக்தியின் இரண்டாம் மாபெரும் அலையில் வருகின்ற பிப்ரவரி 16ஆம் நாள் சனிக்கிழமையன்று நாடாளுமன்றச் சாலை புதுக்கலையினைப் பெறப்போகிறது.. அதற்கான வேலைகளும் முழுமூச்சாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு தயாராகும் அரசியல்வாதியைப் போல், நாம் உரிமைத் வாக்குகளைப் பெறுவதற்கு ஆயுத்தமாகிவருகிறோம்.
நாடெங்கிலும் தற்போது மக்கள் சக்தி எனும் பிராணவாயு இந்தியர்களின் இருதயங்களை பலப்படுத்தி முறையாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது எனலாம். நாம் அகிம்சைவாதிகளாக இருந்தாலும் யாருக்கும் அஞ்சிவிடுவோம் என கனவு காணாதீர் என மக்கள் சக்தி உத்வேகத்துடன் உரிமைக் குரல் கொடுத்து வருகிறது. அக்குரல் நாடாளுமன்றக் கட்டிடத்தை ஒரு பதம் பார்க்க வேண்டாமா?
50 ஆண்டுகள் செவிடாகிப் போன நாடாளுமன்றக் கட்டிடம் நம் உரிமைக் குரலைக் கேட்டு நமக்குச் சாதகமாக எதிரொலிக்க வேண்டும். அதற்காகத்தான் தற்போது நாடெங்கிலும் இந்து உரிமைப் பணிப்படையின் இடைக்காலத் தலைவர் திரு.தனேந்திரன் ஊண் உறக்கம் மறந்து அல்லும் பகலும் எனப் பாராமல் மக்கள் சக்தியை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அம்முயற்சியின் ஒரு பகுதியாக நேற்று 11-02-08 ஜாசின் மகா மாரியம்மன் ஆலயத்தில் இந்து உரிமைப் பணிப்படையின் கருத்தரங்கம் திரு.தனேந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. அந்நிகழ்வை மலாக்கா கல்வி இலாகாவின் முன்னால் தமிழ் பள்ளிகளின் பொறுப்பாளராக பணியாற்றிய ஐயா திரு.கிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இவரும் திரு.தனேந்திரன் ஐயா மற்றும் பல சமுதாயத்தின் மூத்தக் குடிமக்கள் 25 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக, நேற்றுக் காலை புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்தின் முன் மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்தனர். ஆனால், அம்மகஜரை பிரதமர் நேரடியாகப் பெற்றுக் கொள்ள வராததனால், அம்மகஜர் பிரதமர்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதோடு, வருகின்ற 16ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு பிரதமரை வரக் கோரி திரு.வேதமூர்த்தியின் 5 வயதுக் குழந்தையான வைஷ்ணவி அழைப்புக் கடிதம் ஒன்றைக் கொடுக்க முயன்றப் போது அதற்கு அங்குள்ள பிரதமர்த் துறை இலாகாவின் அதிகாரியான ரவின் பொன்னையா என்ற இந்திய அதிகாரி அனுமதி வழங்காமல் அவரே அக்கடிதத்தையும் மகஜரையும் பெற்றுக் கொண்டதாகத் தெரியவருகிறது.
பிரதமர்த்துறை இலாகாவில் மகஜர் சமர்பிக்கும் நிகழ்வு குறித்து மலேசியாக்கினியின் படக்காட்சி கீழே :
ஜாசின் கருத்தரங்கு தொடர்பான படக்காட்சிகள் பின்பு இணைக்கப்படும்..
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment