16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் இரண்டு)
>> Wednesday, February 20, 2008
பள்ளிப் பேருந்தில் ஏறி இரண்டாம் வரிசை இருக்கையில் இடம் பிடித்தேன். பேருந்துக் கட்டணம் ரி.ம 35 வாங்கப்பட்டது. இளைஞர்களும் வயதானவர்களுமாக பேருந்தில் மொத்தம் 35 பேர்கள் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் யாரும் பேருந்தில் இல்லை. சிலர் தங்கள் கைகளில் இரட்டை ரோஜாக்களை வைத்திருந்ததைக் காண முடிந்தது. பயண ஏற்பாட்டாளர்கள் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்துக் கொண்டும், பயணிகளின் பெயர் அட்டவணையைச் சரிப்பார்த்துக் கொண்டும் இருக்கும் வேளையில், ஓர் அறிவிப்பு வந்தது. பேருந்தினுள் முன்புறம் நின்றுக் கொண்டிருந்த ஒருவர்,
"எல்லாரும் கேட்டுக்குங்க.. எங்ககிட்ட ஃபேஸ் மாச்க் இருக்கு, எல்லாருக்கும் ஒன்னொன்னு தரோம், பத்ரமா வெச்சிகுங்க, அங்கே போனதும் தேவைப்படும்.!"
என்று கூறிவிட்டு மருத்துவமனையில் அணியும் முகமூடியை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். எனக்கும் ஒன்று கிடைத்தது, பத்திரப்படுத்திக் கொண்டேன். பேருந்து நகரத் தொடங்குவதற்கு முன் என் பக்கத்தில் பயண ஏற்பாட்டாளர் திரு.வேலன் அமர்ந்துக் கொண்டார். பார்க்க முரட்டு மீசையோடு தோன்றினாலும் நல்ல மனிதர் என்பதை பிறகுத் தெரிந்துக் கொண்டேன். பேருந்து ஓட்டுநரும் தனது இருக்கையில் அமர்ந்து தயார் நிலையில் இருந்தார்.அவர் ஒரு முஸ்லீம் தமிழர். ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டார்.
ஒருவேளையாக நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டுப் பேருந்துகளும் குளுகோர் இராஜ காளியம்மன் ஆலயத்திலிருந்து நகரத் தொடங்கின. பேருந்து நகரத் தொடங்கியதும் உறங்கலாமா என நினைத்தேன், ஆனால் ஏதோ ஓர் உற்சாக உணர்வு என்னை நித்திரா தேவியிடம் சரணடையாமல் தட்டி எழுப்பிக் கொண்டே இருந்தது. இருக்கையில் சாய்ந்தப்படியே கண்கள் இரண்டும் திறந்திருக்க, நடக்கப் போகும் நிகழ்வைப் பற்றியக் கனவுகளில் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டேன். பேருந்தில் ஒரு ஆங்கிலத் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. சிறிது நேரம் என் கனவிலிருந்து மீண்டு திரைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.
பேருந்து பினாங்கு பாலத்தைக் கடந்தது.
அப்போது பேருந்து ஓட்டுநர் தனது கைப்பேசியில் ஏதோ பேசிக்கொண்டே வருவது தெரிந்தது. சற்றுத் தொலைவில் தெற்கே நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைப் பிரிவு கண்ணில் தென்பட்டது.
நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடியில் சாலைத் தடுப்புப் போடப்பட்டிருந்தால்....?
ஓட்டுநருக்கும் அது முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். பேருந்து திசை மாறி பழைய சாலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. ஓட்டுநர் அருகே நின்றுக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் அடிக்கடி கைப்பேசியில் பேசிக்கொண்டு சாலை நிலவரங்களை ஓட்டுநருக்கு கூறிக் கொண்டிருந்தனர். எங்களுக்கு முன் சென்ற தொழிற்சாலைப் பேருந்திலிருந்து அடிக்கடி சாலை நிலவரங்கள் பறிமாறப்பட்டன. இப்படியாக சுமார் அரை நாழிகைக் கடந்து இறுதியாக நிபோங் தெபால் நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடியை நெருங்கியது எங்கள் பேருந்து.
உடனே ஓர் இளைஞரின் மூலம் அறிவிப்பு வந்தது...
"முன்னுக்கு நிக்கிறானுங்க, எல்லாரும் மாரான் கோயிலுக்கு போறதா சொல்லுங்க..ஓகே வா.."
உடனே பேருந்திலுள்ளவர்களிடையே சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டு, பின் மயான அமைதியானது.
பேருந்தும், கட்டணச் சாவடியைக் கடந்தது.
ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.
பேருந்து வெளியிலிருந்து,
"இன்சேக் பெகி மனா?"
"பெகி மாரான்..."
"பெகி மாரான்..! பெதுல் கெ நீ..?"
"யா"
சிறிது நேரம் பேருந்து கண்ணோட்டமிடப்பட்டது.. கைமின் விளக்குகள் பேருந்தின் எண் பட்டையின் மீது பாய்ச்சப்பட்டு, எண்கள் குறிக்கப்பட்டன.
"ஒகே ஜாலான்..!"
பேருந்து மீண்டும் நகர்ந்தது, சாலைத் தடுப்பைக் கடந்த மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் தென்பட்டது.. 5 நிமிட மயான அமைதியில் உறைந்த பயணிகளின் பேச்சுக் குரல்கள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தன..
பயணம் தொடரும்...
இரண்டாம் அத்தியாயம் முற்றும்...
1 கருத்து ஓலை(கள்):
Sathis sir, i am waiting for ur next Attiyaayam....
Post a Comment