மக்கள் சக்தி - மாபெரும் சக்தி!
>> Sunday, February 3, 2008
உதிரத்தைக் கொட்டுகிறது உள்ளம்!
வெந்நீரைக் கொட்டுகின்றன கண்கள்!
யாருக்காக?
இந்நாட்டின் ஒவ்வோர் இந்தியனும் சிறப்போடு வாழ..
குரல் கொடுத்த தோழர்களுக்காக!
நமக்காகப் போராடியவர்கள்!-நம்மைக்
காக்க வந்த பஞ்சபாண்டவர்கள்!
குடும்பத்தை மறந்து,
சுகமான வாழ்க்கையை மறந்து
சமுதாயத்தின்மீது பற்று கொண்ட
சிங்கங்கள்!
சமுதாயத்தின் கண்களைத் திறந்த
விடிவெள்ளிகள்!
தன்னை இழந்து ஒளியைத் தரும்
மெழுகுபோல,
இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் ஒளிர்விட
தங்களையே அர்ப்பணிக்கத் துணிந்த
சமுதாயச் சிற்பிகளே!
எங்களின் காவல் தெய்வங்களே!
உள்ளம் அழுகிறது! உள்ளம் அழுகிறது!
நீங்கள் உள்ளே இருப்பதனாலல்ல!
உங்களைப் புரிந்துக் கொள்ளாதவர்கள்
இன்னும் இருக்கின்றார்களே என நினைக்கையிலே!
பூனைக்கு மணிகட்டிய வீரத்திலகங்களே!
உலகத்தையே தட்டெழுப்பிய
சாதனைத் தலைவர்களே!
உங்களுக்குப் போட்ட
இரும்புத்திரைகள் திறக்கும்வரை
எங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை!
எங்கள் இல்லத்தில் சந்தோஷம் இல்லை!
சுகபோகங்கள் எங்கள் வாழ்வில்,
இல்லவே இல்லை!
நீங்கள் ஏற்படுத்திய தீப்பொறிகள்,
நாட்டை அழிப்பதற்காக
வந்தவையல்ல!
நீங்கள் ஏற்றிய தீப்பந்தங்கள்,
தலைவர்களை அழிப்பதற்காக
வந்தவையல்ல!
அரசியல் பதவிகளைக் கைப்பற்றவோ
சுய விளம்பரம் தேடிக்கொள்ளவோ
வெறிகொண்டு வந்தவையல்ல!-அவை
இந்திய சமுதாயத்தின்
ஒட்டுமொத்த இருளையும்
போக்கவந்த சுடர் விளக்குகள்!
உங்களுக்கு நீதி கிடைக்கும்வரை
உங்கள் கனவு நனவாகும்வரை-அவை
அணையாமலேயே இருக்கும்!
ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் கரங்கள்
அரணாக இருந்து பாதுகாக்கும்!
ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை!
ஆணையிட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை!
மேற்கண்ட உரைவீச்சானது இன்று ஞாயிறு ஓசையில் (03-02-2008) பெயர் குறிப்பிடப்படாத தைப்பிங் நேயர் ஒருவரின் சிந்தனையில் உதித்த சுதந்திரத் தீக்கனல்கள், எழுத்துக்களாய் உதிர்ந்துள்ளன...
அவரின் உரைவீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளதால் அதனை இங்கு பிரசுரித்தேன்..
ஓலைச்சுவடியின் வாசகர்களும் தங்களுடைய சுதந்திரத் தாகங்களை இனிய மொழியாம் தமிழ் மொழியில் வார்த்தெடுத்து கவிதையாகவும் அல்லது உரைவீச்சாகவும் செப்பனிட்டு எனது மின்னஞ்சலுக்கு விதையை அனுப்புங்கள். அதனை வலைப்பதிவில் பயிரிட்டு நீர்ப்பாய்ச்சுகிறேன். தமிழ் மக்கள் அதன் ஆழமிகு கருத்துக்களை அறுவடை காணட்டும்...
சுதந்திரத் தீயை தமிழால் பரப்புவோம்..!!
உங்கள் சிந்தனையில் துளிர்விட்ட விதைகளை அனுப்பவேண்டிய வயல் முகவரி : sathisratha@gmail.com
தமிழில் தட்டச்சு செய்ய இந்த இணைய தளத்தைச் சுட்டுங்கள் : தமிழ் தட்டச்சு
ஆங்கிலத்தில் அனுப்பப்படும் தமிழ்க்கவிதைகள் மொழி மாற்றம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்படும்.
வாசகர்கள் தங்களின் படைப்புகளை அனுப்பும்பொழுது முழுப்பெயரையோ அல்லது புனைப்பெயரையோ பயன்படுத்தலாம்.
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment